24/07/2017

தக்காளி, கத்திரிக்காய், இப்போது கடுகு... மரபணு மாற்றம் நமக்குத் தரப்போவது என்ன?


ஏற்கெனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியால் பருத்தி விவசாயம் கேள்விக்குறியானது. மரபணு கத்திரிக்காய் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை நமக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தது. அந்த வரிசையில் புதிதாக முளைத்திருக்கிறது மரபணு கடுகு..!

`கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.’ இது, கடுகில் உள்ள காரத்தன்மைக்காக சொல்லப்பட்ட பழமொழி அல்ல. கடுகில் உள்ள மருத்துவக் குணங்களைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு இதில் மருத்துவ குணங்கள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இதில் நார்ச்சத்து அதிகம். இது, கெட்ட கொழுப்புகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. செரிமான சக்தியை மேம்படுத்தும் சக்தி கொண்டது... இப்படி கடுகு தரும் ஆரோக்கியப் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடுகில் சினிகிரின் (Sinigrin), மைரோசின் (Myrosin), ஈகோசெனோக் (Eicosenoic), ஓலீக் (Oleic) , பால்மிடிக் (Palmitic) போன்ற மனித உடலுக்குத் தேவையான அமிலங்கள் நிறைந்துள்ளன. தாது உப்புக்களான கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் ஆகியவையும் உள்ளன. மேலும் இதில் பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ஃபோலேட்ஸ், நியாசின், தயாமின், ரிபோஃபிளேவின், பைரிடாக்ஸின், பான்டோ தெனிக் ஆகியவையும் உள்ளன.

தென்னிந்தியக் குடும்பங்களின் உணவுகளில் கடுகு தவிர்க்க முடியாத ஒன்று. இது நேரடியாகவும், கடுகு எண்ணெயாகவும் சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது இயற்கையாக விளையும் நாட்டு கடுகுக்குப் பதிலாக, செயற்கையான முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விற்பனைக்கு வர இருக்கிறது.

மரபணு மாற்றம் என்றால் என்ன ?

ஒரு விதையின் அடிப்படை பண்புகள் எதையும் மாற்றாமல், அதனுடைய மூலக்கூறுகளில் தங்களுக்குத் தேவையான சில மாற்றங்களைச் செய்து, அதனுடைய வீரியத்தை அதிகரிக்கச் செய்வதே மரபணு மாற்றம்.

உதாரணமாக, தக்காளியில் எப்படி மரபணு மாற்றம் செய்யப்படுகிறது என்பதைப் பார்ப்போம். கடுங்குளிரில் தக்காளிகள் சீக்கிரம் அழுகிவிடும். அவற்றால் குளிரைத் தாங்க முடியவில்லை என்றால், ஆர்டிக் குளிரைத் தாங்கக்கூடிய ஒரு மீனின் மரபணுவை எடுத்து தக்காளிக்குள் வைத்தால், தக்காளி கெட்டுப் போகாமல் பல நாள்கள் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். இதன் பின்னால் இருப்பது வணிக நோக்கம் மட்டுமே அன்றி வேறொன்றும் இல்லை. நாட்டுத் தக்காளிக்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளிக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. நம்மால் கண்டுபிடிக்கவும் முடியாது. ஆனால், அதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்..

``மரபணு மாற்றம் என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்?’’ என்று மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்...

"நம் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் மரபணுக்களை இது பாதிக்கும் என்கிற அச்சம் உலக அளவில் உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை உண்ணும்போது, நோய்களை எதிர்க்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது என்ற கருத்தும் இருக்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் வேதிப்பொருள்களிலும் மாற்றம் செய்யப்படும். இந்த வேதிப்பொருள்கள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்த கடுகு மற்ற உணவுப்பொருளுடன் இணையும்போது என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும் என்பதும் ஆய்வுசெய்யப்படவில்லை. அதாவது, நம் காய்கறிகளுடன், வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் கடுகு கலக்கும்போது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்படவில்லை.

