19/07/2018

காவிரி ஆற்றைச் சுத்தம் செய்த திருச்சி மாணவர்கள்...


பொங்கி வரும் காவிரியை வரவேற்கும் விதமாக திருச்சியில் மாணவர்கள் காவிரி ஆற்றைச் சுத்தம் செய்தனர்.

கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் 123.10 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதேபோல், கபினி அணையில் 2.282.50 அடி தண்ணீர் உள்ளதால், நீர்வரத்து கூடியுள்ளதால்,  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1,05,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகள் அனைத்தும் முழுமையாகத் திறந்துவிடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 80 அடி எட்டியுள்ள நிலையில் இன்னும் 10 நாள்களில் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரி, காவிரி நீரைக் கடலில் வீணாகக் கலப்பதை தடுக்க வேண்டும் என அரசுக்குச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சியில் தண்ணீர் அமைப்பின் சார்பில் காவிரியை வரவேற்கும் விதமாக  காவிரிக்கரைகளைத் தூய்மைப்படுத்தும்  பணி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நடைபெற்ற இந்தப் பணியை  திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தண்ணீர் அமைப்பின் தலைவர் சேகரன் தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஜென்னிஸ் உணவக மேலாண்மைக் கல்லூரி முதல்வர் பொன்னிளங்கோ மற்றும் தண்ணீர் அமைப்பின்  செயலாளர் நீலமேகம், இணைச் செயலர்கள் சதீஷ்குமார், தாமஸ் மற்றும் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா, லலிதா, மரகதம், ரமணா, தங்க யாழினி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள்  சகிதமாக தண்ணீர் அமைப்பினர் தூய்மைப் பணியைச் செய்தனர். அவர்களுடன் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் அவருடன் இணைந்துகொண்டு, காவிரிக் கரைகளில் படித்துறைகளின் ஓரங்களில் மண்டிக் கிடக்கும் மக்காத பிளாஸ்டிக் பைகள், சடங்குகளுக்காக பொதுமக்கள் வீசி விட்டுச் சென்ற பழைய துணிகள், காலணிகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர். அப்போது மாணவர்கள், காவிரியில் நீர்வரும் காலத்தில் கரைகளை தூய்மையாய் பாதுகாப்போம். நீர் நிலைகளை அசுத்தமாகாமல் தடுப்போம் என விழிப்பு உணர்வு பரப்புரையை பொதுமக்களிடம் விளக்கினர்.

ஓடி வரும் காவிரியைப் பார்ப்பதற்கு பலரும் ஆர்வமாக உள்ள நிலையில், மாணவர்கள் மிக ஆர்வமாக காவிரியைச் சுத்தம் செய்தது பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.