23/11/2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயி விஷம் குடித்து தற்கொலை...


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சோழகன் குடிகாட்டில் தனது 5 ஏக்கர் தென்னந்தோப்பு கஜா புயலால் அழிந்த சோகத்தில், விவசாயி சுந்தர்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது. வீட்டை இழந்து, கால்நடைகளை இழந்து, உணவுப்பயிர்கள் அனைத்தும் அழிந்து மக்கள் அனைவரும் நிர்க்கதியாக நிற்கின்றனர். நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. முந்திரி, சவுக்கு, மா, பலா உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் சோழகன் குடிகாட்டைச் சேர்ந்த தென்னை விவசாயி சுந்தர்ராஜின் 5 ஏக்கர் தென்னந்தோப்பு, கஜா புயலால் முற்றிலும் அழிந்தது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக கண்ணீருடன் சோகத்தில் இருந்து வந்த சுந்தர்ராஜ் இன்று தென்னைக்கு அடிக்க வைத்திருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சுந்தர்ராஜ் தற்கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.