மந்திரம் என்பது மறைமொழிகளால் மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, தாவரங்கள், நஞ்சுப் பொருள்கள் ஆகியவற்றைத் தமக்குப் பயன்படுமாறு இயக்குவது என்பர்.
மந்திரம் எண் வடிவமாகவும் எழுத்து வடிவமாகவும் குறிப்பிடப் படுகிறது.
மந்திர எழுத்து என்பது ந, ம, சி, வ ய என்னும் ஐந்து எழுத்து. எண் என்பது அந்த எழுத்துகளுக்குரிய எண்களாக 9, 11, 4, 15, 12 எனக் குறிக்கப்படும்.
“அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன”
காட்டில் உள்ள யானைகளை அடக்குவதற்கு அங்குசம் பயன்படுவது போல், ஐந்து பஞ்சபூதங்களால் உருவான உயிர்கள் அனைத்தையும் அடக்குவதற்கு அங்குசமாக மந்திர எழுத்துகள் பயன்படுகின்றன என்பர்.
ஒலி வடிவில் அமைந்திருக்கும் மந்திரம் யாவர்க்கும் பொதுவானது. அது எல்லா உயிர்களுக்கும் விரும்பிய பயனைத் தருவது. ஒவ்வொருவரையும் சூழ்ந்திருக்கும் துன்பங்களை நீக்குவது, தனக்குரிய வலிமையைப் பெற்றுத் தருவது என்று மந்திரத்தின் சிறப்பைத் திருமந்திரம் உரைக்கிறது.
மந்திரங்கள் ஒன்றை அல்லது ஒருவரை வயப்படுத்தல், அழித்தல், மழுங்கச் செய்தல், அழைத்தல், தடுத்தல், பகைத்தல், ஏவுதல், மயக்கல், நட்பு கொள்ளச் செய்தல் என்னும் காரணங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. அட்டகர்ம சித்தி, மாந்திரீகச் சித்தி, பராபரத்தின் சித்தி, தச தீட்சை சித்தி, அணிமா, கரிமா, லகிமா, மகிமா, பிறாத்தி, பிறாகாமியம் என்னும் ஆறும் வசியம், ஈசுவரம் ஆகியவையும் சித்தியாகும் என்று கூறப்படுகிறது.
நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை இருபத்தைந்து கட்டங்களில் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு எழுத்தாக அமைப்பர். அந்த எழுத்துக்கு மாற்றாக அதற்குரிய எண்களை அமைப்பர். அந்த எண்கள் எந்தப் பக்கத்திலிருந்து கூட்டினாலும் 51 என்னும் கூட்டுத் தொகையாகவரும். மந்திர எழுத்துகளுக்குரிய எண்களைக் குறிப்பிடும் போது, ‘க’ முதல் ‘ன’ வரையுள்ள தமிழ் உயிர்மெய் எழுத்துக்களுக்கு 2லிருந்து 19 வரையான எண்களைக் குறித்து மந்திர எழுத்துக்குரிய எண்ணாகக் குறிக்கின்றனர்.
இவ்வாறு எண்ணும் எழுத்தும் கட்டங்களில் இடம்பெறுகின்றன. இந்த மந்திரங்களில் தமிழ் எண்ணும் எழுத்தும் பெறுகின்ற சிறப்பினைக் கருதியே ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும்’ என்று உரைக்கப் பட்டுள்ளது.
தமிழில் மந்திரங்கள் இல்லை என்னும் கருத்துக்கு மறுப்புரைப்பது போலத் திருமந்திரமும், கருவூரார் மாந்திரிக காவியமும், கொங்கணர் கடைக் காண்டம் போன்ற பல நூல்களும் அமைந்திருக்கக் காணலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.