25/03/2018

தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம்...


தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம்..

மொழி என்பது மனித வளர்ச்சியின் விரிவில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. ஆதிமனிதன் தன்மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றைய மனிதர்களுடன் சைகையால் பரிமாறிக் கொண்டான். அதனால் சைகைமொழி பிறந்தது. சைகைமொழியும் புரியாதவர்களுக்கு தனது எண்ணக் கருத்துக்களை விளக்குவதற்கு உருவங்களைக் கீறியே புரியவைத்தான்.

அதனால் உலகிலுள்ள பண்டைய மொழிகளின் எழுத்துக்கள் யாவையுமே உருவங்களால் கீறிய படங்களிலிருந்தே முகிழ்ந்த வையாகும். பண்டைய தமிழரும் தமது எண்ணங்களை உருவங்களாகவே எழுதினர். தமிழ் இலக்கணநூலான “யாப்பெருங்கல விருத்தியும்” படவெழுத்தை அதாவது உருவெழுத்தைப் பற்றிக் கூறுகின்றது.

பண்டைய தமிழர் எழுதிய உருவங்களைக் கொண்டு அவற்றின் பண்பு கெடாது சங்ககாலத்திற்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் எழுத்தின் வரிவடிவங்களை உருவாக்கினர். அவ்வரிவடிவங்கள் அவர்களின் எண்ணக் கருத்துக்களை மிகஇலகுவாக எழுத உதவின.

அந்த வரிவடிவங்கள் ஒலிவடிவத்தையும் பெற்றிருந்தன. சங்ககாலப்புலவர்கள் இந்த ஒலிவடிவத்திற்கு இந்த வரிவடிவம் என்று அவ்வரிவடிவங்களை வரையறுத்தனர். அதன் காரணமாக அந்த வரியெழுத்துக்களை ஒலிஎழுத்துக்கள் என்றும் நம் முன்னோர்கள் அழைத்திருக்கின்றனர்.

அவ்வுண்மையை கி.பி 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை எனும் தமிழ்மொழி இலக்கணநூல் “மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து” எனச்சொல்வதால் நாம் அறியலாம். இதிலே வரும் “அணுத்திரள் ஒலி எழுத்து” எனும் சொற்பிரயோகம் கிடைத்தற்கரியதொன்றாகும்.

இந்த நன்னூற்சூத்திரம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பிற்கு விஞ்ஞான முறையில் எமக்கு விளக்கம் தருகின்றது. அதாவது தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம் என்கிறது. தமிழருக்கு அறிவியல் தெரியுமா? எனக்கேட்கும் தமிழர்கள் கொஞ்சம் நிதானமாக இச்சூத்திரத்தை படித்து அறிதல் நன்று.

இடிமுழக்கம், பெய்யும்மழை, வீசும்காற்று, சீறும் பாம்பு, கூவும்குயிலென உலகில் எத்தனையோ வகையான ஒலிகள் இருக்கின்றன. விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போமேயானால் இந்த எல்லாவித ஒலிகளையும் நாம் வேறுபடுத்திக் கேட்பதற்கு அணுத்திரள்களே காரணமாகும்.

காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வின் போது அணுத்திரள்களின் அசைவினால் ஒலியலைகள் தோன்றுகின்றன. இந்த ஒலியலைகளில் உருவாகும் மிகநுண்ணிய வித்தியாசங்களால் நாம் வெவ்வேறுவகையான ஒலிகளைக் கேட்க முடிகின்றது. மொழிகளிலுள்ள எழுத்துக்களின் ஒலிவேறுபாட்டிற்கு முக்கிய காரணமாயிருப்பது அணுத்திரள்களேயாகும்.

மேலே குறிப்பிட்டவை போன்ற இயற்கை ஒலிகளோ அன்றேல் பட்டாசு வெடித்தல், கை தட்டல் போன்ற செயற்கை ஒலிகளோ இன்றும் அறிவியல் மூலம் மொழியாக்கப்படவில்லை.

நன்னூல் சொல்வது போல் மொழிக்கு முதற்காரணமாக இருப்பது எழுத்துக்களின் ஒலியே. அந்த எழுத்துக்களின் ஒலிக்குக் காரணம் அணுத்திரளே. அதாவது அணுக்கூட்டத்தின் சேர்க்கையால் எழுத்தின் ஒலி உண்டாகி அவற்றின் சேர்க்கையால் மொழி பிறக்கின்றது.

இந்த அறிவியல் கருத்தைச் சொல்லும் நன்னூலே, இன்னெரு சூத்திரத்தில் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என தமிழ் எழுத்தின் வடிவம் பற்றிக் கூறுகின்றது. பண்டைக்கால (தொல்லை) வடிவத்துடனேயே எழுத்துக்கள் யாவும் இருந்தன எனச் சொல்வதால் எழுத்துக்கு வடிவத்தைக் கொடுத்த அணுத்திரள் ஒலி எழுத்தும் பழைமையானது என்பது பெறப்படும்.

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்களின் பிறப்பின் இயல்பை “உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலையி பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்றமைய….” எனக் கூறியுள்ளார். எழுத்துக்கள் யாவுமே தொப்பூழில் இருந்து உண்டாகும் காற்றில் தோன்றி தலையிலும் தொண்டையிலும் நெஞ்சிலும் நின்று பல், இதழ், அண்ணம், நாக்கு போன்ற உறுப்போடு உறுப்பு சேர்வதால் பிறக்குமாம். தொடர்ந்து உயிரெழுத்துக்களின் பிறப்புப்பற்றிக் கூறுமிடத்தில் “அவ்வழி பன்னீருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலே சொன்னபடி அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னிரெண்டு உயிரெழுத்தும் தொண்டையில் நின்ற காற்றால் ஒலியைப் பெறுகின்றதாம். இவ்விதம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பை ஒலிஎழுத்துக்களின் வாயிலாக மிகவிரிவாக தொல்காப்பியம் கூறுகின்றது.

