பிரத்தியாகாரம்...
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே –578
விளக்கம்: உள்ளே பார்த்துப் பார்த்து நினைவானது பொருந்த மேல்நோக்கினால் உள்ளே அடைந்த்தடைந்து பல வகையான குணங்களைக் காணலாம். பழமையாகவே அன்போடு எவ்விடத்திலும் அனாதியான வேதமானது தேடிக் கொண்டிருக்கும் சிவத்தை இன்றே கண்டு இந்த உலகத்திலேயே இருக்கவும் முடியும்.
நாபிக்குக் கீழே பண்ணிரண் டங்குலந்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரத் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்ட டீசன் குடியிருந்தானே – 579
விளக்கம்: பிரணவத்தின் மத்திய பாகமாகியும், உந்தியாகியும், மனிபூரகஸ்தானமாயும் உள்ளயிடத்துக்குக் கீழ்பனிரெண்டு அங்குலத்தில் பொருத்தி வைக்க வேண்டிய மந்திரமாகிய இரகசியத்தை அறிந்து கொண்ட பிறகு பிரணவ நாதத்தோடு சிவன் பிரணவத்தின் உச்சாரண முடிவில் வந்து சேர்ந்து விடுவான்.
அதோமுகத்தின் (கீழ்முகம்) இரகசியப்படி, அதோமுகத்திலுள்ள பரம சிவன் ஊர்த்துவ முகத்திற்குக் (மேல் முகம்) கொண்டுவரும் தந்திரம், மந்திரம் என்பது இரகசியம். இது குருமுகாந் திரத்தில் பெற வேண்டியது.
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. – 580
விளக்கம்: மூலத்திலுள்ள இருவிரலுக்கு மேலிலும் முதலிலிருக் கின்றதும் அருளைக் கொடுப்பதுமான யோனிக்கு இருவிரலின் கீழ் நின்றதுமான (கைகளினால்) உருவாக்கப்பட்ட குண்டலிக்குள் எழும்பும் நாதபிந்து கலந்ததினால் ஏற்பட்ட சிவந்த அக்னியானது உலகத்தாரால் சொல்லும். (நஞ்சுக்கொடி உற்பத்தியான) தொப்பூழுக்கு நாலு வீரற் கடைக் கீழ் வரையில் பிரகாசிக்கும்.
குறிப்பு: மூலம் என்பதை ஆசாரியன் மூலமாகக் கேட்டு கொள்ளும் ஒரு மொழியில் அடங்கினது. உலகத்தார் அதை அறிந்து கொள்ள முடியாமல் குதமாக நினைக்கிறார்கள். மூலபந்தன முதலிய முத்திரைகளிலும் ஆதாராதத்திலும் குதமாகவே, அனுபோகமும் ஞான ரகசியத்தின் கருத்தும் அறியாத தற்கால கல்வி ஞானிகள் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். மூலம் இன்னது என்று ஏற்பட்டவுடன் உந்தி, யோனி முதலானதும் விசிதமாக விளங்கும். இது சத்தியமானதே.
நாசிக் கதோமுகம் பன்னிரண்ட டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே – 581
விளக்கம்: பிரணவநுனிக்கு அதோமுகமாகிய கீழ்முகத்தில் பனிரண்டங் குல நீளத்தில் (பிரணவத்துக்கும் கீழ் பாகத்தில் நீ மனதை நிறுத்தி தியானிப் பாயேயானால் பெருமை பொருந்திய சித்திகளும் பெரிய யோகங்களும் முதன்மையடைந்து சித்தியைத் தரும். சரீரத்துக்கு எக்காலத்திலும் நாசமாகுங் குணம் இல்லாமல் போய்விடும்.
குறிப்பு: நாசி என்பது மூக்கு என்று உரை செய்து கொண்டு சாதனை செய்தால் அதற்குப் பயனில்லை, துன்பமே.
