24/07/2017

சசிகுமார் கொலையும் - கோவை கலவரமும்...


கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோவைக் காவல்துறையின் ஆசியுடன் இந்து முன்னணி நடத்திய கலவரத்தை பலரும் பொதுவில் அறிந்திருப்போம்.

தமது தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூக ஆதாயங்களுக்காக இந்து முன்னணி என்ற மதவெறி பொறுக்கி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்த கலவரம். சசிக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் வசூல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடிய ஒரு ரவுடி. அதே போல விநாயகர் சிலைகள் வைப்பது அதற்கான மிரட்டல் வசூல்களை ஒழுங்குபடுத்துவது என்பது போன்ற ‘தொழில்களை’யும் செய்து வந்தவர். சசிக்குமார் அவருடைய வீட்டினருகே கொல்லப்பட்ட பின்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனே அங்கே இந்துமதவெறிக் கும்பல் அணிதிரட்டப்படுகிறது.

முதலில் சசிகுமார் மரணத்தை உறுதி செய்த மருத்துவமனை மீது கல் வீசி தாக்குகிறார்கள். பின்னர் பிணம் அரசு மருத்துவமனை உடற் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்து முன்னணியின் பொதுச்செயலாளரான காடேஸ்வரா சுப்பிரமணியன் எனும் நபர் செப்டம்பர் 23 தமிழகம் தழுவிய பந்த் என அறிவிக்கிறார். கொலைகாரர்களை காவல்துறை கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் என தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். அங்கேயே நூற்றுக்கணக்கானோர் திரள்கின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து திரட்டப்பட்டு குவிக்கப்படுகின்றனர். கொன்றது முஸ்லீம்கள் தான் என்ற தகவல் எந்த ஆதாரமுமின்றி பரப்பப்படுகிறது. அந்த வதந்தியை வைத்து கும்பல் சேர்க்கப் படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மதப்பதட்டம் உருவாவதற்கான அனைத்து சூழல்களும் இருக்கையில் உடற்கூறாய்வை உடனடியாக முடித்து சவத்தை உடனே அடக்கம் செய்ய வைக்க வேண்டியதுதான் காவல்துறை செய்ய வேண்டிய நடவடிக்கை. ஆனால், மறுநாள் காலை அணிதிரட்டல் முழுமையாக நடக்கும்வரை செயற்கையாக பந்த்தை அமலாக்கும் வரை உடற்கூறாய்வை தாமதப்படுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறை எப்படி துவக்கம் முதல் இறுதி வரை கலவரத்தை திட்டமிட்டபடி திறம்பட நடத்த தமது நடவடிக்கைகள் மூலம் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதற்கு இது முதல் உதாரணம்.
மறுநாள் காலை வழக்கம் போல கடைகளை திறந்தவர்களிடம் வண்டிகளில் கும்பல் கும்பலாக பகுதிகளுக்கு சென்று இன்று பந்த் திறக்கக் கூடாது என மிரட்டியிருக்கிறார்கள். மீறி பேசியவர்களின் கடைகளை உடைத்திருக்கிறார்கள். ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களை நடு ரோட்டில் நிறுத்தி கண்ணாடியை உடைத்து செயற்கையான பதட்டத்தை அந்த பகுதியில் உருவாக்கி கடையடைப்பை சுமத்தியிருக்கிறார்கள். இவ்வன்முறை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மூன்று மாவட்டங்களிலும், அதிலும் குறிப்பாக கோவையிலும் திருப்பூரிலும் முழு வீச்சில் அமலாகியிருக்கிறது.

திருப்பூரில் கல் வீச்சால் பதறி இறங்கிய ஒரு பெண்மணியின் மீது பேருந்து சக்கரம் ஏறி கால் முறிந்து பின்னர் மரணமடைந்திருக்கிறார். ஏராளமான அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். ஆக, முந்தைய நாள் முன்னிரவில் நடந்த சம்பவம் அறியாமல் தனது இயல்பு வாழ்க்கையை துவங்கிய இரு மாவட்டங்களையும் காலை 9 மணிக்குள் முடக்கி முற்பகல் திட்டத்தை முடித்துவிட்டு அனைவரும் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்கள். இந்த முற்பகல் திட்டத்தின் மொத்தக் காட்சியிலும் போலீசு ஒரே ஒரு சீனில் கூட வராதது தற்செயல் அல்ல. ஒரு இடத்தில் கூட வந்து பந்த்தை தடுக்கும் நடவடிக்கையில் போலீசு ஈடுபடவில்லை.

