கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பயிலும் மாணவிகளின் சங்கடம் தீர்க்கப் பள்ளியில் நாப்கின் எரியூட்டி மெஷின் வைத்து பாராட்டை பெற்றிருக்கிறார் ஆசிரியர் ஒருவர்.
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. திருச்சி மாவட்ட எல்லையில் கடைக்கோடி கிராமம் தான் இந்த பொய்யாமணி. இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார் பூபதி. பள்ளியில் வைஃபை வசதி தொடங்கி மாடியில் இயற்கை தோட்டம் வரை சகல வசதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறார். அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பற்றி லோக்கல் சேனலில் தொடர்ச்சியாக விளம்பரம் கொடுத்து, இந்த அரசுப் பள்ளியில் கூடுதலாக நாற்பது மாணவர்களைத் தன்னிச்சையாக சேர வைத்து அசத்தி இருக்கிறார். இதனால், இந்தப் பள்ளிக்கு சமீபத்தில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைத்தது. இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் சங்கடம் தீர்க்கப் பள்ளி வளாகத்தில் நாப்கின் எரியூட்டி இயந்திரத்தை வைத்து பாராட்டை பெற்றிருக்கிறார் பூபதி.
இதுபற்றி பூபதியிடம் பேசும்போது, ``இங்குள்ள மக்கள் அனைவரும் ஏழ்மையானவர்கள். படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள். அதனால்தான், 'தங்கள் கஷ்டம் தங்களோடு போகட்டும். பிள்ளைகளாவது நல்லா படிக்கட்டும்' என்றபடி தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார்கள். ஆனால், பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், ஏதோ தீட்டாக கருதி அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தார்கள். தேர்வு காலங்களில்கூட மாணவிகளை இப்படி வீட்டில் இருக்க வைக்கும் போக்கு இருந்தது.
இதனால், பல மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியானது. அதனால், இங்குள்ள ஆசிரியர்களின் உதவியோடு பெற்றோர்களிடம் பெண்கள் நாப்கின் பயன்படுத்துவது பற்றி வகுப்பெடுத்தோம். அதன் விளைவாக மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். பெண்கள் எவ்வளவோ உச்சத்தைத் தொட்டுவிட்டார்கள். இந்த விசயத்திற்காக வீட்டிலேயே முடங்கிவிடக்கூடாது என்பதற்காகப் பள்ளி வளாகத்தில் நாப்கின் எரியூட்டி இயந்திரத்தை வைத்திருக்கிறோம்.
பள்ளியில் மாணவிகள் தாங்கள் பயன்படுத்திய நாப்கினை அழிப்பதற்காக இந்த இயந்திரத்தை வைத்துள்ளோம். கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவியோடு ஒரு நாப்கின் எரியூட்டி இயந்திரம் மற்றும் எட்டு கணினிகளை வாங்கி அமைத்துள்ளோம். அதாவது, நாங்கள் எண்பதாயிரத்து முந்நூறு ரூபாயைக் கட்டினோம். அரசு இரு மடங்கு பணம் தரும். கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் இந்த எரியூட்டி இயந்திரத்தை வாங்கி அமைத்துள்ளோம். பள்ளி சார்பாக அரசுக்குச் செலுத்திய நிதியைச் சென்னை இராதாகிருஷ்ணன் சுவாமிஜி அறக்கட்டளை கொடுத்து உதவியது. கிராமத்துப் பெண் பிள்ளைகளுக்கு எல்லா நேரமும் வானில் பறக்க இறக்கைக் கொடுக்கவே எங்களின் இந்தச் சின்ன முயற்சி. இதற்கு, ஊரக வளர்ச்சி முகமையின் கரூர் மாவட்ட திட்ட இயக்குநர் கவிதா பெரிதும் உதவினார். மாவட்ட கலெக்டர் அன்பழகனை வைத்து இந்தத் திட்டத்தை திறக்க இருக்கிறோம்" என்றார் உற்சாகமாக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.