09/10/2018

இயமம் - (அட்டாங்க யோகம்)...


1.  இயமம்...

கொல்லான் பொய் கூறான் களவிலான் என்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லா னியமத் திடை நின் றானே - 554

கொலை செய்யாமை (ஜீவ இம்சை செய்யாதிருத்தல், ஜீவனுக்கு உதவியாய் இருக்கும் விந்துவை நாசம் செய்யாதிருத்தல்).

பொய் சொல்லாமை, திருடாமை, பிறரால் தூஷணையடையாமை, அடக்கமுடைமை, நடுவுநிலைமையான வார்த்தையைச் சொல்லவல்லான், முடிந்தமட்டில் அன்னமிட்டு உண்ணுதல் (ஐயமிட்டு உண்ணுதல்), குற்றமில்லாமை, குடியும் காமமில்லாமை, இவைகளையுடையவன் இயமத்தினிடை நிற்பவனாகும்.

ஒரு அரசன், கல்விமான் தனவந்தன், அறிவாளி என்னும் பதவிகளில் தங்களை அமைத்துக்கொள்ள விருப்பமுடையவர்கள் அந்த லட்சியங்களுக்குத் தகுந்தது போல் தங்கள் நடையுடை பாவனைகளை மாற்றிக்கொள்வதுபோல, ஞானி என்னும் நிலையைப் பொருத்தமாக்கிக் கொள்ளவேண்டிய ஒரு சாதகன் மனித தேகத்துக்கு இயற்கையாகப் பொருந்தியிருக்கும் ஞான விரோதச் செயலை நீக்குவது, அதாவது சுக்கிலத்தைக் கழித்தலையும், கோபம், காமம், பஞ்சேந்திரியங்கள் ஆகிய இவற்றை வீணான காரியங்களுக்கு உபயோகித்தலை ஒழிப்பதாகும்.

குறிப்பு: ஐயமிட்டு உண்ணுதல் - ஐ - ஐயன் தலைவன், அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நம் தலைவன்.  அவனுக்கு ஆவியை இட்டு உண்ண வேண்டும்.  ஆவியே ஆண்டவனுக்கு நெய்வேத்தியம் (உள்ளுறையும் ஆவி நெய் வேத்தியம் என்று தாயுமானவர் கூறியதை சிந்திக்கவும்).  அதாவது நாம் உண்ட அன்னத்தின் பயனாகிய ஆவியை இறைவனுக்கு அர்ப்பணித்து அதன் பிறகே உண்ண வேண்டும்.

உண்மையான நைவேத்தியம் என்ன என்பதை தக்க குருவிடம் கேட்டு தெளிவு பெறவும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.