டி.டி.ஹோமைப் போலவே லியொனாரா பைப்பர் (1859-1950) என்பவருக்கும் எட்டு வயதில் ஆழ்மன சக்தியின் முதல் அனுபவம் ஒரு மரணச்செய்தி மூலமாகவே ஏற்பட்டது. 'அத்தை சாரா இறக்கவில்லை. இன்னும் உங்களுடன் தான் இருக்கிறாள்' என்ற செய்தி செவிப்பறையை அறைந்து தெரிவிப்பது போலிருக்க லியொனாரா பைப்பர் ஓடிச்சென்று தாயிடம் அதைத் தெரிவித்தார்.
மகளின் பைத்தியக்காரத்தனமான கற்பனை என்று கருதிய அந்தத் தாய் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் அந்த அத்தை சாரா இறந்து போன செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. இறந்த நேரம் லியொனாரா பைப்பர் காதில் அறைந்த செய்தியின் அதே நேரம் தான். அதன் பிறகு பதினான்கு வருடங்கள் அது போன்ற அனுபவங்கள் லியொனாரா பைப்பருக்கு ஏற்படவில்லை. மீண்டும் ஏற்பட்ட ஒரு அனுபவம் அவர் வாழ்வையே மாற்றி அமைத்தது.
கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற லியொனாரா பைப்பர் அதைக் குணப்படுத்த டாக்டர் ஜே ஆர் காக் என்பவரிடம் சென்றார். அந்த டாக்டர் குருடர். தன் கையை நோயாளியின் தலையில் வைத்து நோயைக் குணமாக்கக் கூடியவர். அவரிடம் இரண்டாவது முறை சென்ற போது அவர் லியொனாராவின் தலையில் கையை வைத்தவுடன் திடீரென்று தன் முன் ஒரு ஒளிவெள்ளத்தையும் அந்த ஒளிவெள்ளத்தில் பல்வேறு முகங்களையும் லியொனாரா கண்டார்.
அதன் பின் கிட்டத்தட்ட அரை மயக்க நிலையை அடைந்த அவர் சுயநினைவில்லாமல் எழுந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு கடிதத்தை எழுதி அதை அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவரிடம் சென்று தந்து மறுபடி தான் முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே வந்தமர்ந்தார்.
அவர் அந்தக் கடிதத்தைத் தந்தது கேம்ப்ரிட்ஜைச் சேர்ந்த நீதிபதி ·ப்ராஸ்ட் என்பவரிடம். அந்தக் கடிதம் அவரது இறந்து போன மகன் எழுதுவது போல எழுதப்பட்டது. லியொனாராவுக்கு அந்த நீதிபதியைப் பற்றியோ, அவரது இறந்து போன மகனைப் பற்றியோ தகவல்கள் ஏதும் தெரியாததாலும், கடிதத்தின் தன்மையாலும் அந்தக் கடிதம் தன் மகனுடைய ஆவியாலேயே எழுதப்பட்டது என்று அந்த நீதிபதி நம்பினார். மயக்க நிலையிலிருந்து மீண்ட லியொனாராவுக்கு தான் செய்தது எதுவும் நினைவிருக்கவில்லை.
இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. பலரும் தங்களுக்கு நெருங்கிய அன்பான இறந்து போனவர்களிடம் இருந்து செய்திகளைப் பெற லியொனாரா பைப்பரை மொய்க்க ஆரம்பித்தார்கள். அப்படி லியொனாராவைத் தேடி வந்தவர்களில் ஒருவர் அமெரிக்க மனோதத்துவ மேதை வில்லியம் ஜேம்ஸின் மாமியார். அவருக்கு லியொனோராவின் மூலமாகக் கிடைத்த தகவல்கள் நம்பிக்கை தரும் வண்ணம் இருக்கவே அவர் தன் மருமகன் வில்லியம் ஜேம்ஸிற்குக் கடிதம் எழுதினார். மாமியாரிடம் பணம் பறிக்க யாரோ ஒரு பெண் ஏமாற்றுவதாக எண்ணிய வில்லியம் ஜேம்ஸ் அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி தானும் நேரில் வந்தார். மிகக் கவனமாகக் கண்காணித்தும் ஏமாற்று வேலைகள் எதையும் வில்லியம் ஜேம்ஸால் கண்டுபிடிக்க முடியவில்லை.
லியொனாரா பைப்பர் ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு ஆவியின் ஆதிக்கத்தில் இருந்ததாகக் கூறினார். அந்த ஆவி சம்பந்தப்பட்ட மற்ற ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான தகவல்கள் சொல்வதாகச் சொன்னார். அவர் சொல்வதற்கேற்றாற் போல் அந்தந்தக் கட்டங்களில் அவர் ஆவியின் ஆதிக்கத்தில் இருக்கையில் பேசும் பேச்சுகளின் குரல்கள் வித்தியாசப்பட்டன.
