26/02/2018

கல்லூரி நிதி ரூ.92 லட்சம் முறைகேடு புகார்: நெல்லை சிஎஸ்ஐ பேராயர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு...


கல்லூரி நிதியில் ரூ.91.90 லட்சம் முறைகேடு செய்ததாக, திருநெல்வேலி சிஎஸ்ஐ பேராயர் உட்பட 5 பேர் மீது போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே நல்லூர் சிஎஸ்ஐ அன்னபாக்கியம் கல்லூரி, திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்டது. இக்கல்லூரியில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக, 2017-ல் இக்கல்லூரி தாளாளர் எஸ்பிடி.நெல்சன் போலீஸில் புகார் செய்திருந்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆலங்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், `சுயநிதி கல்லூரியான இங்கு மாணவ, மாணவியர் செலுத்தும் கல்விக் கட்டணத்தைக் கொண்டே ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. புதிய வங்கி கணக்குகளை தொடங்கி, கல்லூரி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி நிதி ரூ.91,90,544-ஐ கைப்பற்றி கல்லூரிக்கு பெற்றுத்தர வேண்டும். கையாடல் செய்தவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்து வழக்கு பதிவு செய்யுமாறு ஆலங்குளம் போலீஸாருக்கு, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இக்கல்லூரி முதல்வராக இருந்த பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோயல் ஜெயமணி, திருநெல்வேலி மண்டல சிஎஸ்ஐ பேராயர் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ், பாளையங்கோட்டையை சேர்ந்த வி.காந்தையா நல்லபாண்டி, பாளையங்கோட்டை ஜெயராஜ் நாடார் நிறுவன மேலாளர் ஆர்.ஜெயகுமார் ஜெயராஜ், சென்னை ராயப்பேட்டை சர்ச் ஆப் சவுத் இந்தியா மாடரேட்டர் தாமஸ் கே.ஓமன் ஆகிய 5 பேர் மீது போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.