10/04/2018

உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு...


ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம்....

இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராச(ஜ)ன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப் பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்படுகிறது.

சங்ககாலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியிருந்ததை “கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) எனக் சங்கப் புலவர் கபிலரும், “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” (பதிற்றுப்பத்து 74) என அரிசில்கிழாரும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது.

இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், அவர்களது சிறப்புப் பெற்ற மேலைக் கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பெருவழி பிற்காலக் கல்வெட்டுக்களில் “கொங்கப் பெருவழி” என அழைக்கப்படுவதன் மூலமும், இப்பெருவழியில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க ரோம நாணயங்கள் கத்தாங்கண்ணி, சூலூர், வெள்ளலூர், வேலந்தாவளம் போன்ற இடங்களில் கிடைத்ததன் மூலமும் இது உறுதிபடுத்தப்படுகிறது.

15 கெ(ஹெ)க்டேர் (Hectares) பரப்பளவு உள்ள வாழ்விடப்பகுதியில் 9 அகழாவுக் குழிகளும், 40 கெக்டேர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில் ஒரு ஈமச்சின்னமும் அகழப்பட்டன. இவ்வகழாய்வில் வெளிப் போந்த பண்பாட்டு எச்சங்கள் இவ்வூர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத் தொழில் செழிப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று இருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகின்றது. யானை தந்தத்தால் ஆன அணிகலங்களும் இங்கு கிடைத்துள்ளன.

இத் தொழிற் கூடங்கள் குறிப்பாக பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்னீலியன், இரத்தினக் கல் வகை (agate), செவ்வந்திக் கல் (amethyst) போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம் அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டு அகழாய்வின் சிறப்பம்சமாகும்.

இத் தொழிற் கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினஞர்களும் இங்கு வந்துள்ளதை தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் ஊறுதிபடுத்துகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச் சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள் கங்கைச் சமவெளிப்பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டுக்கும் கி.மு 2 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம் மட்பாண்டம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்.

இக்காலத்தை மேலும் உறுதி படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த கரியமிலக் காலக் கணிப்புக்காக அமெரிக்காவில் உள்ள காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கொடுமணலின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த ஐநூற்றிக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளுக்கும் பொருந்தும்.

அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தை கி.மு. 5 ம் நூற்றாண்டு எனலாம். அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், ஸ்ந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவெ எழுத்தறிவு பெற்று மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகள் உறுதிபடுத்துகின்றன.

எனவே கொடுமணல் என்ற இச்சிற்றூர் சங்ககாலத்தில் மிகச் சிறந்த தொழிற் கூடங்களைக் கொண்ட தொழில் நகரமாக, உள்நாட்டு, வெளிநாட்டு வணிக உறவுகளைக் கொண்ட வணிக நகரமாக, எழுத்தறிவு பெற்ற நகரமாக சமூக, பொருளாதார நிலையில் மேம்பட்ட சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இவ்வகழாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்ட சான்றுகள் மூலம் உய்த்துணர முடிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.