நாட்டு கடுகில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் என்ன மருத்துவக் குணங்கள் உள்ளன என்பதும் தெரியப்படுத்தப்படவில்லை. இதை தெளிவுபடுத்தப்படவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

நாட்டு கடுகுடன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு கலக்கும்போது நாடு முழுவதும் மரபணு மாற்றப்பட்ட கடுகுகளே அதிகமாக இருக்கும். புதிய நோய்களை உருவாக்கும் என்று அச்சப்படக்கூடிய ஒரு பொருளை, மிக வேகமாக விற்பனைக்கு கொண்டுவர முயற்சிப்பது தவறான ஒரு செயல்.

இதை அனுமதித்தால், அடுத்தடுத்து ஒவ்வொரு பயிராக மரபணு மாற்றத்துக்கு அனுமதிக்கப்படும். இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் உரிமைகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து, அவர்களிடம் இருந்து பெறவைப்பதற்கான முயற்சிதான் இது. இதன் பின்னால் மிகப்பெரிய வணிகம்தான் இருக்கிறது. மக்களின் நலனையும் ஜனநாயகத்தையும் பொருட்படுத்தாத ஒரு செயல் இது’’ என்கிறார் மருத்துவர் சிவராமன்.

நாட்டு கடுகுப் பயணம்:

இந்த நிலையில் 'கடுகுப் பயணம்' என்னும் பெயரில் 1,000 கிலோ நாட்டுக் கடுகு விதைகளுடன், தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ள சூழலியல் செயற்பாட்டாளர் ம.செந்தமிழனிடம் இது பற்றிப் பேசினோம்... ``மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் தீமைகளைப் பற்றி நாம் எந்த ஆய்வுகளை முன்வைத்தாலும் ஆளும் தரப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனால், அந்த மாதிரியான முயற்சிகளை கைவிட்டுவிட்டு நம் தற்சார்பை பெருக்குவதற்கான முயற்சியை கையிலெடுத்திருக்கிறோம்.

நம் நாட்டுக் கடுகு விதைகளை அதிகமாக இழந்துவிட்டோம். முன்பெல்லாம் வீடுகளிலேயே கடுகுகள் பயிரிடப்பட்டன. அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மானாவாரியாக ஊடுபயிராக கடுகு பயிரிடப்பட்டது. ஆனால், விவசாயிகள் எப்போது ஒரு பயிர்சாகுபடிக்குச் சென்றார்களோ அப்போதே கடுகு போன்ற ஊடுபயிர்கள் பயிரிடப்படுவதை கைவிட்டுவிட்டனர். இதனால் கடுகு கடையில் வாங்கக்கூடியாக ஒரு பொருளாக மாறிவிட்டது.

எனவே, மீண்டும் ஊடுபயிர் சாகுபடியை நடைமுறைப்படுத்தவேண்டும். இதற்காகவே, தமிழகம் முழுவதும் இயற்கை விவசாய ஆர்வலர்களைச் சந்தித்து, நாட்டு கடுகு விதைகளை அவர்களுக்கு கொடுத்து, பயிர்செய்யச் சொல்லப்போகிறோம். இதன் மூலம் நாட்டுக் கடுகின் உற்பத்தியைப் பெருக்கலாம்.

விதை என்பது, நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடையது, உழவர்களுடன் தொடர்புடையது. இவை, தனியார் கம்பெனிகளின் கைகளுக்குச் செல்லாமல் காக்கப்பட வேண்டும் . மரபணு மாற்றப்பட்ட கடுகு நம் இல்லங்களுக்கு வருவதற்கு முன்னர் நாட்டுக் கடுகு விதைகளை நம் நிலங்களில் பெருக்க வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கம்’’ உறுதியான குரலில் சொல்கிறார் செந்தமிழன்.

உணவுப்பொருள்களில் கலப்படம் ஏற்படாமல் தடுக்கவேண்டியது நம்மை ஆளும் அரசின் கடமை. அது சாத்தியம் இல்லாத சூழலில், மாடித் தோட்டங்கள் மூலமாக நமக்குத் தேவையானவற்றை நாமே பயிரிட்டுக்கொள்வதும் நம்மால் முடியும். அதுவும் முடியவில்லையா..? விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று நமக்குத் தேவையான பொருள்களை வாங்கிப் பயன்படுத்தலாம். அதுதான் நம் ஆரோக்கியம் காக்கும்.

நன்றி

இரா.செந்தில் குமார் விகடன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.