நெடுவாசல் முதல் காவிரி வரை துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இன்று காலை 10.30 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சரவணன், பாடகர் கோவன், அவரது குழுவினர் லதா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் தலைமையில் திருச்சி ஒத்தகடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரம், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, பறை இசை முழங்க ஊர்வலமாக திருச்சி தபால் நிலையம் நோக்கி வந்தனர்.
இந்தப் போராட்டத்தால், தபால் நிலையம் முழுவதும் பலத்தப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரியை காப்போம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை என முழங்கியபடி, கோவன் பாடல் பாட, உற்சாகமாக வந்த ஊர்வலத்தில், குழந்தைகள்,பள்ளி சிறுவர்கள், சிவப்பு நிறக்கொடியை தூக்கிப் பிடித்தபடியும், உணர்ச்சி பொங்க கோஷங்கள் எழுப்பினர். மேலும் காய்ந்த ஓலைகள், பயிர்களைத் தாங்கியபடி வந்தனர். போலீஸ் கைது செய்வோம் என்றும், போராட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்புங்கள் எனப் போராட்டக்காரர்களுக்கு நெருக்கடிக் கொடுத்தனர். அதைக் கண்டு கோபம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,தலைமை அறிவிக்கும்வரை கலைந்து செல்லக்கூடாது. அப்படியே சாலையில் உட்காருங்கள் எனக் கூற மொத்தக் கூட்டமும் அப்படியே சாலையில் அமர்ந்தது.
தொடர்ந்து,குட்டக் குட்ட குனியாதே டெல்லிக்கு அடிபணியாதே. நர்மதா, கோதாவரி, கிருஷ்ணாவுக்கு ஆணையம் அமைத்தார்கள். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். கொளுத்தும் வெயிலில் அமர்ந்துகொண்டு போராட்டம் தொடர்ந்தது.
கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் ராஜு...
காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அனைத்து வேலைகளையும் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்கின்றன. தமிழகத்தை நாசக்காடாக்கிடவே சூழ்ச்சி செய்து, காவிரியைத் தடுத்து வைத்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அப்படியான போராட்டங்கள் வலுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நீர் பங்கீடு செய்யவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, மோடி அரசு மற்றும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. சட்டத்தை நாடாளுமன்றம் உள்ளிட்டோரும் மதிக்கவில்லை. ஆனால் காவிரிக்காகவும், தமிழரின் உரிமைக்காகவும் கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக்கொண்டு போராடும் நம்மிடம் வந்து, போலீஸார் சட்டத்தை மதிக்க வேண்டும் என்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஆனால் மக்கள் தெருவில் இறங்கி, கோட்டை வரை போராடினார்கள். அப்படியான போராட்டங்கள் இப்போதும் தொடரவேண்டும். காவிரி, நெடுவாசல் பிரச்னைகளில் தொடர்ந்து மத்திய அரசு மிதிக்கிறது. தமிழக எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள். நாங்கள் ஸ்டாலினுக்கு சொல்ல விரும்புகிறோம். தமிழக நலனில் அக்கறையிருந்தால் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்வது இருக்கட்டும், நீங்கள் சட்டமன்றத்துக்குள் சென்று எதையும் சாதிக்க முடியவில்லையே. தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யுங்கள். அப்படியாவது தமிழக உரிமைகளைக் காப்பாற்றுவோம் என்று முழங்கினார்.
அதைத் தொடர்ந்தது, பாடகர் கோவன் குழுவினர், ரதயாத்திரைக்கு எதிராகவும், காவிரிக்காகவும் எழுதப்பட்ட பாடல்களை பாடினர். போராட்டம் தொடர்ந்துகொண்டே போக, போலீஸார் டென்சன் ஆனார்கள். திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் வந்தார். அதனையடுத்து போலீஸார், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு வழியாக 1200-க்கும் மேற்பட்டவர்களை, இருபதுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில் ஏற்றிய போலீஸார், திருச்சி மாநகரில் உள்ள ஆறு மண்டபங்களில் அவர்களைத் தங்க வைத்தனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பினர், காவிரிக்காக நடத்திய போராட்டம் திருச்சியில் பெரும்பதற்றத்தை உண்டாக்கியது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.