10/10/2018

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை...


சுற்றுச்சூழல் விதிகள், மாநில அரசின் நிலைப்பாடு, மாநிலத் தன்னாட்சி, கூட்டாட்சி அமைப்புமுறை, ஜனநாயக நடைமுறை என எதையும் கருத்தில் கொள்ளாமல், அனைத்தையும் மீறி, அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பாக, பாசிசப் போக்கில், தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதில் இறங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு..

இதனை வன்மையாகக் கண்டிக்கவும் எச்சரிக்கவும் செய்வதுடன், தமிழ்நாடு அரசு, இதில் மோடி அரசின் மோசடியை எதிர்த்து அம்பலப்படுத்துவதோடு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வந்திருக்கும் திட்ட அனுமதிக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்; மக்களின் கருத்தைக் கேட்காமல் திட்டத்திற்கு வழங்கிய ‘காப்புக்காடுகள்’ நிலம் மொத்தத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதை ஒட்டுமொத்த தமிழகமும் இயற்கை ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். இதையடுத்து ‘தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிறுவனம்’ (State Environment Impact Assessment Authority - SEIAA), ‘கட்டடம் மற்றும் கட்டுமானங்கள்’ பிரிவின் கீழ் மதிப்பிட முடியாது என்று திட்டத்தின் செயல்பாட்டாளரான ‘டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவன’த்திடம் (Tata Institute of Fundamental Research) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து, நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது.

ஆனால் டாடா நிறுவனம், ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ‘கட்டடம் மற்றும் கட்டுமானங்கள்’ பிரிவின் கீழ் ‘சுற்றுச்சூழல் அனுமதி’ கேட்டு விண்ணப்பித்தது.

தமிழ்நாடு அரசு என்னென்ன ஆட்சேபனைகளை எழுப்பி திட்டத்திற்கு அனுமதி மறுத்ததோ, அந்த ஆட்சேபனைகள் எதையும் கணக்கில் கொள்ளாமல், ‘கட்டடம் மற்றும் கட்டுமானங்கள்’ பிரிவின் கீழ் ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தமிழ்நாடு அரசைக் கேட்காமலேயே வழங்கப்பட்டது.

மாநில உரிமைகளுக்கு எதிரான மோடி அரசின் இந்த மோசடியை தமிழ்நாடு அரசு எதிர்த்து அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அதைச் செய்யாமல் அதிமுக பழனிசாமி அரசு மௌனம் காக்கிறது. இந்த நிலையில்தான் ஒன்றிய அரசின் தில்லுமுல்லுகளுக்கு எதிராக ‘பூவுலகின் நண்பர்கள் அமைப்பு’ டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனு மீது 03-10-2018 அன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக ஒன்றிய அரசு 4ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் 4ந் தேதிய விசாரணையின்போது, ஒன்றிய அரசு சார்பில் வந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

டாடா நிறுவனம் தரப்பு வழக்குரைஞர்கள், “நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட பிறகே ஆய்வகப் பணி தொடங்க தீர்மானிக்கப்பட்டது” என முழுப் பொய்யை வாதமாக வைத்தனர்.

ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரப்பு வழக்குரைஞர்களும், “தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நிறுவனத்தில் சிறப்பு நிபுணர்கள் கிடையாது. அதனால் அந்த நிறுவனத்திடம் ஒன்றிய அரசு கருத்து கேட்கவில்லை. சில நிபந்தனைகளுடன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என முழுப் பொய்யையே முன்வைத்தனர்.

தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் சர்மா, “இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. அதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இதுவரை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை (இது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை)” எனத் தெரிவித்தார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “இறுதி முடிவு எடுக்காத நிலையில் தமிழ்நாடு அரசு எப்படி வனத்துறை நிலத்தை நியூட்ரினோ திட்டத்திற்கு ஒதுக்கியது? ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு, இந்த நியூட்ரினோ திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாதா? அணுவைப் பல துகள்களாக சிதறடிக்கும்போது சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்பதுகூடத் தெரியாதா?” என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

 தொடர்ந்து, “இது தொடர்பாக ஒன்றிய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒரு மூத்த அதிகாரியோ, விஞ்ஞானியோ வெள்ளிக்கிழமையன்று (05-10-2018) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். டாடா நிறுவனம் 8ந் தேதிக்குள் எழுத்து வடிவில் விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள்.

இதன்மூலம், சுற்றுச்சூழல் விதிகள், மாநில அரசின் நிலைப்பாடு, மாநிலத் தன்னாட்சி, கூட்டாட்சி அமைப்புமுறை, ஜனநாயக நடைமுறை என எதையுமே கருத்தில்கொள்ளாமல், அனைத்தையும் மீறி, அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பாக, பாசிசப் போக்கில், தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதில் மோடி அரசு இறங்கியிருப்பது தெளிவாகிறது.

இதனை வன்மையாகக் கண்டிக்கவும் எச்சரிக்கவும் செய்வதுடன், தமிழ்நாடு அரசு, இதில் மோடி அரசு செய்திருக்கும் மோசடியை எதிர்த்து அம்பலப்படுத்துவதோடு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வந்திருக்கும் திட்ட அனுமதிக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்; மக்களின் கருத்தைக் கேட்காமல் திட்டத்திற்காக வழங்கிய வனத்துறை நிலம், அதாவது ‘காப்புக்காடுகள்’ நிலம் மொத்தத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.