மீத்தேன், ஐட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காகதான் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்து விடாமல் இருக்க பிரதமர் மோடி மறைமுகமாக செயல்பட்டு வருகிறார் என்று தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று காலை தொடங்கியது.
இந்த ஊர்வலம் முக்கிய ஊர்கள் வழியாக நேற்று மாலை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அங்கு மக்கள் மத்தியில் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.
அவர் பேசியது: "தமிழகத்தின் காவிரி உரிமையை பிரதமர் மோடி மீட்டு தர வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். விளைநிலங்களில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காகதான் தண்ணீர் கேட்கிறோம். எங்கள் உணர்வுக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும்.
காவிரி தண்ணீருக்கான போராட்டத்தை நசுக்கி விடாதீர்கள். ஒன்றிணைந்து போராடினால்தான் காவிரி உரிமையை மீட்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்று அவர் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "காவிரி டெல்டாவை அழித்துவிட்டு அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி மீத்தேன், ஐட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காகதான் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துவிடாமல் இருக்க பிரதமர் மோடி மறைமுகமாக செயல்பட்டு வருகிறார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராடுவோம்.
வேதாரண்யத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் இன்று (நேற்று) இரவு கல்லணையில் முடிவடைகிறது. திருச்சியில் தங்கும் நாங்கள் நாளை (அதாவது இன்று) புறப்பட்டு 22 மாவட்டங்களில் 2500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வருகிற 29-ஆம் தேதி திருவாரூரில் பயணத்தை முடிக்கிறோம்.
மேட்டூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணியும், வேலூரில் ஜி.கே.வாசனும், சென்னையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்" என்று அவர் கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.