01. பேஎ விழவினுள் (பரிபாடல் 5)..
வெறியாடும் பொழுது ஆட்டுக் குட்டியைப் பலியிடுவர் . அதன் குருதியினைத் தினையரிசியோடு சேர்த்துத் தூவுவர். ஆட்டின் கழுத்தை அறுப்பதோடு தினைப் பிரப்பை வைத்து வழிபடுவர்.
02. மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப் பிரீஇ (குறுந்தொகை 265)..
03. சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து..
04. குருதியோடுவரைஇய தூவௌ் அரிசி..
05. குருதிச் செந்தினை பரப்பி (திருமுருகாற்றுப்படையின் வரிகள்)..
மலையில் விளைகின்ற உருவத்தில் சிறிய தினை அரிசியுடன் மலையில் மலரும் காட்டு மலர்களைப் பறித்து விரவிச் சுளகில் பரப்புவார்கள். வரையாட்டை அறுத்து அதன் ஊனைத் தேக்கிலையில் வைப்பார்கள். இரண்டையும் தெய்வத்திற்குப் படைப்பார்கள். மலையில் விளைந்த தூய வெண்ணெல் அரிசியை வரையாட்டுக் குருதியில் விரவி, தேக்கிலையில் இட்டுப் படைப்பார்கள். செந்தினை அரிசியை வரையாட்டுக் குருதியுடன் கலந்து சுளகில் இட்டுப் பரப்பிப் படைப்பார்கள்.
பலவாகிய வேறுபட்ட நிறமுடைய சோற்றையுடைய பலியுடன் ஆட்டுக்குட்டியைக் கொன்று, நோய்கொண்ட பெண்ணின் நறுநுதலை நீவி முருகனை வேண்டிப் பலியாகக் கொடுப்பர் (குறுந்தொகை 362)
06. படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடி பலி கொடுத்து
உருவச் செந்தினை குருதியோடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள் (அகநானூறு 22;5)..
முருகவேளைப் போற்றி வணங்கிட, இவள் வாட்டம் தணியப் பெறுவாள் என்று முடிவு செய்தனர். அனுபவம் மிக்க மகளிர் அவ்விடத்தில் ஒன்று கூடி வெறியாடு களத்தை உண்டு பண்ணினர். மலர்க் கண்ணி சூட்டி அலங்காரம் செய்தனர். மலை முழுவதும் எதிரொலிக்குமாறு முருகனைப் போற்றிப் பாடினர். வரையாட்டைப் பலி கொடுத்தனர். நன்கு முற்றிய செந்தினை அரிசியோடு வரையாட்டுக் குருதியைக் கலந்து பலி தூவி முருகப் பெருமானிடத்து ஆற்றுப்படுத்தினர். சங்க காலத்தில் முருகப் பெருமானுக்கு உயிர்ப்பலி கொடுத்தனர்.
குளி்ர் மிகுந்த மலைப் பகுதிகளில் மக்கள் தங்களின் உடல் வெப்பம் குறையாமல் சமநிலையில் வைத்துக் கொள்ளவும், குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும், கடுமையான தொழில்களைச் செய்வதற்கு ஏற்ற உடல் வலிமை பெறவும் புலால் உணவு அருந்தினர். தாங்கள் உண்ணும் புலால் உணவையே தாங்கள் வழிபடுகின்ற கடவுளர்க்கும் படைத்து வழிபட்டனர். படைத்தவற்றை உணவாக ஏற்றுக் கொண்டனர்.
07. கனங்கெழு கடவுட்கு உயிர்ப்பலி தூஉய்ப்
பரவினம் வருகஞ் சென்மோ (நற்றிணை, 358)..
08. ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றோடு புணர்ந்து
தொல்லியிர் வழங்கிய அவிப்பலி யானும்..
தான் கலந்து கொள்ளும் போரில் தன் பக்கம் வெற்றி பெற விழைந்த வீரன் ஒருவன் தீயை வளர்த்தான். தனது பக்க வெற்றிக்காக அத்தீயில் தன்னையே அவிப்பலியாக்கிக் கொண்டு விழுந்து உயிர் நீத்தான்.
உயிர்ப்பலி கொடுத்துத் தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.
09. கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பவருமாகப் பயந்தன்றால் நமக்கே (அகம் 232)..
10. மெய்ம்மலி உவகையன் அந்நிலைகண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவச் செந்தினை நீரோடு தூவி தூஉய் (அகம் 272)..
11. உருகெழு சிறப்பின் முருகுமனைத் தழீஇக்
கடம்பும் கணனும் பாடி நுடங்குடி (அகம் 138)..
வேலன் வெறியாட்டு என்ற முறையில் பண்டைத் தமிழ் மக்கள் முருகனை அதிகமாக வழிபட்டு இடையிறாத தெய்வ விழாக்களும் நிகழ்த்தி ஆடிப்பாடியும் பலிகொடுத்தும் இரவில் வழிபாடு நிகழ்த்தினர்.
12. தோப்பிக் கள்ளுடன் துரூஉப்பலி கொடுக்கும் (அகம் 35).
அரிசியிலிருந்து வடித்து எடுக்கப்பட்ட ஒருவகைக் கள்ளைத் தாங்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்குப் படைத்தனர். கூடவே, மலை ஆட்டையும் பலி கொடுத்து வழிபட்டனர்.
13. நனைமுதிர் நறவின் வாட்பலி கொடுக்கும் (அகம் 13)..
கடும் புளிப்பு நிறைந்த கள்ளைப் படைத்து வழிபட்டனர்.
14. கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக்கோட்டு வௌ்ளை நால்செவிக் கிடாய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி (அகம் 156)..
கடவுளுக்குக் கையுறையாக மலர்க் கண்ணியுடன் கள் படைக்கப்பட்டது.
15. பலிபெறும் வியன்களம் மலிய ஏற்றி (பெரும்பாணாற்றுப்படை)..
குளத்திலே உறைகின்ற தெய்வங்களுக்கு மிகுந்த பலி இட்டு வழிபட்டனர்.
16. உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம் (அகம் 166)..
சிறந்த பலியைப்பெறுகின்ற வலிமை மிக்க தெய்வம்..
போர் முனைக்குச் செல்லுவதற்கு முன்னால் போர் வீரர் அனைவரும் படைஞர் திடலில் அணிவகுத்து நிற்பார்கள். போரில் தங்களுக்கு வெற்றியை நல்க வேண்டும் என்று வேண்டி, கொற்றவைக்குப் பலி இட்டு வழிபடுவதை களப்பலி என்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.