மாரடைப்பு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? வாருங்கள் பார்ப்போம்...
நெஞ்சினைக் கசக்கிப்பிழிவது போல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல் அல்லது கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல் அல்லது இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல். உடனே வாந்தி வருதல். அதன் காரணமாக ஏற்படும் படபடப்பு. அத்துடன் காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு ஆகிய இவையே மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும். இதனைக் கொண்டு வந்திருப்பது மாரடைப்பா என்பதை நாம் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
வந்திருப்பது மாரடைப்பு என்பதை உறுதிப் படுத்திய பின்னர் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை...
ஆபத்தில் இருப்பவரை பாதுகாப்பான இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும்.
பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும். பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கின்றாரா என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் செவி அல்லது உள்ளங்கையில் பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும். நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டிச் செல்லவும்.
பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள். இப்படியாக செயற்கை சுவாசம் தாருங்கள். இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதனைக் குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.
அதே போல, மருத்துவ மனையில் நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும். பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக் கொண்டு இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.