03/07/2017

கதிராமங்கலம்...


பதற்றம் , மரண பீதி , மயான அமைதி , காவல்துறை அராஜகம், கழுத்தறுப்பு வேலைகள், ஆள்காட்டி வேலைகள், அடாவடி , அடிதடி , அடக்குமுறை - இப்படி பல்வேறு வடிவங்களில் அரச பயங்கரவாதத்தை ஒட்டு மொத்தமாய் அரங்கேற்றி அதை பரிசோதனை செய்து வெற்றி கண்டிருக்கிறது பாசிச மத்திய மாநில அரசுகள் .

ஊருக்குள் நுழையுமுன்பே 5 கிமீ அருகில் கஞ்சனூரில் தோழர் மனோகரன் அவர்களை  சந்தித்துவிட்டு கதிராமங்கலம் ஊருக்கு வெளியே உள்ள சிலரிடம் தகவல்களை சேகரித்துக்கொண்டு யாருக்கும் அய்யம் ஏற்படாத படிக்கு ஒரு மஞ்சள் பையுடன் உள்ளே ஐ பேட் வைத்து கொண்டு ஊருக்குள் நுழைந்தோம்.

எங்கு பார்த்தாலும் காவல்துறை வாகனங்கள் ஊரை சுற்றியும் எல்லா வீதிகளிலும் .. அதை தவிர சீருடை இல்லாத காவலர்கள் உளவு பார்த்த வண்ணம் திரிந்தனர்.

உள்ளே போன போது மதியம் 3 மணி இருக்கும் . மயான அமைதியில் கிராமம் ..ஆட்களை யாரும் வெளியில் காணவில்லை .. 4 மணிக்குப்பிறகே ஒரு சிலராக வெளி வந்தனர் . பெண்களும் ஆண்களுமாய் வந்தனர் . தண்ணீர் கேட்பதுபோல் பேச்சு கொடுத்தோம் மஞ்சப்பையுடன் நின்றதால் போலிசார் யாரும் சந்தேகிக்கவில்லை .இளைஞர்கள் பயந்தவாறே பேச தொடங்கினர்.

மின்சாரம் முற்றிலும் துண்டிக்கபட்டுள்ளது தொலைக்காட்சி கேபிள் சர்வீசுகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

உங்களபாத்தாலும் பயமாவே இருக்கு நிங்க போலிஸ் ஆள்போல தெரிகிறதே , பத்திரிகையாளரா ? எந்த சேனல் என்று துளைத்தவாறே கேள்விகேட்டு பிறகு எங்கள் விளக்கங்களை நம்பி பதிலளித்தனர். எல்லா தகவல்களையும் சேகரிச்சுகிறாங்க ஆனா ஒரு சேனல்காரன் கூட உண்மைய சொல்லமாட்டிறான் அய்யோக்கியப்பயல்கள்  என்று ஊடகங்களை காறி துப்பினார் ஒரு இளைஞர்.

இன்று அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராக இருந்த இளைஞர்களை பயமுறுத்தி பல கேஸ் போட்டு ஒழிச்சிடுவோம் உன் எதிர்காலமே பாழாயிடும் என மிரட்டியுள்ளனர் .ஒரு தெருவுக்குள் ஆட்கள் சேர்ந்தாலே வேனில் ஏற்ற தயாராய் நின்றது ஒவ்வொரு தெருவிலும் காவல் வாகனங்கள் .
 நான்கு பேர் சேர்ந்து வந்தால் 144 சட்டத்தை சொல்லி பெண்களை மிரட்டுவது , ஆண்களையும் இளஞர்களையும் கைது செய்து வேனில் ஏற்றுவது என காவல்துறையின் அராஜகம் தொடர்ந்தது.

