24/07/2017

குமரிக்கண்டம் உண்மையா - 6..?


3 முக்கிய தலைப்புகளில் குமரிக்கண்டத் தொடர்பு பற்றி விவாதிப்போம்...

I. கடல்கோள் அ ஊழிவெள்ளம்.
II. கடலில் மூழ்கிப்போன நிலங்கள்.
III. தமிழுக்கும் மூழ்கிப்போன கண்டத்துக்குமுள்ள தொடர்புகள்.


கடல்கோள் அ ஊழிவெள்ளம் என்பது, ஏறக்குறைய தொல் நாகரீகங்கள் எல்லாமே சொல்லி இருக்கக்கூடிய, பரம்பரை பரம்பரையா மக்கள் மூலம் நினைவு கூறப்பட்ட பெரும் துன்பகரமான நிகழ்வு. உலகின்  பல நாடுகளில், இலக்கியங்களில் சொல்லப்படும் அந்தப்பேரழிவு எங்கெங்கே பதிவு செய்யப்பட்டது என்ற தேடலோடு தொடங்குவோம்.


I. கடல்கோள் அ ஊழிவெள்ளம்..

1. கிறித்தவ விவிலிய தொடக்க நூலில் கூறப்பட்டுள்ளதன்படி, ஏதேன் தோட்டத்தைவிட்டு மனிதன் வெளியேற்றப்பட்டு சில தலைமுறைகள் கடந்த பின்பு மனிதன் பாவ வழிகளில் வீழ்ந்து கடவுளை விட்டு தூரப்போனான். கடவுள் உலகை அழிக்க எண்ணி வெள்ளமொன்றை அனுப்ப எண்ணினார். நோவா நீதிமானாக இருந்தபடியால் அவரையும் அவர் குடும்பத்தையும் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முடிவு செய்தார். கடவுள் பேழையொன்றை செய்யச்சொல்லி அவர் குடும்பத்தையும்,  விலங்குகள் மற்றும் பறவைகளில் ஒரு சோடியையும் காப்பாற்றினார். நோவாவின் 600வது அகவையில், வெள்ள நிகழ்வு. (தொடக்கநூல்: 7 ஆம் அதிகாரம்)இதே கதைதான் கிட்டத்தட்ட குர்-ஆன் லும்


2. பபிலோனிய வரலாறில்  கில்காமேசு  (Gilgamesh) என்பவர் நிலைவாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம்  (Utnapishtim)  என்ற கடவுளை வழிபடும் போது கடவுள் உலகை ஒரு வெள்ளம் மூலமாக அழிக்க போவதாக அறிவித்து அதிலிருந்து அவரும் அவரது குடும்பமும்,அவரது மந்தைகளும் தப்புவதற்காக பெரிய கப்பல் ஒன்றை செய்யச் சொன்னார். வெள்ளத்தின் பின்னர் கடவுள் கில்காமேசுக்கு நிலையான வாழ்வை கொடுத்தார்.


3. சுமேரியரின் வரலற்றின் படி, சார்ரூபாக் நகர சியுசூத்ரா (Zisudra) அரசன், என்கி கடவுளால் எச்சரிக்கப்பட்டு,  பெரிய கப்பலைச் செய்யக் கட்டளையிடப்பட்டு காப்பாற்றப்படுகிறார்.


4. அக்காத் வரலாற்றில் என்லில் (Enlil) கடவுள் அத்ரசிசுவிவை காப்பாற்றுகிறார்.

5. எகிப்திய வரலாற்றில் காப்பாற்றப்பட்டவர் டோத் (Toth)


6. கிரேக்க வரலாற்றில் 3 கடல்கோள் பற்றிய குறிப்புகள்: ஓசிஜெஸ் (Ogyges), தேகாலியன் (Deucalion), டார்டனுஸ் (Dardanus).

7. ஆப்ரிக்க இனங்களில் Kwaya, Mbuti, Maasai, Mandin, மற்றும் Yoruba  இன மக்களிடம் கடல்கோள் பெருங்கதைகள் உண்டு.


8. சீனாவில் காப்பாற்றப்பட்டவர் டும் (Dum).

9. மெக்சிகோவில் (Aztec) காப்பாற்றப்பட்டவர்கள் கோக்ஸ் கோக்ஸ் (Coxcox) என்பவரும் அவரது மனைவியும்.


10. இந்தியாவில் சதபாத பிரமாணம்  (Shatapatha Brahmana) கி.மு. 300, மற்றும் மச்ச புராணம் (Matsya Purana) கி.பி. 250 களில் மனு என்பவர் வெள்ளம் பற்றி எச்சரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்கிறது. இந்த மனு என்பவர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கிறது. சத்யவிரதன் என்ற மன்னன் பெயரும் கூறப்படுகிறது. மேலும் இரண்டு பெயர்களும் குறிப்பது ஒரே நபரைத்தான் என்றும் தெரிவிக்கிறது.


“தமிழர் சரித்திரம்”(1940) என்னும் நூலில் மனு என்பவன் சத்தியவிரதன் என்னும் திராவிட வேந்தன் எனவும் பாண்டிய நாட்டை ஆண்ட ஒரு தமிழ் மன்னன் எனவும்.


கடல்கோளுக்கு முன்பு இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை வடமலை என்று புராணங்களிலும் இலக்கியங்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த வடமலையில் தான் மனுவின் பேழை இருந்ததென  சதபத பிராமணம் என்ற வடமொழிநூல் கூறுகிறது.


வடமலை எனக் குறிப்பிடப்படும் குற்றால பொதிகை மலையில் தான் மனு தவம் செய்தான். அப்போது வைகை ஆற்றில் இருந்து ஒரு தெய்வீகமீன் வடிவம் தோன்றியதாகவும் மச்சபுராணம் கூறுகிறது. வைகை ஆற்றின் கரையில் தான் மனு தவம் செய்தான் என அக்கினிபுராணம் கூறுகிறது.


மனுவானவன் பாலாற்றின் கரையில் தவம் செய்தான் என்று மகாபாரதத்தின் வனபர்வம் கூறுகிறது.


“மனு தமிழ் உலகத்தில் தோன்றியவராதலாலும், சூரிய குமாரனனான அம் மனு மலையாள மலையில் தவஞ்செய்தமையாலும், சத்திய விரதன் என்னும் அவர் கிருத மாலை என்னும் வையை ஆற்றில் பலியிட்டமையாலும்,   பாண்டிய அரசரின் இலட்சினையாக்கப்பட்ட தெய்வீக மீன், பாண்டியரின் தலைநகராக வந்த மதுரையிலே தமிழ் சாதியனரின் முன்னோராகிய மனுவின் முன் தோன்றினமையாலும், மனுவும் அவர் வழி வந்தோரும் தமிழரேயாவர்.”


இப்படி ஏறக்குறைய 500 தொன்மங்கள், பாரம்பரியக் கதைகள் உலகெங்கும் உள்ள தொல் நாகரிக நினைவு கூறல்கள் உள்ளதாக புவிபரிணாமவியலாளர் ராபர்ட் சூக் (Robert Schoch) கூறுகிறார்.  

தொடர்ந்து தேடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.