காவிரித் தடுக்கும் கன்னடனுக்கு தமிழ்நாட்டின் நெய்வேலி மின்சாரத்தை அனுப்பக் கூடாது என்று தமிழ்நாடெங்கும் இன்று குரல்கள் கேட்கின்றன. அக்கோரிக்கையின் சுருக்கமான வரலாறு இது..
தமிழ்நாட்டின் நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்லும் செய்தியை உலகிற்கு முதன் முதலில் அறிவித்தப் போராட்டம் 17.07.1991 அன்று, ஊடகங்களுக்கோ, காவல்துறைக்கோ எவ்வித அறிவிப்பும் இன்றி - தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி) தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில் - நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து 26 விவசாயத் தோழர்கள் நடத்திய போராட்டமாகும்! கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட 26 தோழர்களும் பின்னர் பிணையில் வெளி வந்தனர்.
அதன்பிறகு, 22.12.2003 அன்று தோழர் பெ. மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கம், தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், தோழர் பொழிலன் தலைமையிலான தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தோழர் அ.கோ. கஸ்தூரிரங்கன் தலைமையிலான தமிழர் தன்மானப் பேரவை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து “தமிழ்த்தேசிய முன்னணி” என்ற கூட்டமைப்பின் சார்பில் 2003 திசம்பரில் கல்லணையிலிருந்து நெய்வேலி வரை நடைப்பயணம் மேற்கொண்டு நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் 272 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இயற்கை வேளாண் அறிவியலாளர் - ஐயா கோ. நம்மாழ்வார் இந்நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
2012இல் தமிழ்நாடு கடும் மின்வெட்டை சுமந்து வந்த நிலையில், 21.02.2012 அன்று தமிழ்நாடெங்கும் நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கே கேட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 10.08.2012 அன்று நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகத்தை தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில் முற்றுகையிட்ட 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 18.10.2012 அன்று கிருட்டிணகிரி மாவட்டம் - சூளகிரியில் நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு பிரித்து அனுப்பும் மின் நிலையத்தை வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் 56 பேர் முற்றுகையிட்டுக் கைது செய்தனர்.
அதன்பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கே கேட்டு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து, 25.12.2012 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவே நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கு கேட்டு இந்தியத் தலைமையமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.
இப்போது, மீண்டும் இன்று (10.04.2018) நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு அனுப்பாதே என்ற கோரிக்கையுடனும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்தும் நெய்வேலி முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக இதை காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
தமிழர் தேசிய முன்னணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, மனித நேய சனநாயகக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, எஸ்.டி.பி.ஐ., மே பதினேழு இயக்கம், தமிழக மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்கின்றனர். நீங்களும் வாருங்கள்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.