31/08/2017

மக்காத பிளாஸ்டிக்குகளில் தின்னர் தயாரிக்கலாம் : தமிழர்களின் அபார சாதனை.....


கோவை ஜே.சி.டி பொறியியல் கல்லுாரியில் பயிலும் மாணவர்களான ஹரிபிரசாத் மற்றும் கடையநல்லூர் பைக் மெக்கானிக் அப்துல் ஜப்பார் மகன் பருக்தீன் அலி அஹமது ஆகியோர் அமெரிக்காவை சேர்ந்த, ஐ.ஆர்.இ.டி. எனும், பொறியியல் மருத்துவத்துறைக்கான ஆய்வு நிறுவனம் பாங்காங்க்கில் நடத்திய கருத்தரங்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற இவர்கள்,

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து, உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து விளக்கினர். இதற்கு சிறந்த ஆய்வுக்கான சான்றிதழ் கிடைத்திருப்பதோடு, வங்கதேசத்தில் உயர் கல்வி தொடரும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.

இது தொடர்பாக ஹரிபிரசாத் மற்றும் பருக்தீன் அலி அஹமது ஆகியோர் கூறியதாவது...

பெட்ரோல் கெமிக்கல் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற துடிப்பு இருந்தது.

நம் நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதை கடலில் வீசுவதால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

மட்காத குப்பை என்பதால் சுற்று சூழலுக்கும் கேடுவிளைவிக்கிறது. மறுசுழற்சி செய்தாலும், முழுமையாக அகற்ற முடியாத நிலை உள்ளது.


எனவே இக்குப்பையில் இருந்து மூலப்பொருட்கள் உருவாக்க திட்டமிட்டோம். பலகட்ட சோதனைகளுக்கு பின் ஆக்சிஜன் இல்லாத குடுவையில், 300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பிளாஸ்டிக் எரிப்பதன் மூலம் அதிலிருந்து ஒருவகை எண்ணெய் பெறலாம்.

இதோடு பயோ-டீசல் எனப்படும் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய், பெட்ரோல் கழிவு ஆகியவற்றை சேர்த்து வேதிவினைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த கலவையை 150 டிகிரி வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் பெயிண்ட் தின்னர் கிடைக்கிறது.

இந்த பெயிண்ட் தின்னர், கழிவுகளில் இருந்து கிடைப்பதால் சந்தை விலையை விட குறைவாக விற்கலாம். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் முற்றிலுமாக அகற்ற முடியும்.

இந்த சோதனையை, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்,  கோவை காருண்யா பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் நேரடியாக விளக்கினோம்.

கோவையை குப்பையில்லா நகரமாக்க இம்முயற்சி பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.