மதிய வாக்கில் உடற்கூறாய்வு முடிவடையும் போதே கிட்டத்தட்ட கோவையின் பிரதான பகுதிகள் துவங்கி மொத்த மாவட்டத்தின் இயக்கமும் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அப்போது வரை காவல்துறை வைத்திருக்கும் எந்த சிறப்புப் படையும் மருத்துவமனைக்கு வரவில்லை. கொடி அணிவகுப்பு போன்ற முன்னேற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. “இன்னும் எதுவும் நடக்கவில்லையே” என காவல்துறை காத்திருந்தது போலவே அப்பட்டமாக தெரிந்தது.

முந்தைய அனுபவங்களிலிருந்து இன்று என்ன நடத்த முனைகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.
பிணத்தை ஊர்வலமாக கொண்டு போகப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததும், அதற்கு 18 கிலோமீட்டர் சுற்றி துடியலூர் மின் மயானம் செல்ல காவல்துறை அனுமதி கொடுத்ததும் இவர்களது எண்ணத்தை தெளிவாகவே காட்டியது. பிணம் பிணவறையை விட்டு வெளியே வரும் முன்னரே காவிக் கும்பல் அருகிலிருக்கும் இஸ்லாமியர் பகுதியான கோட்டைமேட்டுக்கு சென்று கடைகளை அடைக்க சொல்லி மிரட்ட அவர்கள் மறுக்க பதட்டம் கூடிய நிலையிலும் அங்கேயே நின்று கொண்டிருந்த காவல்துறை இந்து முன்னணி கும்பலைத் தடுக்கக் கூட முனையவில்லை. 1997-ல், இதே கோவையில் இதே உக்கடத்தில் அருந்ததிய இந்துக்களும் இஸ்லாமியர்களும் மோதிக்கொண்டிருக்கும் போதும் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வரலாறு.

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியின் வழியாகவே பிணத்தை கொண்டு செல்லவும் அனுமதித்திருக்கிறார்கள். கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட சுமார் 1500 பேருடன் பிணத்தை முன்னெடுத்துக் கொண்டு பைக் பேரணியாக கிளம்பினார்கள். காவிகளுக்கு வந்த வழிகாட்டுதல், “முடிந்த வரை தாமதப்படுத்தி கொண்டு போக வேண்டும்; போகும் வழியில் எந்த கடை திறந்திருந்தாலும் அடிக்க வேண்டும்; பள்ளி வாசல் மீதும் சர்ச் மீதும் கண்டிப்பாக தாக்குதல் நடத்த வேண்டும்; அங்கு முன்னால் நிற்கும் ஆட்களை அடித்தாலும் தப்பில்லை; இஸ்லாமியர் கடைகளை கண்டிப்பாக அடிக்க வேண்டும்; இறுதி இலக்கான துடியலூரை துவம்சம் செய்ய வேண்டும்” என்பதே. இது ஒரு காவியின் வாக்குமூலம். இதை காவல் துறையின் ஆதரவோடு செய்யப்போகிறோம் என்பது அவர்களுக்குள் கூடுதலாக ஒரு துளி உற்சாகம் தந்திருக்கும். அதுவும் கமிஷனர் முன்னாலேயே என்பது இன்னும் போதை ஏற்றும் விசயமல்லவா…! “போலீஸ்காரன் பக்கத்துல கெடந்த கல்லையே தூக்கி அடிச்சன்டா.. அவன் ஒண்ணுமே சொல்லல டா…..!” இதுவும் ஒரு காவி சொன்னதே.

