03/07/2018

விசாரணை அதிகாரி மாற்றம்: முருகன் சிலை மோசடி குற்றவாளிகளை காப்பாற்ற சதியா?



பழனி முருகன் கோவிலுக்கு ஐம்பொன் சிலை செய்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது குறித்த வழக்கின் விசாரணை அதிகாரி கருணாகரன் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முருகன் சிலை மோசடி வழக்கின் விசாரணை 20 நாட்களில் முடிவடையவிருந்த நிலையில், விசாரணை அதிகாரி மாற்றப்பட்டிருப்பது  இவ்விஷயத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்த ஐயத்தை அதிகரித்துள்ளது.

காவல்துறைத் தலைவர் பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையில் தமிழகத்தில் நடைபெற்ற சிலைக் கடத்தல் மற்றும் மோசடிகள் குறித்த உண்மைகள்  அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. பழனிமலை முருகனுக்கு ஐம்பொன்னில் சிலை செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்ததை இந்தப் பிரிவு தான் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கருணாகரன், இவ்வழக்கு  குறித்த முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியிருப்பதாக கூறப்படும் நிலையில் தான் கடந்த 29.06.2018 அன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் கோவை மாவட்ட மின்திருட்டுத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பழனி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வெங்கட்ராமன்  முருகன் சிலை மோசடி வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது இயல்பாக நடந்த மாற்றமாக தெரியவில்லை.

பழனி மலை முருகன் சிலை மோசடி தனித்த நிகழ்வாகத் தோன்றவில்லை. மாறாக அதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. பழனி முருகன் கோவிலில் ஒன்பது மூலிகைகளால் உருவாக்கப்பட்ட  நவபாஷான முருகன் மூலவர் சிலை இருக்கும் நிலையில் புதிதாக ஐம்பொன் சிலை செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால், மூலவர் சிலையை மறைக்கும் வகையில் ஐம்பொன் சிலையை அமைத்தால், மறைவாக உள்ள நவபாஷான சிலையை பயன்பாட்டிலிருந்து அகற்றி, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கடத்தி விடலாம் என்ற சதித்திட்டத்தின் அங்கமாகத் தான் புதிய சிலை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐம்பொன் சிலை செய்வதிலேயே மோசடி நடந்து, அந்த சிலை கறுத்து விட்டதால் ஒரு கட்டத்தில் அதை அகற்\ற வேண்டியதாகிவிட்டது. அதனால் தான் நவபாஷான சிலை கடத்தலிலிருந்து தப்பியது.

இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டியுள்ள கருணாகரன், அவர்களை கைது செய்ய ஆயத்தமான நிலையில் தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, முருகன் கோவிலின் முன்னாள் இணை ஆணையரும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினருமான கே.கே. ராஜா, முன்னாள் அதிகாரிகள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோர் ஏற்கனவே கைதாகியுள்ள நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் தான், அதைத் தடுக்கும் வகையில் விசாரணை அதிகாரி கருணாகரண் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக கடந்த 27.06.2018 அன்று உயர்நீதிமன்றத்தில் நேர் நின்ற பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்குகளின் விசாரணையில் தமக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தமக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் தெரியாமலேயே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் குற்றஞ்சாற்றியிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி,‘‘ உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்பட்டால் காவல்துறை தலைமை இயக்குனரை நீதிமன்றத்திற்கு அழைக்க நேரிடும்’’ என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதை சிறிதும் மதிக்காமல், அடுத்த இரண்டாவது நாளே, முக்கிய விசாரணை அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், அதன் பின்னணியில் ஏதோ முக்கியத் தலைவரை காப்பாற்ற சதி நடப்பதாகத் தான் பொருள் ஆகும். இதை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் மற்றும் மோசடிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகத் தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் செயல்பட்டு வரும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் அதன் தலைவருக்கே தெரியாமல்  இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையில் தான் அரசின் செயல்பாடுகள்  உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆலயங்களும், அவற்றில் உள்ள கடவுள் சிலைகளும் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை ஆகும். அதற்கு எதிரான வகையில் செயல்பட்டு சிலைக் கடத்தல் மற்றும் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் ஆகும். அதற்கு மாறாக குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டால் மக்கள் கடுமையாக தண்டிப்பார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.