18/05/2018

அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா?


புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் காவல்துறையினரால் கைது...

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ளது போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டத்தை தந்திரமாகத் தாக்கல் செய்து, தமிழினத்தை மீண்டும் வஞ்சிக்க முயன்றுள்ளது இந்திய அரசு! இந்திய அரசின் இந்த வஞ்சகச் செயலைக் கண்டித்து, இன்று (17.05.2018) புதுச்சேரியில், இந்திய அரசு ஆவணக் காப்பகம் முற்றுகையிடப்பட்டது.

புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய அரசு ஆவணக் காப்பகத்தை முற்றுகையிடும் இப்போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார்.

உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் திரு. வெ. கார்த்திகேயன், நா.த.க. தொழிலாளர் நலச்சங்கச் செயலாளர் தோழர் இரமேசு, இளைஞர் பாசறை தோழர் மணிபாரதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் மணி, ஆனந்தன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25 தோழர்கள் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது, தன்வந்திரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.