துடியலூர் வரும் வரை நூற்றுக்கணக்கான கடைகளை, ஏராளமான இஸ்லாமிய அடையாளங்கள் தொனித்த வாகனங்களை அடித்து நொறுக்கி குப்புற கவிழ்த்துப் போட்டு, கண்ணில் பட்ட பள்ளி வாசல்கள் அனைத்தின் மீதும் கல் எறிந்தபடியே வந்த காவிக் கும்பல், துடியலூரில் கிட்டத்தட்ட 20 கடைகளை சூறையாடி 6 கடைகளுக்கு தீ வைத்தனர். ஒரு காவலரின் மண்டையை பிளந்த பின்னர் தான் காவல்துறை இங்கு தடியடிப் பிரயோகம் செய்து துரத்த, பதிலுக்கு துடியலூர் காவல்துறை ஆய்வாளரின் ஜீப்பை நடு ரோட்டில் போட்டு எரித்தனர்.

ஒரு முழு நாளையும் திட்டமிட்டு பயன்படுத்தி காவல்துறையின் சீரிய பங்களிப்போடு ஒரு கலவரத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்தப் பிணம் அரசு மருத்துவமனையில் இருக்கையிலேயே இந்த இந்து முன்னணி கும்பலை பற்றி ஓரளவு அறிந்த கோவை மக்கள் பலர் காலையிலேயே கலவர நெடியை உணர்ந்து விட்டார்கள்.

அறிவிப்பில்லாமல் கலவரங்கள் அமலுக்கு வருவதில்லை. ஆனால், காவல்துறை இதை அணுகிய விதம் என்பது மிக மிக ஆபத்தான போக்கிற்கான அறிகுறி. கொலை, கொள்ளையில் அப்பட்டமாக ஈடுபடும் இந்த காவல்துறைதான் இதே கொள்ளை கலவர கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்றால் இங்கு சொல்லிக் கொள்ளும் ஜனநாயகம் நரகலை விட அசிங்கமாக நாறுகிறது என்று பொருள்.

கலவரம் முடிந்து இந்து முன்னணி, திருப்பூரில் இரண்டு நாட்கள் செயற்குழு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு போலீஸ் கைது பண்ணிக்கொண்டிருக்கிறது.

கோவையில் நூறு வார்டில் கவுன்சிலர் கேண்டிடேட்டாக நிற்கவிருந்தவர்கள் எத்தனை பேர் கைதாகியிருக்கிறார்கள் என்றால் மிகக் குறைவு. மொத்தத்தில் அணிகளை தன்னுடைய வழக்கமான சூழ்ச்சியினால் சிக்க வைத்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்துமத வெறியர்கள்.

தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்றுவேன் என்று பகிரங்கமா பேட்டி கொடுத்து தூண்டி விட்டு கடைகளை பள்ளிவாசலை உடைக்க சொன்னவன் அங்கே செயற்குழு கூட்டத்தில் பகிரங்கமாக ‘எழுச்சியுரை’ ஆற்றிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே போலீசும், ஐ.பி.எஸ்சும், ஏட்டையாக்களும் மிக்சர், காபியுடன் சகஜமாக இருக்கின்றனர். இதற்கு முந்தைய கலவரங்களில் எந்த இந்து கைதானானோ அதே காலாட்படை இந்துக்கள் மட்டும்தான், செல்போன் திருடுனவன் பிரியாணி திருடுனவன என்று கைது செய்யப்படுகிறார்கள்.

ஊடகங்களும் இதை பெரிய செய்தியா 400 பேர் கைது என்று போடுகிறார்கள். ஆனால் முக்கியமான ரவுடிப்பட்டாளங்கள், தளபதிகள் ஒருவர் கூட காவல் துறையால் கைது செய்யப்படவில்லை.தந்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் போலிசின் அணுகுமுறையை அம்பலப்படுத்தாமல் ஆதரித்தே செய்திகளை வெளியிட்டன.
அச்சு ஊடகங்களும் இந்து முன்னணி களத்தில் செய்த வன்முறையை மென்மையாக எழுத்தில் மாற்ற கடும் பிரயத்தனப்பட்டனர். துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்திருக்கிறது துடியலூரில் அது மறைக்கப்பட்டிருக்கிறது.

