கடந்த வாரம் நான் என் குடும்பத்தினர்கள் எல்லோரும் தஞ்சை பெரிய கோவில் சென்றிருந்தோம். அதிர்ந்து போனோம்.. எங்களுக்கு பல கேள்விகளும், சந்தேகமும் எழுந்தது.
இராஜராஜேஸ்வரம்...
எத்தனை சாதி அமைப்பு ?எத்தனை வரலாற்று ஆய் சங்கங்கள் ? எத்தனை வீரர்கள் ? கண்கள் பனிக்க இதயம் நெகிழ ,வாய் சோழம் என்று கூச்சலிட , துணுக்கர்கள், பாத சேகரன், முக சேகரன், குண்டி சேகரன் என எத்தனை பெயர்கள் , போதாததற்கு முகநூலில் எவ்வளவு குழுக்கள் ஏன் இவ்வளவும் ?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மடிந்த ஒரு மாமனிதரது புகழை சாதனையை யாசித்து அதனுடன் ஒட்டுண்ணிகளை போல ஒட்டி நாமும் ஏதாவது புகழ் பெறமாட்டோமா ? அந்த பெயரை உச்சரித்தால் அவரை பற்றி பேசினால் எல்லோருக்கும் அவர் மேல் உள்ள தாபத்தில் ஒரு சதவிகிதம் நம்மீது படராதா ? என்ற அல்ப ஆசை..
இராஜராஜரின் மீதும் அவர் கட்டிய கோவில்கள் மீதும் அளவு கடந்த ஆசையும் நேசமும் எனில் ஏன் உங்கள் ஆவல் தஞ்சை இராஜராஜெச்வரத்தோடு நின்று போகிறது அவர் கட்டிய கோவில்களை அவர் கல்வெட்டு தாங்கிய கோவில்களை நோக்கி உங்கள் காதலும் ஆர்வமும் விரிய வேண்டாமா ? அதை காப்பதற்கு உங்கள் கரங்கள் நீள வேண்டாமா ?
இப்படியான மனிதர்களிடயேவா நாம் தமிழ் நாகரீகத்தை உயர்த்திப்பிடிக்கவும் , தானழிந்தாலும், தன் சந்ததியினர் மறைந்தாலும் காவிரிக்கரை நாகரீகத்தின் சாட்சியாக , தமிழ்ச் சமூகத்தின் கட்டிடப் பொறியியலின் உச்சத்தை காண்பிக்கவும் இந்த இராஜராஜெஸ்வரத்தை அரும்பாடு பட்டு எழுப்பினோம் என்ற கேள்வி அந்த மனிதனின் ஆன்மாவை அசைத்துக் கொண்டிருக்கும் விதமாகவே இன்று இராஜராஜேஸ்வரத்தில் செயல்கள் அரங்கேறுகின்றன.
எந்த விதமான தேவையும் இல்லாமலே விமானத்தை சுற்றியுள்ள செங்கல் தளம் பெயர்க்கப்படுகிறது . நூற்றாண்டு கடந்து உறுதியுடன் நன்றாக இருக்கும் கோவில் சுவரின் பூச்சை உடைத்து எடுத்துவிட்டு திருப்பணி என்ற பெயரில் அதே சுவருக்கு சிமென்ட் பூசும் அவலத்தை திருவையாறில் கண்டிருக்கிறேன்.
சிற்பங்கள் நிறைந்த திருவேதிகுடி கோவில் சுத்தம் என்ற பெயரில் மணல் வீச்சால் சிதைக்கப்பட்டதை கண்டு கலங்கியிருக்கிறேன் .அப்போதெல்லாம் அது ஆதீன கோவில் ,அறநிலைய துறை கோவில் அவர்கள் பணம் வேண்டுமெனில் திருப்பணி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சீரழிப்பார்கள் என்ற மொட்டை சமாதானமாவது மனதில் இருந்தது .
உலக பாரம்பர்ய சின்ன பட்டியலில் தமிழகத்தின் முக்கிய சின்னம் .ஒரு மாநகரின் மையப்பகுதியில் இருக்கிறது. நன்றாக இருக்கும் தளத்தை பலர் கண்ணெதிரே உடைத்தெறியலாம். லாரிகளில் வாரிக்கொண்டு போகலாம் எனில் ? தொல்லியல் துறையின் ஒப்புதலுடன் தான் இது நடை பெறுகிறதா ? தொல்லியல் அறிஞர் இருவர் ஆனந்த விகடனின் நேர்காணலில் இது கூடாது இது அதன் கட்டமைப்புக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தும் தொடர்ந்து நடக்கிறது என்றால் ? எவருடைய திட்டம் இது ?
எது செய்தாலும் எவரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் எனில் சோழர் சோழர் என்றெல்லாம் ஏன் மார் தட்டுகிறீர்கள் அவருடைய புகழை பங்கு போட மட்டும் ஏனய்யா அவ்வளவு அடித்து பிடித்துக்கொண்டு தவளை
கூச்சல் எழுப்புகிறீர்கள் ?
இரண்டடுக்கு தளத்தை பெயர்க்க முடியவில்லை மிக கடும் முயற்சியெடுத்து பெயர்த் தெடுக்கிறார்கள் . அந்த இடத்தில் தளம் சேதமடைந்துள்ளதாம் . அதனால் புதிய கற்கள் கொண்டு மாற்றுகிறார்களாம் . சேதமடைந்த தளம் உங்கள் பார்வையில் இருக்கிறது இரண்டடுக்கு தளத்தை ஏன் பெயர்க்க வேண்டும் .
பழைய சுண்ணாம்புக்கலவையின் ஆயுள் நான் கண்ட கட்டிடங்களின் ஒப்பீட்டில் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் .இவ்வவளவு வலிமையான அழுத்தமான கட்டுமானத்தை ஏன் பெயர்த்தெடுக்கிறார்கள் .
அனுமதியோடே ஏலம் விட்டே வேலை நடை பெறுகிறது .வந்தவர் இராஜராஜரா இல்லையா என்று திரி கிள்ளி விட்டு நடப்பதென்ன ? விட்டில்கள் அதை சுற்றி மட்டுமே பறப்பதென்ன ? ,மலைகளை போல , மணலை போல காணாமல் போகப்போகிறதா ?
இராஜராஜேஸ்வரம்.. என் சிவனே என்ன செய்ய நினைத்திருக்கிறாய் ?
தகவல் - நண்பர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.