19/09/2018

ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


மெஸ்மர் காலத்தில் அவர் பரிகசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாதவராக இருந்தாலும் அவர் காலத்திற்குப் பின் வந்தவர்களை ஒரு உண்மை நிறையவே சிந்திக்க வைத்தது. அவருக்கு எதிராக ஆயிரம் வாதங்கள் அக்கால அறிவியலறிஞர்கள் முன் வைத்த போதும் பல நோயாளிகளை கும்பல் கும்பலாக அவர் குணமாக்கியதைப் பெரிய அற்புதமாகவே பலரும் நினைத்தனர்.

(விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் பெருமளவு நவீனமாக்கப்பட்ட இன்றைய நாட்களில் கூட இது சாத்தியமில்லாததாகவே இருக்கிறதல்லவா?).

பல மேலை நாடுகளிலும் ஆழ்மன சக்திகள் முறையாக ஆராயப்பட வேண்டிய விஷயம் என்ற சிந்தனை எழ ஆரம்பித்தது. 1882ல் லண்டனில் மனோசக்தி ஆராய்ச்சிக் கழகம் (Society for Psychical Research (SPR)) ஆரம்பிக்கப்பட்டது தான் விஞ்ஞான முறைப்படி ஆராய முற்பட்ட முதல் அமைப்பு. பின் பல நாடுகளிலும் அதைப் பின்பற்றி பல அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

1888ல் ப்ரெஞ்சு மனோதத்துவ நிபுணர் சார்லஸ் ரிச்சட் என்பவர் விளையாட்டு சீட்டுகளை வைத்து பல ஆராய்ச்சி செய்தார். முதல் முறையாக புள்ளி விவரப்படி ஆராய்ச்சி செய்த அவர் நம் ஆறறிவுக்கு அப்பாற்பட்ட அதீத மனோசக்தி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது என்று தன் கட்டுரையில் வெளியிட்டார்.

1908ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன் என்பவர் மனிதர்களுக்கிடையில் மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார்.

சிக்மண்ட் ஃப்ராய்டு போன்ற மனோதத்துவ அறிஞர்களும், மனித வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்களும் மொழிகள் தோன்றாததற்கு முந்தைய காலத்தில் மனிதன் சைகளையும், சத்தங்களையும் உபயோகிப்பதற்கும் முன்னால் மனோசக்தி மூலமாகவே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்க வேண்டும் என்று கூறினர். பின்னால் இது மனிதன் மறந்த கலையாகி விட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தோடு ஜே.ஜே.தாம்சன் தெரிவித்த மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று தெரிவித்த கருத்தையும் சேர்த்துப் பார்த்த போது தாம்சன் சொன்னபடியே இருக்கலாமோ என்று சந்தேகித்த அறிவியலறிஞர்கள் அதை ஆராய்ந்தறிய முற்பட்டனர்.

அவர்களுக்கு அந்த ஆராய்ச்சிக்கு உதவியது மைக்கேல் ஃபாரடே என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு கூண்டு. 1836ல் அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கூண்டு அவர் பெயராலேயே “ஃபாரடே கேஜ் (Faraday Cage) என்று அழைக்கப்பட்டது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு மின்காந்தக் கவசம். அந்தக் கூண்டில் உள்ளிருந்து வெளியேயோ, வெளியேயிருந்து உள்ளேயோ மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள் போன்றவை போக முடியாதபடி அவர் வடிவமைத்திருந்தார். அதை பிறகாலத்தில் வந்த விஞ்ஞானிகள் மேலும் நுட்பமாக மேம்படுத்தி இருந்தார்கள். சிறிய கூண்டு முதல் பெரிய அறை வரை ஃபாரடே கூண்டுகள் பல அளவுகளில் ஆராய்ச்சிக்குப் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டன.

தொலை தூரத்திற்கு எண்ண அலைகள் மூலம் செய்திகள் அனுப்ப முடிந்த, தூரத்தில் இருந்த பொருள்களையும், தகவல்களையும் அறிய முடிந்த சில அபூர்வ மனிதர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபாரடே கூண்டில் அமர வைத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அந்தக் கூண்டின் உள்ளே அமர்ந்திருந்த நபர் வெளியே உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்த தகவலை அனுப்புவது, தூரத்தில் ஒருவர் மனதில் நினைத்திருந்த அல்லது வைத்திருந்த ஒரு பொருள் என்னவென்று அறிவது போன்ற ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.

பெரும்பாலான ஆராய்ச்சிகள் மிகச்சரியான முடிவுகளைத் தெரிவிப்பனவாக இருந்தன. அனுப்பிய தகவல்களும், பெற்ற தகவல்களும் பெரும்பாலான சமயங்களில் பொருந்தி வந்தன. மின்காந்த அலைகள் மூலம் தகவல்கள் பரிமாற்றம் ஃபாரடே கூண்டில் இருந்து நடைபெற சாத்தியமில்லை. ஆனால் மனோசக்தி மூலம் தகவல்கள் வெற்றிகரமாகப் பரிமாற்றம் நடந்துள்ளன. பின் அந்த மன அலைகளின் தன்மை தான் என்ன என்பதற்கு இன்று வரை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இன்னும் ஒரு படி மேலே போய் வெளியே சாதாரண இடங்களில் இருந்து மனோசக்தியைப் பயன்படுத்தி அனுப்பிய, பெற்ற தகவல்களின் வெற்றித் தன்மையை விட ஃப்ராடே கூண்டில் இருந்து அனுப்பிய, பெற்ற வெற்றித் தன்மைகள் எண்ணிக்கை அளவிலும், தன்மை அளவிலும் மேம்பட்டு இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் குழப்பியது.

மேலும் பயணிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.