நடுத்தர வயதை கடந்தவர்கள் சிறுவயதில் பார்த்து பரவசப்பட்ட ஒரு பறவையினம் தான் சிட்டுக் குருவி.
மார்ச் 20 சிட்டுக் குருவிகள் தினம்.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவே இப்படி ஒரு தினத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் சிட்டுக் குருவியை வீட்டுக்குருவி என்கிறார்கள்.
பிரிட்டனில் உள்ள 'ராயல் பறவைகள் பாதுகாப்பு சங்கம்' உலக அளவில் அழிந்துவரும் 39 பறவைகள் பட்டியலில் சிட்டுக் குருவியையும் சேர்த்து உள்ளது.
இந்தியா உள்பட எல்லா நாடுகளிலும் சிட்டுக்குருவி எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் குறைந்து உள்ளது.
குருவிகளை காப்பாற்றுங்கள் என்ற இயக்கம் பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
வீட்டுக்குருவி இங்கிலாந்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று.
குருவிகள் மாயமாகி விடுவதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.
தானியங்கள் பயிரிடும் முறையில் ஏற்பட்ட மாற்றம், பூச்சி கொல்லி மருந்துகளின் உபயோகம் போன்றவை குருவிகளுக்கான உணவை குறைத்து விட்டன.
வீடு கட்டும் முறையும் ஒரு காரணம்.
முன்பெல்லாம் விசாலமான வீடுகளை கட்டினோம். வீட்டில் குருவிகள் கூடு கட்டுவதற்கும் இடம் இருந்தது.
இன்று நாமோ குருவிக்கூடு போல் சிறிய வீட்டில்தான் வாழ்கிறோம்.
பிறகு எப்படி குருவிக்கு இடம் இருக்கும்?
இதுமட்டுமல்ல குருவிகள் அழிவுக்கு ஈயமில்லாத பெட்ரோல், செல்போன் உபயோகமும் முக்கிய காரணம்.
வாகனங்களுக்கு பயன்படுத்தும் 'அன்லீடட்' பெட்ரோலில் உள்ள 'பென்சீன்' மற்றும் 'மினரல் பெர்ஷியா பியூடைல் ஈதர்' என்ற வேதிப்பொருள், பறவைகளுக்கு உணவாகக்கூடிய முக்கியமான பூச்சிகளை கொன்று விடுகிறது.
இதனால் பறவை இனங்கள் உணவு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன.
இதேபோல் செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் குருவிகளின் இதயத்துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சின்ன சிட்டுக்குருவி அழிந்து வருவதற்கு நாம் இத்தனை கவலைப்பட வேண்டுமா?
வேண்டும். சிட்டுக்குருவிகள் நம் வாழ்வுக்கு ஆதாரமானவை.
காடுகளில் வாழும் பறவைகள், விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் நகர்புற வாசிகளான நமக்கும் நாம் வாழும் சுற்றுச்சூழலின் தரத்தை அறிந்து கொள்ளும் அளவுகோல் சமூக பறவையான சிட்டுக் குருவிகளே.
இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்திலும், பூமிக்கு அடியில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலும் வாழும் தகுதி கொண்டவை சிட்டுக் குருவிகள்.
நாம் சுவாசிக்கும் அதே காற்றைத்தான் சுவாசிக்கின்றன.
எங்கும் பறந்து திரியும் இந்த பறவைகளுக்கு அழிவு என்பது சுற்றுச்சூழலின் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான எச்சரிக்கை மணி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.