28/02/2018

நூறாவது குரங்கு...


1952 ஆம் ஆண்டு சில ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கோஷிமா என்ற தீவில் ஒரு வகைக் குரங்கினத்தின் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு தந்து வந்தார்கள்.

அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்ட வெளியில் போட குரங்குகள் அவற்றை எடுத்து சாப்பிட்டு வந்தன.

பெரும்பாலும் ஈர சகதியில் விழுந்திருந்த கிழங்கை எடுத்து சாப்பிட்ட குரங்குகள் அந்த சகதியின் சுவையும் கிழங்கோடு சேரவே, அதை சிரமத்துடன் சாப்பிட்டன.

அதில் பதினெட்டு மாதப் பெண் குரங்கு ஒன்று மட்டும் அந்தக் கிழங்கை பக்கத்தில் இருந்த ஓடையில் அந்த சகதியை நீக்கி சாப்பிட்டது.

அது சுவை குறையாததாக இருக்கவே அப்படிக் கழுவி சாப்பிடும் வித்தையை தன் தாயிற்குக் கற்றுத் தந்தது.

அதைப் பார்த்த மற்ற சில குரங்குகளும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தன.

ஆனால் வயதான குரங்குகள் மட்டும் பழையபடி சகதியுடன் இருந்த கிழங்குகளையே சாப்பிட்டன என்றாலும் இளைய குரங்குகள் கிழங்குகளைக் கழுவி சாப்பிடும் வழக்கத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன.

கிட்டத்தட்ட 1958 ஆம் ஆண்டு ஒரு கணிசமான எண்ணிக்கையுடைய குரங்கினம் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தவுடன் கிழங்கைக் கழுவாமல் சாப்பிடும் குரங்கே இல்லை என்கிற நிலை வந்தது.

அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அந்தத் தீவில் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட எல்லா தீவுகளிலும் உள்ள குரங்குகளும் உடனடியாக இந்தப் புதிய முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது தான் அதிசயம்.

அந்த ஆராய்ச்சியாளர்கள் எந்தப் புதிய பழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு கணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதிய பழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று கண்டுபிடித்தனர்.

அந்தக் கணிசமான எண் என்ன என்று துல்லியமாகச் சொல்லா விட்டாலும் உதாரணத்திற்கு நூறு என்ற எண்ணைக் குறியீடாகச் சொன்னார்கள்.

இந்த தத்துவத்தை நூறாவது குரங்கின் விளைவு (Hundredth Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கினார்.

அவரும் அவருக்குப் பின் வந்த ஆராய்ச்சியாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களும் இதே தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதினர்.

அந்த ஆரம்பக் கணிசமான தொகையை எட்டுவது தான் கடினமான விஷயம். அந்தக் கணிசமான தொகையை எட்டியபின் அந்த சிந்தனைகளும், செயல்களும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள மனிதர்களிடையே தானாக ஏற்பட்டு பரவும் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது.

இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide) என்ற புத்தகத்தில் லயால் வாட்சன் (Lyall Watson) என்ற எழுத்தாளரும் உதாரணங்களுடன் கூறுகிறார்.

இப்போது இந்தக் கருத்து பரவலாகப் பலம் பெற்று வருகிறது.

எந்தப் புதிய நன்மையையும் சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும் ஆரம்பத்தில் கடினம். அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை.

மாறாக சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்கள்.

ஆனாலும் தாக்குப்பிடித்து மனபலத்துடன் புதிய நல்ல விஷயங்களை சிந்தித்துப் பின்பற்றுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே எழுதப்படுகிறது என்று கூட சொல்லலாம்.

அவர்களுடன் ஒரு கணிசமான ஒத்த சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்து செயல்படும் போது பெரிய மாற்றங்கள் தானாக ஏற்பட ஆரம்பிக்கின்றன.

நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்ற ஆரம்பித்தவுடன் அதிசயம் நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறது என்ற கோட்பாடு சிந்தனைக்குரியது.

எத்தனையோ நன்மைகள் நிகழ, எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு நபரின் உதவி அல்லது பங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன் அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள் இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள் நிகழுமானால் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா?

ஒவ்வொரு புதிய நல்ல சிந்தனை நடைமுறைப்படுத்தப் படுவதை நீங்கள் காணும் போதும், ஒவ்வொரு நல்ல மாற்றத்திற்காக சில முயற்சிகள் நடைபெறுவதை நீங்கள் பார்க்கும் போது இந்த நூறாவது குரங்குத் தத்துவத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஏதாவது நல்ல மாற்றங்களுக்கான வழிமுறைகள் புதியதாய் உங்கள் மனதில் உருவாகுமானால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள்.
அது சரியா, நடைமுறைக்கு ஒத்து வருமா, யாராவது பரிகசிப்பார்களோ என்ற தயக்கம் வேண்டாம். அதில் குறைகள் இருக்குமானால் அதைப் போகப் போக சரி செய்து கொள்ளலாம். ஏனென்றால் இன்று நாம் பயன்படுத்தும் எல்லாமே உருவான விதத்திலேயே இருப்பனவல்ல.

காலப்போக்கில் மெருகூட்டப் பட்டவை தான். மேம்படுத்தப்பட்டவை தான்.

அதே போல் மற்றவர்கள் ஆரம்பித்த நல்ல மாற்றங்களிலும் உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். அதற்கு வலுவூட்டுங்கள்.

முதல் நூறில் ஒருவராக இருந்து பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருக்க முடிந்தால் அதல்லவா அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை?

இன்று நாம் அனுபவிக்கும் எத்தனையோ நன்மைகள் இது போன்ற ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா?

நம் பங்கிற்கு நாமும் ஏதாவது நன்மையை இந்த உலகில் ஏற்படுத்தி விட்டுச் செல்வதல்லவா நியாயம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.