ஒலியெழுத்து வரியெழுத்தாக மாறிய பின்னர் பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. உதாரணமாக மலை என்பதைக் குறிக்கும் “ΛΛΛ” இந்த உருவெழுத்தானது இப்படி வரியெழுத்தாக மாறி பலப் பல நிலைகளைக் கடந்து வட்டெழுத்தாக வளர்ந்து இன்று நாம் எழுதும் “∆” என்னும் எழுத்தாக வந்துள்ளது.

குகைகளிலும் பாறைகளிலும் எழுதிவந்த உருவெழுத்தை காலப்போக்கில் தேவை கருதி களிமண் தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதினர். இப்படி களிமண்தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் மாவுக்கல்லிலும் எழுதியவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வது மிகக்கடினமான காரியமாக இருந்தது. தமிழர்களின் கல்வியறிவு மேலும் மேலும் வளர எழுதுவதற்கான தேவையும் அதிகரித்தது. அத்துடன் கல்வியறிவு அரசன் தொடக்கம் சாதாரண குடிமகன் வரை பெரும் நகரமாயினும் குக்கிராமமாயினும் எங்குமே பரவியிருந்தது. இந்த உண்மையை சங்ககாலப் புலவர்கள் பாடிய சங்கப்பாடல்களால் அறியலாம்.

இவ்வாறு தமிழர்கள் கல்வியில் மிகஉன்னத நிலை அடைந்ததால் தாம் எழுதியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் சங்கப் புலவர்களின் அவைக்கும், அரசசபைகளுக்கும் எடுத்துச்சென்று பரிசுபெற ஏதுவாக பனை ஓலையில் எழுதத் தொடங்கினர். நாம் புத்தகங்களை எடுத்துச் செல்வது போல் அவர்கள் ஓலைச் சுவடிகளை எடுத்துச் சென்றார்கள்.

களிமண்தட்டு, செம்புத்தகடு, போன்றவற்றில் கோணல்களாகவும் சதுரங்களாகவும் எழுதிய வரியெழுத்தை பனை யோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் போது ஓலை கிழிந்தது. பனைஓலை மிக இலகுவாகக் கிடைத்தபோதும் அதில் எழுதுவது மிகக்கடினமாக இருப்பதைக் கண்டனர்.

எழுதப்படும் பொருளைப் பொறுத்தும் எழுத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டனர். பனையோலையில் எழுதுவதற்கு ஏற்றவாறு எழுத்தை மாற்றி அமைத்தனர். அப்படி அவர்கள் மாற்றியமைத்த எழுத்தை நாம் வட்டெழுத்து என அழைக்கின்றோம். பண்டைய தமிழர்கள் அவ்எழுத்தை கி பி 2ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை எழுதி வந்துள்ளனர். அதற்கான கல்வெட்டாதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. பண்டைய நாணயங்கள் நடுக்கற்கள், பானையோடுகள், ஏட்டுச்சுவடிகள், கோயிற்சுவர்கள் யாவற்றிலும் இவ்வட்டெழுத்து காணப்படுகின்றது.

கிரே என்வர் மாலைதீவின் வட்டெழுத்தை பண்டைய தமிழரின் வட்டெழுத்தை தழுவிய அல்லது சிறிது மாற்றியமைக்கப்பட்ட எழுத்து எனக்கூறியுள்ளார்.

பண்டைய தமிழ் வட்டெழுத்தின் தாக்கத்தை மாலைதீவு மட்டும் அல்லாமல் பர்மா, கம்போடியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, யாவா போன்ற உலகின் பல நாடுகளின் கல்வெட்டுகளிலும் காணலாம்.

வட்டெழுத்தின் காலத்திற்கு முன்பிருந்தே சங்கத்தமிழர் தாம் எழுதிய எழுத்தை இரண்டு வகையாகப் பிரித்து பெயரிட்டு அழைத்தனர்

1. கோலெழுத்து
2. கண்ணெழுத்து.

கோலால் எழுதிய எழுத்தை கோலெழுத்து என்றனர். அதாவது வண்ணமையில் தோய்த்த தூரிகை, எழுதுகோல் போன்றவற்றைக் கொண்டு துணியின் மேலோ தோலின் மேலோ எழுதுவதை கோலெழுத்து என்றழைத்தனர்.

இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் எழுதுகோல் பாவித்து எழுதி வந்திருக்கிறார்கள் என்பதை “எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல்” எனும் திருக்குறள் அடி எமக்குச் சொல்கிறது. மையைத் தொட்டு எழுதும் பேனாவை நாமும் எழுதுகோல் என்றுதானே அழைக்கிறோம்.

கோலால் மையைத்தொட்டு எழுதும் பொருளின் மேற்பரப்பில் எழுதாது அதன் மேற்பரப்பை உட்குழிந்து எழுதிய எழுத்தே கண்ணெழுத்து. (கண் என்பதற்கு குழி என்ற கருத்தும் இருக்கின்றது.)

ஊருக்குள் புதிதாக வருபவர்கள் கண்ணெழுத்தால் எழுதிய தமது பெயர் பொறித்த பொதிகளைக் கொண்டு திரிவார்கள் என்றும் கண்ணெழுத்தை எழுதியவர்களை கண்ணெழுத்தாளர் எனவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. “வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” இன்றும் நாம் பிரயாணம் செய்யும் பொழுது பெட்டிகள் மாறாமல் இருக்க எமது பெயரும் முகவரியும் எழுதுகிறோம் தானே.. அதுபோல் அன்றும் எழுதியிருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.