22/10/2017

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியான ஜோய்தா; பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்...


கொல்கத்தாவில் உள்ள ஒரு பாரம்பரிய இந்து குடும்பத்தில் ஆணாகப் பிறந்த ஜோய்தா மாண்டல் ஒரு திருநங்கை என்பதால் பல்வேறு துயரங்கள் மற்றும் அவமானங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த இன்னல்களைப் பொறுக்க முடியாமல் தனது பள்ளிப் படிப்பை 10-ம் வகுப்போடு நிறுத்திவிட்டு வீட்டைவிட்டும் வெளியேறி உள்ளார்.

பல வருடப் போராட்டத்திற்கு பிறகு 29-வயதான ஜோய்தா இப்போது மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு டினாஜ்புர் மாவட்ட லோக் அடல்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி என்னும் பெருமையையும் இதனால் இவர் பெற்றுள்ளார். படிப்பதற்கு சாதாரணமாக தெரியும் இது ஜோய்தாவாற்கு எளிதாகக் கிடைத்த ஒன்று இல்லை. இந்த நிலைக்கு வருவதற்கு முன்பு இத்தனை நாட்களாக ஜோய்தா சந்தித்த அவமானங்களையும், அவைகளை மீறி மற்ற திருநங்கைகளின் வாழ்வு ஒளி பெற அவர் செய்த பல சமூக சீர்திருத்தங்களைப் பற்றியும் அறிவீர்களா நீங்கள்?

ஒரு ஆணாகப் பிறந்த எனக்குள் மறைந்திருந்த பெண்மை பின்னாளில் வெளிவரத் தொடங்கியது, அப்போது நான் பள்ளி மாணவன். என் உடன் படித்த பிற மாணவர்கள் இதனால் என்னைக் கிண்டல் செய்யவும், மிரட்டவும் செய்தார்கள். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தால் எனது பள்ளி படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு என் அம்மாவிடம் அண்டை மாநிலத்தில் ஒரு வேலைக் கிடைத்திருப்பதாக கூறி வீட்டைவிட்டு வெளியேறினேன்.

நான் ஒரு திருநங்கை என்பதால் எனக்கு வாடகைக்கு வீடோ அல்லது தங்கம் விடுதியில் அறையோ கொடுக்க அனைவரும் தயங்கி மறுத்தனர். வேறு வழியில்லாமல் பேருந்து நிலையத்திலேயே படுத்துறங்கினேன். அப்போது தான் பிற திருநங்கைகள், ஓரின சேர்க்கையாளர்கள் போன்றோரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. முற்றிலுமாக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு வாழு இவர்களுக்கு நமது இந்திய அரசாங்கம் இவர்களுக்கு என வழங்கியுள்ள சலுகைகள் பற்றியே எதுவும் திரியாமல் இருந்தது.

இவர்களில் பலர் காலையில் பிச்சை பிச்சை எடுப்பதும், இரவில் பாலியல் தொழில் செய்வதுமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வந்ததைக் கண்டு அதிர்ந்து போனேன். 2010-ம் ஆண்டு எங்களைப் போன்றோருக்கு கிடைக்க வேண்டிய வாக்காளர் அடையாள அட்டையை முதலில் வாங்கித் தந்தேன்.

அதைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றைத் துவங்கினேன், இதன் மூலம் வழி தவறி போன பலரை மீட்டு அவர்களும் இந்தச் சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழப் பல முயற்சிகளை எடுத்தேன். தற்போது இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலன் அடைந்திருக்கிறார்கள். அதே சமயத்தில் தொலைதூர கல்வி முறையில் சட்டப்படிப்பையும் படித்து முடித்தேன்.

2014-ல் உச்ச நீதிமன்றம் மூன்றாம் பிரிவினர் என்று எங்களைச் சட்டப்பூர்வமாக அறிவித்துத் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து எங்கள் பக்க வாதம் வலுப்பெறச் செய்தது, எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீண்டும் நாங்கள் தட்டிக் கேட்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தத் தீர்ப்பு இந்தியாவில் பாலின சமத்துவத்தை நிலை நாட்ட ஒரு முக்கிய படியாகும்.

எனது வீட்டை விட்டு நான் வெளியே வந்து 10 அண்டுகள் கழித்து இப்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறேன். மூன்று நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிமன்றத்தைப் பொருத்தவரை நீதிபதி ஒருவர், கூடுதலாக வழக்கறிஞர் ஒருவரும், சமூக சேவகர் ஒருவரும் நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். அதன் அடிப்படையில் சமூக சேவக நீதிபதியாக நான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். இந்த நீதிமன்றம் நான் ஆரம்பக் காலத்தில் படுத்துறங்கிய பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறது என்று தான் கடந்து வந்த பாதையை பற்றி ஜோய்தா விளக்குகிறார்.

பாலின சமத்துவம் என்பது அவர்களுக்கு என அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவையும் பெயரையும் தருவது மட்டும் அல்ல, அரசாங்கத்தில் மற்றவருக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளும் இவர்களுக்கும் கொடுக்கப்படுவது தான். அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் திருநங்கைகள் பணி அமர்த்தப்பட வேண்டும் என்பதே ஜோய்தாவின் நீண்ட நாள் கனவு. அதற்கு மேற்கு வங்கம் எடுத்துள்ள இந்த அங்கீகாரம் மிகப் பெரிய முன்மாதிரி தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.