வில்லியம் ஜேம்ஸ் இதைப் பற்றி ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தெரியப்படுத்தினார். அந்த ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் ரிச்சர்டு ஹோட்சன் என்ற ஆராய்ச்சியாளர் பல போலிகளை போலிகள் என்று நிரூபித்த பெருமையுடையவர். எதையும் உடனடியாக நம்ப மறுத்த அவர் லியொனாரா பைப்பரை ஆராய்ச்சி செய்ய வந்தார்.
ரிச்சர்டு ஹோட்சன் துப்பறியும் நிபுணர்களை எல்லா சமயங்களிலும் லியொனாரா பைப்பரைப் பின் தொடரச் செய்தார். யாரிடமாவது பேசித் தகவல்கள் தெரிந்து கொள்கிறாரா என்று கண்காணித்தார். அவராகவே லியொனாராவிற்கு அறிமுகமே இல்லாத நபர்களை வரவழைத்து லியொனாரா பைப்பர் முன் அமர வைத்து அவர்களுக்கு வேண்டிய இறந்த மனிதர்கள் சம்பந்தமாகக் கேட்க வைத்தார். எல்லா விவரங்களும் திருப்தி தருபவையாக இருந்தன. 1888 இறுதியில் ஹோட்சனுடன் டாக்டர் ஜேம்ஸ் ஹிஸ்லாப் என்பவரும் சேர்ந்து கொண்டார். அவர் லியொனாரா பைப்பர் 'மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டரா'ல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தாலும் லியொனாராவிற்கு முன்பின் தெரியாத இறந்தவர்களின் தகவல்கள் எல்லாம் எப்படித் தெரிகின்றன என்பதை அவரால் அறிவியல் பூர்வமாகச் சொல்ல முடியவில்லை.
ரிச்சர்டு ஹோட்சனும், ஹிஸ்லாப்பும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய லியொனாராவை இங்கிலாந்துக்கு அழைத்தார்கள். லியொனாரா சம்மதித்தார். இங்கிலாந்தில் அவர் ஆழ்மன ஆராய்ச்சிக் கழகத் தலைவர் எ·ப்.டபுல்யூ.எச்.மயர்ஸ் வீட்டில் தங்கினார். மயர்ஸ் லியொனாரா வருவதற்கு முன் வீட்டில் அனைத்து வேலைக்காரர்கலையும் நீக்கி புதிய வேலைக்காரர்களை நியமித்தார். எனவே லியொனாரா வேலைக்காரர்கள் மூலம் எதையும் தெரிந்து கொள்ளுதல் சாத்தியமிருக்கவில்லை. மயர்ஸ் லியொனாராவுக்கு உதவ ஏற்பாடு செய்த வேலைக்காரி ஒரு கிராமத்திலிருந்து தருவிக்கப்பட்டார். அவர் வீட்டை விட்டு செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆராய்ச்சிக் கழகத்தின் நபர் ஒருவரும் கண்காணிக்க கூடவே சென்றார்.
மயர்ஸ் மற்றும் சர் ஆலிவர் லாட்ஜ் கண்காணிப்பில் நவம்பர் 1889 முதல் பிப்ரவரி 1890 வரை லியொனாரா 88 முறை முன்பின் தெரியாத நபர்களின் குடும்பத்தில் இறந்தவர்களிடம் இருந்து தகவல்கள் பெற்றுத் தந்தார். லியொனாராவிற்கு வந்தவர்களை சில சமயங்களில் தவறான பெயரில் அறிமுகப்படுத்தியதும் உண்டு. சில சமயங்களில் லியொனாரா அரை மயக்க நிலைக்குச் சென்ற பிறகு சிலரை திடீரென்று அழைத்து வந்ததும் உண்டு. ஆனால் லியொனாரா பைப்பர் தருவித்துத் தந்த தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான தகவல்களாகவே இருந்தன. மயர்ஸ¤ம், ஆலிவர் ஸ்காட்டும் 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் எந்த விதத்திலும் லியொனாரா பைப்பர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருக்க சாத்தியமே இல்லை என்றும் அவர் நாணயமும், நம்பகத் தன்மையும் சந்தேகத்திற்கப்பால் பட்டது என்பதையும் தெரிவித்தார்.
மீண்டும் அமெரிக்கா திரும்பிய லியொனாரா பைப்பர் 1909ல் மீண்டும் ஆராய்ச்சிகளுக்காக இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார். 1915ல் சர் ஆலிவர் ஸ்காட் இறந்து விடப்போவதாகத் தனக்கு ஆவியுலகில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக லியொனாரா தெரிவித்தார். அதன் படியே ஸ்காட் இறந்து போனார். பின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்த லியொனாரா இது போன்ற நிகழ்ச்சிகளைத் தருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.
பல ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் எந்த வித தயக்கமும் இன்றி இது போன்ற பல அதிசயங்களை செய்து காட்டிய லியொனாரா பைப்பர் இன்றும் ஒரு அற்புதப் பெண்மணியாகவே ஆழ்மன ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறார். ஆவியுலகைப் பற்றி நம்பிக்கை இல்லாத ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட அவர் சொன்ன தகவல்களின் உண்மை தன்மையை உணர்ந்த போது பிரமித்துப் போனார்கள்.
மேலும் பயணிப்போம்......
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.