11/09/2018

கடையை மூடுங்க... கோஷமிட்ட காங்கிரஸார்; அரிவாளைத் தூக்கிய கடைக்காரர்...


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் வேலைநிறுத்தம், கடையடைப்புக்கு ஆதரவாக, கடைகளை அடைக்கக்கூறி காங்கிரஸ் கட்சியினர் கூறியபோது, அதில் ஒரு கடைக்காரர் அரிவாளைக் தூக்கிக்காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 90 சதவிகித கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தது. பஸ், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

காங்கிரஸ் கட்சியினர் சிலர் கடைகளை அடைத்து, வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டபோது, சில கடைக்காரர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் ஸ்டாலின் என்பவர் அரிவாளைத் தூக்கிக்காட்டி உள்ளார். இதனால் கடைக்காரருடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீஸார் சமாதானப்படுத்தி, `புகார் அளித்தால் முறையாக வழக்கு பதிவு செய்யப்படும்' என்று கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 165 பேரை போலீஸார் கைது செய்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக சென்றபோது அவர்களை கைது செய்தனர். போராட்டம், சாலைமறியல் நடைபெற்றாலும், அரிவாளைத் தூக்கிக் காட்டிய சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.