அ.தி.மு.க. கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–
நாங்கள் இருவரும் கட்சி விதிப்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டோம். தற்போது அ.தி.மு.க.வுக்கு விரோதமான செயல்பாடுகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 12.9.2017 அன்று அ.தி.மு.க. (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் நடத்திய பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, எங்களை பதவியில் இருந்து நீக்கியது உள்பட 12 தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளராக செம்மலை ஆகியோர் கட்சி உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் தொடர தடை விதிக்க வேண்டும்.
துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் சீனிவாசன் மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி, அபிராமபுரம் இந்தியன் வங்கி, கதீட்ரல் ரோடு பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில், வங்கி கணக்குகளை கையாள தடை விதிக்க வேண்டும். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் மதுசூதனன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரது கட்டுப்பாட்டில் கட்சி ஆவணங்கள் வங்கி கணக்குகள், இதர வரவு–செலவு ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. இந்த ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் கட்சியின் 3 வங்கி கணக்குகளை கையாள தடை விதிக்க வேண்டும். வரவு–செலவு மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கட்சியின் 3 வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருகிற 10–ந் தேதிக்குள் அ.தி.மு.க. தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.