சில இளைஞர்களிடத்தில் பேச்சுக்கொடுத்ததில் நீண்ட சந்தேகத்திற்கு பிறகே வாய்திறக்க ஆரம்பித்தனர்
நேற்று காலை முதலே எண்ணெய் கசிவு ஏற்பட்டதை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்துவிட்ட பிறகே இதை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் திரள ஆரம்பித்தனர். எண்ணெயை உறிஞ்ச வந்த வாகனக்கள் தடுக்கப்பட்டன . ஆட்சியர் மதுரை போய் உள்ளதாகவும் நாளை வருவார் எனவும் மக்களுக்கு தகவல் தரப்பட்டது . ஆனால் நேற்று மாலை கலவரம் நடந்த பின் வந்து சேர்ந்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் .மக்களை விரட்டிவிட்டு யாரையும் சந்திக்காமலேயே திரும்பியிருக்கிறார்.

முன்னதாக காவல் துறையினர் பொது மக்களை பொறுமையாகவே கையாண்டிருக்கிறார்கள் தாங்கள் மக்களுக்கு பாதுகாப்பளிக்கவே வந்திருப்பதாக சொல்லி அதை நம்பி மக்கள் அளித்த உணவையே உண்டிருக்கிறார்கள். நம்பிக்கை துரோகிகள் .. மாலைவரை மாவட்ட ஆட்சியர் வராமல் அடைப்பை சரி செய்ய அனுமதிக்காத மக்கள் மீது திட்டமிட்டே கொலைவெறித்தாக்குதல்களை தொடுத்திருக்கிறார்கள் நன்றி கெட்ட காவல்துறையினர் . ஒரு கட்டத்துக்குமேல் மேலிட உத்தரவை பெற்றுக்கொண்டு அதை காவல்துறையினர் பற்றவைத்து விட்டு கலவரத்தை உண்டாக்கி அடக்குமுறையை ஏவி உள்ளனர். தீப்பெட்டி இல்லாமலே தீயை பற்றவைத்துள்ளது காவல் துறை.

ஒரு மூதாட்டிக்கு கால் மூட்டு உடைந்துள்ளது,குழந்தைகளுடன் வந்த தாய்மார்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். "எவ்ளொ திமிரும் தெனாவெட்டும் இருந்தா பொம்பளைங்கல்லாம் போராட வருவாங்க " என போலிசார் பெண்களை கடுமையாக தாக்கியுள்ளார்கள் . ஒரு குழந்தைக்கு நெற்றியிலும் கண்களின் அருகேயும் கடும் காயங்கள் .  குழந்தைகள் எனவும் பாராமல் ஒன்றரை வயது குழந்தை தாக்கப்பட்டு இப்போது கும்பகோணத்தில் ஐ சி யூ வில் . சில இளைஞர்களை தாறுமாறாக அடித்து துன்புறுத்தியுள்ளனர் , காவல்துறையினரின் சதிபற்றி ஒன்றுமறியாத இளைஞர்கள் அந்த கசிவு ஏற்பட்ட நிலங்களில் காவலுக்கு நின்றிருக்க காவல்துறை ஆயுதங்களோடு தாக்கி விரட்டியடித்தபோதும் பெண்கள் அசராமல் எதிர்த்து நின்றதாலேயே ஆண்களும் காப்பாற்றப்பட்டனர் பெண்கள் இல்லையெனில் இன்னும் தாக்குதல் மூர்க்கத்தனமாய் இருந்திருக்கும்.

கலவரம் முடிந்த பின் 6 பெண்கள் உட்பட ஊராரை கைது செய்து இரவு 10.30 வரை காவல் நிலையத்தில் அடைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

கலவரக்காட்சிகளை பதிவு செய்த சில ஊடக நண்பர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் , சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகத்துக்கே நெல் குவித்து படியளந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியான கதிராமங்கலத்தின் இன்றைய நிலை ஒரு வாய் நீருக்கு வழியில்லை என்னும் பரிதாபமே . ஒரு வருடம் தொடர்ந்து மழை பெய்யாவிடினும் முப்போகம் விளையும் வளம் கொண்ட மண் கதிராமங்கலம்.

