நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருப்பது விவசாயமாகும். அதிலும் குறிப்பிடும்படியாக இருப்பது தேயிலை விவசாயமாகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக தேயிலை விவசாயம் செய்து வந்து நிலையில்,கடந்த சில வருடங்களாக பசும் தேயிலைக்கு சரியான விலை கிடைக்காமல் தங்களுக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை விற்று சமவெளி பிரதேசங்களுக்கு செல்லும் நிலைக்கு இங்கு உள்ள தேயிலை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நீலகிரியின் பிரதான தொழிலான தேயிலை விவசாயம் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டு வருகிறது.இதனை கருத்திற்கொண்டு இங்கு உள்ள பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தேயிலைக்கு சரியான விலை கிடைக்க போராடி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரியில் புதியதாக உருவெடுத்திருக்கும் ‘படுக தேச பார்ட்டி’ எனும் அமைப்பு தேயிலை விலைக்கு தற்போது போராட்டங்களை கையில் எடுத்துள்ளது.இதன் முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலைநிர்ணயம் செய்யக்கோரியும் நிலுவை தொகையை வழங்க கோரியும் குன்னுார் தேயிலை வாரியம் அலுவலகம் முன்பு தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலதலைவர் ‘அய்யாக்கண்ணு’ தலைமையில் படுக தேச கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை தென்னிந்திய தேயிலை வாரியஅலுவலகம முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் படுக தேச கட்சியினரும் தேயிலை விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்களை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசுவிடம் பேச்சு வார்த்தை நடத்த அழைத்துச்சென்றனர். அங்கு 2 மணிநேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது,வரும் 15ந்தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்கப்படும் என செயல்இயக்குனர் பால்ராசு தெரிவித்ததை அடுத்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.மேலும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவதாக போராட்டாக்குழுவினர் தெரிவித்தனர்.
இது குறித்து தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலதலைவர் ‘அய்யாக்கண்ணு’ கூறுகையில்,
தேர்தல் வரும் போது விவசாயிகள் நாட்டின்முதுகெலும்பு தேர்தல் முடிந்தவிட்டால் இந்தநாட்டின் அடிமைகள். விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்க மறுக்கின்றனர்.பசுந்தேயிலைக்கு விலையாக ருபாய் 50 கொடுக்கலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது கூட்டுறவு சங்கத்தில் லாபம் கிடைத்தது. ஊட்டி தேயிலை என்று விற்பனை செய்தார்கள். நான்கு கிலோவிற்கு 120 ருபாய் ஆகிறது இத்துடன் ருபாய் 50 ஐ சேர்த்து 200 ருபாய்க்கு விற்பனைசெய்யலாம் , இதனால் பொதுமக்களும் தேயிலைவிவசாயிகளும் பயன்பெறலாம் , தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் , படுக இன மக்கள் செய்யும்தேயிலை தொழில் அழியும் விளிம்பில் உள்ளது. படுக மக்களை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் என கூறினார்.
நீலகிரியில் பல ஆண்டுகளாக இருந்து வரும் தேயிலை விலை பிரச்சனை தற்போது இவர்கள் எடுத்திருக்கும் முயற்சியால் முடிவுக்கு வருமா என்பதே இங்கு உள்ள மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.