சோதி இரேகைச் சுடரொளி தொன்றிடற்
கோதில் மரானந்தம் என்றே குறிக் கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே. – 582
விளக்கம்: சோதியுள்ள வரையின் தீக்சிகையினுடைய பிரமானது தோன்றினால் குற்றமிலாத பரத்தின் ஆனந்த மென்று உறுதியாக அடையாளத்தைக் கொள்ளுங்கள். எதிரில் இடைபிங்கலைகளின் மத்தியில் பிரகாசம் பொருந்திய சந்திரனுடைய ஒளியானது வந்து சேர்ந்தால் சொல்ல வேண்டியது உன்னுடலானது தத்போதத்தையடையும் என்பதே.
மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே – 583
விளக்கம்: மூலத்திலுள்ள துவாரத்தை (உபதேசப்படி) பூட்டிக் கொண்டு அசைவற்றிரு. சுழி முனை துவாரத்தின் மீது மனத்தை நிறுத்து. கூர்மையான நேத்திரத்தை மூடிக் கொண்டு விடாதே. காலத்தை வெல்லும் கருத்து இதுவே.
பிரத்தியாகாரம் முழுவிளக்கம்...
அதோமுகத்திலுள்ள பிந்துகலையைச் சந்திர பேதினி என்னும் தந்திரத்தால் மேலெழுப்பி அது செல்லும் வழியில் உள்ள ஜோதியையும் பிரிவினைசெய்து அதனால் ஏற்பட்ட அறிவின் வழியாக விந்து கலையைக் கரைத்து லயப்படுத்தி உள்நோக்கிப் பார்ப்பதுவே பிரத்தியாகாரத்தின் செயலாகும். அவ்விதமாக உள்நோக்கிப் பார்க்கும்போது அதில் மனமானது பொருந்தி நின்றால் பலவகையான குணங்களைக் காணலாம்.
உந்திக்கமலமாகிய பிரணவத்திலிருந்து பன்னிரண்டு அங்குலத்துக்குக்கீழ் செய்ய வேண்டிய தந்திரத்தை ஆசாரியன் மூலமாகத் தெரிந்து செய்பவர்களுக்கு அதோ முகத்திலிருந்து விந்துகலையானது இரண்டு பிரிவாக மேலெழும்பி அந்த இரண்டுக்கு மத்தியில் சத்தியானவள் பிரவேசிக்க அவளது வலப்புறத்தில் பிரணவயுச்சியில் சிவன் வெளிப்பட்டுக் காட்சி கொடுப்பான். நெற்றியில் தரிக்கும் நாமத்தின் குறியும் இதையே தெரிவிக்கின்றது.
நாத விந்துக்கள் குண்டலியாகிய பிரணவத்தில் கலப்பதினால் ஏற்பட்ட சிவந்த அக்னியானது தொப்புளுக்கு நான்கு விரற்கடை வரையில் பிரகாசிக்கும். சாதகர்கள் பிரணவத்தைக் கண்டு அதன் உச்சியிலிருந்து பன்னிரண்டு விரற்கடைக்குக்கீழ் மனதை அசைவற்ற நிலையில் நிறுத்திச் சங்கல்பமற்று இருப்பார்களேயானால் பெருமை பொருந்திய சித்திகளுக்கும் இராஜ யோகத்திற்கும் காரணமாக நிற்கின்ற விந்து கலையானது பிரணவ உச்சியில் வந்து சேரும். தவிர, தேகமானது நாசமாகும் குணத்தை அடையாது. பார்வையானது பிரணவ உச்சியின் மீதும், மனமானது அதோ முகத்திலும் நிலைத்து நிற்க, தீச்சிகையானது கண்டத்திற்குக்கீழ் நிற்பதைக் காணலாம். அதற்கு மேல் பாகத்தில் சந்திர ஒளியானது கண்ணைக் கவரும் படியாகத் தோன்றும், அச்சமயத்தில் சாதகன் தேகமானது பரவச மடைந்துவிடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.