05/08/2018

சிலுவை யுத்தங்கள் − 18...


இரண்டாவது_சிலுவைப்_போர் (கி.பி − 1147 − 1149) −2...

இரண்டாவது சிலுவை யுத்தத்தைத் தொடர்ந்து நூருத்தீன் ஸன்கீ:

இரண்டாவது சிலுவை யுத்தத்தில் சிலுவை வீரா்கள் அடைந்த தோல்வி,சிரியாவில் காணப்பட்ட சிலுவை அரசுகளுக்கெதிரான தாக்குதல்களைத் தொடர நூருத்தீன் ஸன்கீக்கு உந்துதலைக் கொடுத்தது.

கி.பி.1149−ஆம் ஆண்டு அன்தாக்கியா ஆட்சியாளரைத் தோற்கடித்து அவரைக் கொலை செய்தும் விட்டார். இதன் பின்னால் இவ்வாட்சியின் கீழிருந்த பல நகரங்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த நூருத்தீன், சிலுவை வீரா்கள் நிறுவிய ரஹா ஆட்சியின் கீழிருந்த எஞ்சிய பிரதேசங்களையும் கைப்பற்றினார். கி.பி.1151−இல் ரஹா ஆட்சித் தலைவரையும் சிறைப்பிடித்தார்.

கி.பி.1154−இல் அன்தாக்கியா ஆட்சிப் பிரதேசத்திற்குள் நுழைந்து மூன்றாம் பொஹீமென்ட் என்பவனையும் அவனது சிநேகிதரான திரிப்போலியின் ஆட்சியாளர் மூன்றாம் ரெமொன்ட் என்பவனையும் கைது செய்தார். இவர்கள் தண்டப்பணம் செலுத்தும் வரைக்கும் விடுவிக்கப்படவில்லை.

இது ஒரு புறமிருக்க,மறுபுறமாக டமஸ்கஸ் பிரதேசம் முஸ்லிம் ஆட்சியாளர் முஈனுத்தீன் என்பவரின் அதிகாரத்தின் கீழிருப்பதை நூருத்தீன் விரும்பவில்லை.டமஸ்கஸ் ஆட்சியாளர் பலவீனமான நிலையிலிருந்ததால், தனது அதிகாரம் நூருத்தீனிடம் பறிபோய்விடும் என்று அஞ்சி சிலுவை வீரா்களுடன் நேசத்தை ஏற்படுத்திக் கொண்டார். இது முஸ்லிம் உலகுக்கு ஆபத்து எனக் கருதியதனால்தான் நூருத்தீனின் நிலைப்பாடு அவ்வாறிருந்தது.

இக்கட்டத்தில் ஹி.548(கி.பி.1153) காலப்பகுதியில் எகிப்திய ஆட்சியாளர்களான பாதிமியரிடமிருந்து "அஸ்கலான்" நகரைக் கைப்பற்றியிருந்த பிரஞ்சுக்காரா்களோ, ஸிரியாவின் தலைநகரமான டமஸ்கஸை வெற்றிகொள்ளும் தமது திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டே இருந்தனர். என்றாலும்,டமஸ்கஸில் வாழ்ந்து வந்த நல்ல மனிதர்கள் மோசக்கார ஆட்சியாளருக்கெதிராகக் கிளா்ந்தெழுந்து நூருத்தீனுடன் தொடர்பு கொண்டு தம்மை சிலுவை வீரா்களின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தங்களது பிரதேசத்துக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நூருத்தீன், படைகளோடு டமஸ்கஸுக்குச் சென்றார்.எதிரிகளின் படை வருமுன்பே ஒரு யூதப்பெண்ணின் உதவியோடு கோட்டையினுள் நுழைந்தார்.மக்கள் அவர்களை மனமார வரவேற்றனா்.

இதன் பின் ஹி.549(கி.பி.1154) நூருத்தீன் ஸன்கீ டமஸ்கஸின் ஆட்சியாளரானார். பின்னர் நூருத்தீன் "பால்யெக்" பிரதேச ஆளுனராக இருந்த நஜ்முத்தீன் ஐயூபி என்பவரை டமஸ்கஸின் ஆளுனராக நியமித்துவிட்டு அலெப்போவுக்குச் சென்று விட்டாா்.

இக்கட்டத்தில் ஹி.555 இல் இஸ்லாமிய மத்திய அரசின் தலைவரான அப்பாஸிய கலீபா முக்தீப் என்பவர் மரணமானார்.

இவருக்குப் பின் இவரது மகன் அபுல் முழப்பர் யூஸுப் என்பவர் "அல் முஸ்தன்ஜித் பில்லாஹ்" எனும் பட்டத்தோடு அப்பாஸிய அரசின் புதிய கலீபவாகப் பதவி ஏற்றார்.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.