என்னிடத்திலே நேரிடையாக கைப்பம்பை அடித்தே காண்பித்தார்கள் .இதுவரை பஞ்சம் என்பதே வந்ததில்லை .இங்கே பாருங்கள் இந்த ஓ என் ஜி சி பிளாண்ட் தொடங்கிய இரண்டு மாதங்களாக தண்ணீரே வரவில்லை   என்றார் அந்த 60 வயது முதியவர் . எப்போதுமே 20 அடியிலிருந்து 30 அடிக்குள் தண்ணீர் தாராளமாக வரும் இப்போது 60 அடி போனால்தான் நீரே கிடைக்கும் அந்த நீரும் காவி நிறத்தில் தான் வருகிறது என்கிறார் . "அவ்ளோதாங்க கதிராமங்கலம் மொத்தமா போச்சு " என்ற அவரின் புலம்பல் மனதை என்னவோ செய்தது.

ஏற்கனவே குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்து இருவர் பாதிக்கப்பட்ட உண்மையை ஊடகங்களும் அரசும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மறைமுகமாய் இழப்பீடு தொகை அளித்து அவர்களை வாயடைக்க செய்துள்ளனர்.

கசிவு என்றுதான் கூறினார்கள் ஆனால் அங்கே துருப்பிடித்த குழாய்கள் வெப்பம் தாளாமல் உடைந்திருந்தன. இரண்டு சொட்டு எண்ணெயை எடுத்து கொளுத்திப் பார்த்ததில், பத்து நிமிடம் பற்றி எரிந்தது . ஆக அங்கே நிலத்தில் குளம்போல் நிறைந்திருந்த எண்ணெய் எரிந்தால் என்ன ஆவது என நினைக்கவே நடுங்குகிறது

இன்று அவர்களும் உண்மையை கூறிவிட்டதில் ஓ என் ஜி  சி அம்பலப்பட்டுபோனது .மொத்தம் 8 கிணறுகளை தோண்ட திட்டமிட்டுள்ள ஓ என் ஜி சி நிறுவனத்தின் உண்மை ரகசியம் வெளிப்பட்டதில் ஆத்திரமடைந்த மக்களை தாக்க இரண்டு மாதம் முன்பு லட்சக்கணக்கில் போலிசாரை கண்டு அஞ்சியது மக்கள் கூட்டம் என்பது உண்மையே.

கைது செய்யப்பட்டுள்ள கதிராமங்கலம் போராளிகளான..பேராசிரியர் செயராமன் , தர்மராஜன், க.விடுதலைச் சுடர், செந்தில்.முருகன், சாமிநாதன், ரமேஷ், சிலம்பரசன், சந்தோஸ்.. ஆகியோர் மீது பத்து பிரிவுகளின் கீழ்கொலை முயற்சி ,பொது அமைதியை கெடுத்தல் , பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்..
என்பன போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளது காவல்துறை..
147-148-294(B)-314-323-324-336-383-436(3)-506(2) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து திருச்சி நடுவண் சிறைக்கு அனுப்புகிறார்கள்.. நேற்று இரவு முதல்காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்தும் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரியும் கைதான போராளிகள் உண்ணாநிலையை மேற்கொண்டு வருகின்றார்கள்..

ஒட்டும்மொத்த தமிழகமும் மத்திய அரசை  நோக்கி திரளாவிடில் ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாகும் நாள் வெகு அருகில் அதன் முதல் எடுத்து காட்டு கதிராமங்கலம்.

இறுதியாய் ஓட்டு அரசியல் கட்சிகள் வந்தால் செருப்படி தருவது உறுதி என்றார்கள் பொதுமக்கள் அணைக்கரை திருப்பனந்தாள் தாண்டி கதிராமங்கலம் அடைந்து பின் சென்ற வழியே திரும்பாமல் பந்தநல்லூர் வழியே அணைக்கரை அடைந்து ஊர் வந்து சேர்ந்தோம். பத்திரமாக..

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.