சிவகங்கை அருகே உள்ள மிக்கேல்பட்டினத்தில், கடந்த 6 மாத காலமாக குடிதண்ணீருக்கு அல்லல்பட்டு வருவதாகவும், ஒரு குடம் தண்ணீா் 15 ரூபாய்க்கு வாங்கும் நிலையில், குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, நீா் ஏற்றும் நிலையம் முன்பு காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மிக்கேல்பட்டினம், பச்சேரி, கல்லூரணி உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு, கடந்த 9 மாதங்களாகக் குடிதண்ணீர் வழங்காததால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனா். ஒரு குடம் தண்ணீா் ரூ. 15-க்கும், கேன் தண்ணீா் ரூ.35-க்கும் வாங்கி பருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கிராமத்தில், மூன்று உயர்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் இருந்தும், தண்ணீா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில், 40 லட்சத்துக்கும் மேல் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு குடிநீருக்கு வழிகிடைக்கவில்லை.
மாறாக, அரசு அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதியில் இதுபோன்று குடிநீருக்குத் தட்டுபாடு ஏற்பட்டது இல்லை என்றும், தற்போது 9 மாதமாக தண்ணீா் பிரச்னையால் பலா் ஊரையே காலிசெய்துவிட்டுச் சென்றதாகவும் கிராம மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனா்.
முடங்கிப் போன ஊராட்சி நிர்வாகங்களால், காட்சிப் பொருளாக நிற்கும் நீா்த் தேக்கத் தொட்டிகளைச் சீரமைத்து, குடிதண்ணீருக்கு அரசு ஏற்பாடுசெய்தால், எஞ்சியிருக்கும் கிராம மக்களை ஊரை விட்டு வெளியேறாமல் தடுக்கலாம் என்பது நிதர்சனம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.