22/02/2018

மனதில் சுமப்பது குப்பைகளையா?


பாரதியார் குள்ளச் சாமி என்ற ஒரு சித்தரை அறிந்திருந்தார். அவர் மீது மிகவும் மதிப்பும் கொண்டிருந்தார்.

ஒரு முறை குள்ளச்சாமி பழங்கந்தைகளும், குப்பைகளும் கொண்ட அழுக்கு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி வருவதைக் கண்ட பாரதியாருக்கு என்னவோ போல் ஆகி விட்டது.

சித்தராகக் கொண்டாடியவரை இப்படி பழங்குப்பை சுமக்கும் பைத்தியக்காரராகக் காணும்படியாகி விட்டதே என்று பாரதியாருக்கு ஒரே வருத்தம்.

ஐயா ஏனிந்த கோலம். உங்கள் செய்கை பைத்தியக்காராரரின் செயல் போலல்லவா இருக்கிறது என்று கேட்டார் பாரதி.

நான் குப்பைகளை வெளியே சுமந்து கொண்டிருக்கிறேன். நீ உள்ளே சுமந்து கொண்டிருக்கிறாய் என்று புன்னகையுடன் சொன்ன குள்ளச்சாமி பாரதியாரைச் சிந்திக்க வைத்து விட்டு சென்று விட்டார்.

பாரதியாரின் பாடல் இதோ..

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்து கொண்டென் எதிரே வந்தான்.
சற்றுநகை புரிந்தவன் பால் கேட்கலானேன்.
தம்பிரானே இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டை சுமந்திடுவதென்னே? மொழிவாய் என்றேன்.

புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
'புறததேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய்நீ
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும்.

குள்ளச்சாமியின் பதில் பாரதியாரை மட்டுமல்ல நம்மையும் சிந்திக்க வைக்கக்கூடிய உண்மை.

வெளியே குப்பைகளை சுமப்பவரைக் கண்டால் பைத்தியக்காரர் என்று ஏளனம் செய்யும் நாம் அதை விட மோசமானதும் பழமையானதுமாய் எத்தனை குப்பைகளை நம் மனதில் சுமந்து கொண்டிருக்கிறோம்?

புறத்தை சுத்தமாய், அழகாய் வைத்திருக்கும் நம்மில் எத்தனை பேர் அகத்தை சுத்தமாய், அழகாய் வைத்திருக்கிறோம்?

மனதின் உள்ளே இருக்கும் பழைய நினைவுகளில் எத்தனை நினைவுகள் இனிமையானவை? எத்தனை நினைவுகள் பயனுள்ளவை?

இந்தக் கணக்கை ஒவ்வொருவரும் எடுத்துப்பார்த்தால் நன்மையானவையும், பயனுள்ளவையும் நம் மனதில் மிகச் சொற்பமானதாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வில் நிகழும் நன்மைகளையும், பெற்ற நல்லவற்றையும் நீரில் எழுதி வைக்கிறார்கள். நேர்ந்த தீங்குகளையும், இழந்தவற்றையும், தொலைத்தவற்றையும் கல்லில் எழுதி வைத்துப் பாதுகாக்கிறார்கள். அங்கலாய்க்கிறார்கள்.

அந்தப் பயன்படாத, நிம்மதியைக் குலைக்கும் நினைவுகள் பழங்குப்பைகளே. குப்பைக் கூளங்கள் மிகுதியாக இருக்கும் இடங்கள் நோய்களின் உற்பத்தி ஸ்தானங்கள். எத்தனையோ மனநோய்களின் உற்பத்திக்காரணங்கள் இது போன்ற பழங்குப்பைகள் தான்.

குள்ளச்சாமி சுட்டிக் காட்டிய உண்மை உறைக்க பாரதியார் இது போன்ற குப்பைகள் சுமப்பது முட்டாள்தனம் என்று அழகாய் பாடியுள்ளார்.

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ.
மேதையில்லா மானுடரே..

கடந்த காலத்தின் இனிமைகளை கல்லில் செதுங்குங்கள். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்று பாடங்களை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு கசப்பான அனுபவங்களை குப்பைகளாய் எண்ணி அகற்றி விடுங்கள்.

குப்பைகளை சுமப்பதில் அர்த்தம் இல்லை. மேலும் நடந்து முடிந்த, மாற்ற முடியாத விஷயங்களை மனதில் எண்ணி உருகும் போது நிகழ்கால நல்ல விஷயங்களை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். இது இரட்டை நஷ்டமே அல்லவா?

நம் நிம்மதியைக் குலைப்பது நம் பழைய தவறான செயல்கள் என்றால் இனி அப்படி செய்யக் கூடாது என்று உறுதியாக தீர்மானிப்பதைத் தவிர அதுகுறித்து நம்மால் செய்ய முடிவது வேறொன்றுமில்லை.

நம்மை அலைக்கழிக்க வைப்பது அடுத்தவர் செயல்கள் என்றால் இனி அது போன்ற செயல்கள் நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்கேற்ப நம்மைத் தற்காத்துக் கொள்வதே நாம் செய்ய வேண்டிய அறிவார்ந்த செயல்.

அதை விட்டு அப்படியாகி விட்டதே என்று எண்ணி எண்ணி வருந்தியபடியே இருப்பது முட்டாள்தனமே.

பாரதியின் இன்று புதிதாய் பிறந்தோம் என்ற வரியை தாரக மந்திரமாய் எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வின் புதிய பக்கமே. எழுதி முடித்த பக்கங்களைத் திருத்தும் சக்தி நமக்கில்லை என்றாலும் புதிதாய் எழுதப்போகும் பக்கங்களை எப்படி நிரப்புகிறோம் என்பது நம் கையிலேயே அல்லவா இருக்கிறது?

அந்த சுதந்திரத்தை முறையாக நாம் பயன்படுத்திக் கொண்டால் இனிவரும் நாளெல்லாம் இனிய நாளே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.