கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை டிவி வட்டமேசை விவாதத்தில் பேசிய தமிழிசை, "வன்முறையை ஒடுக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது" என்றார். அதற்கு தன் சுற்றின்போது பதிலளித்துப் பேசிய இயக்குநர் அமீர், "அப்படியெனில் கோவையில் சசிகுமார் உடலை எடுத்துச் செல்லும் வழியில் பாஜகவினர் நடத்திய வன்முறைக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா?" என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு விடையளிக்க முடியாததனால், வழக்கம் போல் ஆட்டையை கலைத்து கூச்சலிட்டனர் பாஜகவினர். சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, அமீரை அங்கிருந்து பாதுகாப்பாக தன் காரில் அழைத்துச் சென்றார். அமீரை தாக்குவதற்காக கொலைவெறியுடன் அலைந்த பாஜக கும்பல், தனியரசு கட்சியினரின் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அமீர் அதில் இல்லாததனால் தப்பித்தார்.
மேற்கண்ட நிகழ்வில் கூச்சலிட்டது, அடிக்கப் பாய்ந்தது, அச்சுறுத்தியது, தாக்குதல் நடத்தியது எல்லாமே பாஜகவினர் தான். இப்படி பகிரங்கமாக ஒரு ஊடக விவாதத்தில் வன்முறை செய்ததற்காக பாஜகவினர் மீதும் அதை தடுக்கத் தவறிய தகுதியற்றத் தலைவர் தமிழிசை மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், வன்முறைக்கு இலக்கான புதிய தலைமுறை மீதும் அமீர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு இப்படி நடந்துகொள்வது ஒருபுறமெனில், புதிய தலைமுறை நடந்துகொள்வது அதைவிட அபத்தம். "விருந்தினர்கள் பேசுவதற்கெல்லாம் ஊடகம் பொறுப்பா?" என்று தமாகா ஞானதேசிகன் அரசை நோக்கி கேட்டுள்ள கேள்வியை புதிய தலைமுறையே ஒளிபரப்புகிறது. இது என்னவோ அமீர் தவறு செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
"அமீர் கேட்ட கேள்வி நியாயம் தான். அதைக் கேட்க அவருக்கு உரிமை உண்டு. அதற்கு பதில் சொல்லாமல் வன்முறை செய்தது பாஜக தான். ஆனாலும் எம்மீதும் அமீர் மீதும் வழக்கா?" என்று உண்மையை சொல்லி நியாயம் கேட்க வேண்டிய புதிய தலைமுறை, வேறு குரலில் பேசுகிறது.
அரசு தான் அப்படியெனில் ஊடகமும் அவ்வாறே இருந்தால் பாஜக வன்முறை செய்யாமல் வேறு என்ன செய்யும்?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.