தாரணை...
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலுமாமே. - 591
விளக்கம்...
(சூரியன் சந்திரன் இருக்கும் இடங்களில்) கடைபாகத்திலுள்ள வழியைக் கட்டி இன்பமாக உள்ளே செல்லும்படி இருத்தி அபானனை எழுப்பி (பிராணாபானனுடைய சேர்க்கைக்காக பிரணவத்தின்) நடு வீட்டைப் பார்க்க நீ செல்லும் படியான வழியில், மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப் போல இமையாமல் பார்த்துக் கொண்டிருபவர்கள் நாசமாகாமல் ஊழிக் காலம் வரை சாகாமலிருக்கக் கலுமாகும்.
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே. - 593
விளக்கம்...
(பிரணவத்தின் நுனியிலுள்ள) சுழி முனையைத் திறந்து கொள்ளாதவர்கள் மனத்திற்குள் சந்தேகம் என்னும் மாடு ஒன்று இருக்கிறது. சுழிக்கதவைத் திறந்தால் தான் பிராணன் அபானனை அந்த வழியைப் பாய்ச்சுவார்கள். சுழிமுனை வாயைத் திறக்கச் சத்தியில்லாதவர்கள் தங்களிடமுள்ள சொற்ப புத்தியைக் கொண்டு அது இது என்று யோசிப்பார்கள். சிவமிருக்கும் பரணியைத் திறவாவிட்டால் தவறுதலுடையதாகும்.
கோய் = பரணி.
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலுமாமே. -- 595
விளக்கம்...
நிறைந்திருக்கும் தசவித வாயுக்களில் முக்கியமான வாயுக்கள் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் என்கிற ஐந்தும் முதலில் வெளிப்பட்டுப் போனால் இதில் விழித்திருந்து என்ன செய்யப்போகிறாய் மூடமே. எல்லையைக் குறித்துக் கொண்டு அதனால் ஏற்படும் வழியைச் செய்து கொள்பவர்களுக்குக் குரங்கினை (குரங்கு சந்திரன், சந்திர கலையை) பிரணவக் கோட்டையில் அடைக்கலாம்.
குறிப்பு...
ஔவையார் "மோன மென்பது ஞான வரம்பு" என்ற கொன்றை வேந்தனில் அருளிச்செய்துள்ளார்கள். (ஞானவரம்பு - ஞானநிலை)
வரம்பினைக்கோலி என்பதும் ஞானவரம்பு என்பதும் ஆசாரியன் சொல்லும் ஒரு மொழி.
அரித்த வுடலை ஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஜம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே. -- 597
விளக்கம்...
ஆராய்ந்து எடுக்கப்பட்ட பிரணவத்தை பஞ்ச பூதத்தில் கலக்கும்படி வைத்து அலையும் பஞ்சபூத சத்திகளை பிரணவத்தின் முடிவில் செலுத்தி அலையும் மனத்தையும் பிரணவத்தின் முனையில் ஊன்றியிருக்கத் தத்பதத்தோடு ஒன்றிவிடும் இதுதான் தாரணை.
தாரணை முழுவிளக்கம்...
மனிதனுடைய ஞான வாழ்க்கையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாகிய மனதைத் தன்னிஷ்டம் போல் நடத்தப் பக்குவம் செய்து கொள்வதே தாரணையாகும்.
நிராசையோடு கூடிய மனத்தைக் குறிப்பாக நிறுத்திக் கொண்டு கரனியாச தந்திரத்தினால் குண்டலியோடு சிதாகாயமும் பொருந்த துவாதசாந்த வெளியைப் பார்வையானது நோக்க முன்னிலையிலுள்ள எதையும் பாராமலும் செவியினால் பஞ்சேந்திரிய சம்பந்தமான எந்த சிறுசத்தத்தையும் கேளாமலும் இருப்பவர்களுக்குச் சிவ தத்துவங்களைக் காணவும் தசவித நாதங்களைக் கேட்கவும் கூடும்.
இவ்விரண்டு விஷயங்களினால் மனமானது தன்னுடைய கிருத்தியங்களினின்று மீண்டு அசைவற்று நிற்கும். அச்சமயத்தில் பிரணவ உச்சியிலிருந்து அமுத தாரையானது உண்டாகும். அந்த மார்க்கமாக மனதையும் பார்வையையும் பிசக வொட்டாதபடி மேல் செலுத்தினால் உச்சியில் மறைந்து போகாத ஆனந்தமாகிய ஜோதிஸ்வரூபம் உதித்து நிற்கும். அதில் மனமானது மற்றப் புற விசயங்களில் செல்வதொழியும்.
பிரணவ மேருவின் உச்சியின் சார்பில் இருக்கும் பார்வதியாகிய பரநாத சக்தியோடு அதோ முகத்திலிருக்கும் பரவிந்துவின் கலையாகிய சிவ ரூபத்தை எழுப்பி மேல்கொண்டு போய்ச் சத்தியுடன் கலக்க வைக்க, பால ரூபத்தையடைந்து ஆனந்தமானது பொங்கித் ததும்ப மனமானது பரவசத்தினால் சோர்வையடைந்து விடும். பிரணவத்தின் உச்சி நேர்கிழக்கு, வலது செவியின் பக்கம் தெற்கு, இடது செவியின் பக்கம் வடக்கு, அதோமுகம் மேற்கு, இவ்விதமாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது. இந்தச் சாதனையானது ஸ்காந்த புராணத்தினால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
சிவ பெருமான் யோகத்திலிருந்து எழுந்தவுடன் மன்மதனை எரித்துச் சுப்பிரமணியரை உற்பத்தி செய்ய மேருவுக்குப் போய்ப் பார்வதியை விவாகஞ் செய்துகொண்டு இருந்தாரென்று சொல்லப்படும் புராணத்தின் கருத்து இதுவே.
சூரிய சந்திரர்களிருக்கு மிடங்களின் உள்கடை வாயிலைக்கட்டி, அவர்களை இன்பமாக உள்ளே செல்லும்படிசெய்து, பிரணவத்தின் மத்திய பாகத்தில் பார்வையையும் மனதையும் நிறுத்தி, அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாசத்தை அடையாமல் சிரஞ்சீவியாய் இருப்பார்கள். பிராணாபானணுடைய சேர்க்கையும் உண்டாகும். இந்த இரண்டு வாயுக்களும் ஒன்று சேருவதால் அசைவற்றுக் காலமுஞ் ஜயமடைந்து விடும். ஆராய்ந்து கண்டுபிடித்த பிரணவத்தைப் பஞ்ச பூதத்தில் கலக்கும்படி வைத்து அதனால் உதயமாகும் பஞ்ச பூதசக்திகளைப் பிரணவத்தின் முடியின் மீது செலுத்தி, அவைகளையும் மனதையும் பார்வையையும் ஒன்று படுத்தி உச்சியில் நிறுத்த அவை தத்பதத்தோடு ஒன்றிவிடும். இந்தச் சாதனைகள் தாரணையைக் சித்திக்கச் செய்யும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.