10/05/2018

திருமானூர் மணல் குவாரி முற்றுகை...


மக்கள் விரோத தமிழ்நாட்டு அரசாங்கத்தால் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நடத்தப்படும் மணல் குவாரிக்கு எதிராக, பல நாட்கள் கொந்தளிப்புக்குப் பிறகு மக்கள் தன்னெழுச்சியாக முற்றுகையிட்டு திரண்டிருக்கின்றனர். அறவழியில் இரண்டு நாட்களாகப் போராடிவரும் மக்களை காவல்துறை அச்சுறுத்தி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வருடம் முழுக்க  வற்றாமல் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த கொள்ளிடம் ஆறு, தற்போது மழைக்காலங்களில் கூட சொற்பத் தண்ணீரே ஓடும் நிலைக்கு ஆக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் ஆண்ட, ஆளும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த பணப்பேராசை ஒப்பந்தக்காரர்களால் கல்லணை தொடங்கி விழுப்பணங்குறிச்சி கிராமம் வரை இயக்கப்படும் மணல் குவாரிகளே. கொள்ளிடக் கரையின் இருபுறமும் இயக்கப்படும் பல குவாரிகள் சட்டவிரோதமானவையே.

அனுமதி வாங்கப்பட்ட குவாரிகளிலும்கூட அரசின் குவாரி விதிமுறைகளை மீறி, எந்தவித சட்ட நடவடிக்கைகளும் இல்லாமல் மணல் அள்ளப்படுகிறது. ஆனால் கரையோர கிராம மக்கள் தங்களின் தேவைக்காக மாட்டு வண்டியிலோ / சணல் சாக்குப் பைகளிலோ மணல் அள்ளும்போது காவல்துறை வழக்கு பதிந்து ரூ. 10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் கிராம மக்களால் இவ்வளவு பெரிய தொகையை எப்படி கட்ட முடியும்?

இந்த கிராம மக்கள் கொள்ளிட ஆற்றின்மீது ஆண்டாண்டுகளாக வரலாற்று ரீதியாக, பாரம்பரிய உரிமைப் பெற்றவர்கள். இந்த ஆற்றை கிராம நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பதும், ஆற்றின் வளங்களை தங்கள் தேவையறிந்து அனுபவிப்பதும் இந்தப் பகுதி மக்களின் மரபான பண்பு. பணமுதலைகளின் நலனுக்காக குவாரிகள் அமைத்து மக்களின் இத்தகைய உரிமைகளைப் பறித்திருக்கிறது, தமிழக அரசு.

கொள்ளிடக் கரையோர கிராமங்கள் மின் மோட்டார் மூலமாக பாசன விவசாயம் செய்து வருகின்றனர். கொள்ளிட ஆற்றில் தண்ணீர் வற்றியதால் 2, 3 ஆண்டுகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகள் மட்டுமே உள்ள இந்த கிராமங்கள் விவசாயம் செய்ய முடியாமல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பல கிராம மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். மக்கள் திரட்சியின் உறுதி வெற்றியையே கொடுத்துள்ளது.

கொள்ளிடக் கரையோர கிராம மக்களோடு துணை நிற்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.