பெரியநாயக்கன்பாளையம் சித்ராக்கா என்ற பெண்மணி அடுத்த கவுன்சிலர் ஆகி ஓட்டுப் பொறுக்கும் ஆசையோடு பி.ஜே.பி-யில் வலம் வரும் ஒருவர். இவர் தலைமையில் நடந்த அட்டூழியங்கள் பலவும் மறைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியர் ஒருவரின் செல்போன் கடையில் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் சிக்கி வெளிவந்து இந்து முன்னணியின் நாற்றம் வாட்ஸ்-அப்பில் மணக்கிறது. இதை இந்து முன்னணி போர்வையில் சமூக விரோத கும்பல் என தலைப்பிட்டு நியாயப்படுத்துகிறது தமிழ் இந்து. இந்து முன்னணியே சமூக விரோத கும்பல் தானே?

மாநில அரசின் பங்களிப்பு, கண்ணசைவு இல்லாமல் ஒரு மாநகராட்சியை, தொழில் நகரை இப்படி முடக்க முடியாது. காவி கொள்ளிக் கட்டைகள் திருப்பூரில் அடுத்த அடிக்கு ஆயத்தமாகிறார்கள். திட்டமிட்டு கலவரத்தை தூண்டி, இஸ்லாமியர்களை எதிர்நிலைக்குத் தள்ளி, அவர்களையும் அமைப்பாக – இந்து எதிர் அமைப்பாக மாற வேண்டிய சூழலை, மதப்பதட்ட சூழலை – கலவர நிலையை உருவாக்கும் இந்து முன்னணி, அதற்கு துணை நிற்கும் காவல் துறை இரண்டும் தான் முதன்மை குற்றவாளிகள்,

இக்கலவரத்தில். கைதான 378 வீர இந்துக்களில் எத்தனை பேர் பார்ப்பன இந்து? எத்தனை பேர் கவுண்ட இந்து? எத்தனை பேர் அருந்ததிய, இதர தாழ்த்தப்பட்ட இந்து? – எனக் கணக்கிட்டால் இந்த கும்பலின் உண்மை முகம் தெரியும்.

1997 கலவரத்தில் கெம்பட்டி காலனி குனியமுத்தூர் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அருந்ததிய சமூகத்தை சேர்ந்த கணிசமான மக்களை காலாட்படையாக பயன்படுத்தி கலவரத்தை நடத்தினர். இம்முறை கொஞ்சம் நகர்ந்து சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் என்று வந்து விட்டார்கள். ஆனால், எங்கு வந்தாலும் கேஸ் வாங்க ஒரு சாதி அதற்கு வெறியேத்த ஒரு சாதி திட்டம் போட்டு இயக்குவது ஒரு சாதி. இப்படி இது சாதியை பாதுகாக்கும் சாதி முன்னணி! பார்ப்பன – ‘மேல்’ சாதி இந்துக்கள் இயக்கங்களின் தலைமையில் வழிநடத்த, பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச் சாதி இந்துக்கள் வட்டார அளவில் தலைமை வகிக்க – அணிதிரட்ட, பிற்பட்டுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் களத்தில் தாக்குதலை நடத்துகிறார்கள். ஆக பார்ப்பனியத்தின் வருண தருமம் கோவை ஆர்.எஸ்.எஸ் கலவரத்திலும் அச்சு அசலாக அப்படியே செயல்படுகிறது.

இந்த தாக்குதலில் விநாயகர் ஊர்வலத்திற்கு காசு கொடுத்த இந்து வியாபாரிகளும் கூட தாக்கப்பட்டிருக்கிறார்கள். இனி கோவை வர்த்தகர்கள் அனைவரும் இந்த சூறையாடலுக்கு பயந்து மாமுல் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.

இது ஒரு துவக்கம் தான். வளர்ச்சி கோஷமிட்டு ஆட்சியை பிடித்த மோடி கும்பலின் சுயரூபம் இதுதான். குஜராத் மாடல் என்பது இதுதான். குஜராத்தில் இன்னும் பா.ஜ.க கும்பல் செல்வாக்கு செலுத்தும் பகுதிகளில் நடைபெறுவதும் இதுதான். இந்த அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய பார்ப்பனிய கும்பல் நம் தமிழகத்தை நெருங்கி வந்துவிட்டது. கோவையின் தலைக்கு மேல் எந்நேரமும் மதவெறிக்கத்தி தொங்கி கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

கருத்துத் தளத்திலும் நடைமுறைக் களத்திலும் பார்ப்பனி இந்துமதவெறி பாசிசத்தை முறியடிக்க வேண்டியது நம் கடமை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.