24/07/2017

மரபணு மாற்றுப் பருத்தி : அனுமதி அளித்தவரே வருத்தம்...


மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகம் செய்ததற்காக வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகம் செய்யப்பட்டது. கடும் எதிர்ப்பையும் மீறி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பல விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். இதையடுத்து பல விவசாயிகள் தற்கொலை செய்து உயிரையும் இழந்தனர்.

அதுகுறித்து டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். நூல் அறிமுக விழா ஒன்றில் பங்கேற்று அவர் பேசும்போது, "1990களில் நான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகம் செய்தேன். தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அதற்காக வருந்துகிறேன். ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்கு நான் பொறுப்பேற்கிறேன். பெரும்பாலான ஐரோப்பிய, ஜப்பான் போன்ற நாடுகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில்லை" என்றார்.

டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் 1961ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். தற்போது இந்திய மரபணு பொறியியல் மதிப்பீட்டு ஆய்வுக் கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், சுப்ரமணியனின் பேச்சு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில், அதற்கு அனுமதி கொடுத்தவரே விவசாயிகளின் மரணத்திற்குப் பொறுப்பேற்று வருத்தம் கூறியிருப்பதை தற்போதைய மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

http://www.newindianexpress.com/business/2017/jul/21/ex-cabinet-secretary-subramanian-regrets-introducing-gm-cotton-in-india-1631816.html

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.