சட்டசபைக்காக கட்டிய கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது, பாலங்களில் இருந்த முந்தைய ஆட்சியாளர்களின் பெயர்களின் கல்வெட்டுகளை பெயர்த்தது என்பது போல் இல்லாமல்..
இதே தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆட்சி நடந்திருக்கிறது என்பதற்கு திருக்கழுக்குன்றத்தில் கிடைக்கும் இந்த கல்வெட்டு ஒரு எடுத்துக்காட்டு.
திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகளுக்கு இறையிலியாக ஸ்கந்தசிஷ்யன் குடுத்தமையப்படியே பாதாவிகொண்ட நரசிங்கப் போத்தரையரும் அப்பரிசே ரக்ஷித்தமையில் ஆண்டுரையான் குணவான் மகன் புத்தன் விண்ணப்பித்தினால் பூர்வராஜாக்கள் வைத்தபடியே வைத்தேன் இராஜகேசரிபரம்மன் இத்தர்மம் ரக்ஷித்தான் அடி என் முடி மேலினே...
இதில் கவனிக்க வேண்டியது மூன்று முக்கியமான விசயங்கள்...
1) இந்த கோயிலுக்கு "ஸ்கந்தசிஷ்யன்" என்ற பல்லவ மன்னன் ஒரு தானம் வழங்கி இருக்கிறான். ஸ்கந்தசிஷ்யன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த மன்னனாக கருதப்படுகின்றது. நான்காம் நூற்றாண்டில் ஆட்சியிலிருந்த மன்னன் ஒருவனின் பெயர் வரும் கல்வெட்டு அநேகமாக இதுவாகவே இருக்கக் கூடும். இந்த கோயிலும் நான்காம் நூற்றாண்டில் இருந்தே இருக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்று.
2) மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பல கைகள் கடந்து கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலம் மாமல்லன் என்ற "நரசிம்ம பல்லவன்" கைகளுக்கு வருகின்றது. அப்போது அவர் தனக்கு முன் இருந்த அரசர் வழங்கிய கொடையை தொடர உத்தரவிடுகிறார்.
3) மீண்டும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆதித்த சோழன் கைகளுக்கு தொண்டை மண்டலம் வருகின்றது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பல நூறு ஆண்டுகள் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து சோழ அரசின் ஆட்சியை நிறுவியவர் ஆதித்தன்.
4) ஆதித்த சோழன் இந்த கோயிலுக்கு மீண்டும் அந்த கொடையை உறுதிப்படுத்தும் போது ஸ்கந்தசிஷ்யன் கொடுத்த கொடையை நரசிம்ம பல்லவன் உறுதிப்படுத்தியத்தைப் போல் நானும் இந்த கொடையை உறுதிப்படுத்துகிறேன் என்கிறான்.
இதில் நரசிம்ம பல்லவனை குறிப்பிடும் போது அவரின் பட்டமான "வாதாபி கொண்ட" என்பதையும் சேர்த்து "வாதாபி கொண்ட" நரசிம்மன் என்று குறிப்பிட்டிருக்கிறார். எதிரியாக இருந்தாலும் அவரின் போர் வெற்றியையும் குறிப்பிட்டு அவரை பெருமைப்படுத்தும் மாண்பு இதே மண்ணில் இருந்துள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.