மனிதனுக்கு இறைவனால் வழங்கப் பட்டுள்ள மாபெரும் சக்தியே மனம்....
ஏனெனில் மனிதனால் மட்டுமே தனது சிந்தனை ஆற்றலின் துணை கொண்டு மெய்ப் பொருள் எது என்று ஆராய்ந்தறிந்து, உணர முடியும்....
எல்லாவற்றிற்கும் மூலமான இறைநிலை எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், மனதின் மூலமாக மட்டுமே அதனை உணர முடியும்....
மனமே இறைவனை அறிய உதவும் கருவி......
மனதின் மறுபக்கம் இறைவன்....
மனதை அறிந்து அதன் செயல்பாட்டைச் சீரமைத்தால் வாழும் காலத்தில் செயற்கரிய பல செயல்களை நம்மால் ஆற்ற முடியும்.....
மனதை அறிந்து நமது கட்டுப் பாட்டில் கொண்டு வந்து பழக்கிவிட்டால், அங்கு குழப்பமே வராது. அமைதியான தெளிவான மனதில் தான் மெய்ப்பொருள் பற்றிய சிந்தனைகள் உதிக்கும்....
எவ்வாறு தெளிந்த நீரோடையில் அதன் ஆழத்தை நம்மால் காண முடிகிறதோ அது போன்று, மனம் தெளிவாக உள்ள போதே ஆழ் மனதில் இருக்கக் கூடிய இறைநிலையைக் காண முடிகிறது....
குழம்பிய குட்டை (எண்ணக் குவியல்கள் மற்றும் உணர்ச்சி நிலை) போன்று மனதை வைத்திருந்தால், அங்கு எப்போதும் குழப்பமே மிஞ்சும்.. அதுவே உள்ளிருக்கும் தெய்வத்தை பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டிருக்கும் திரை....
தவம் செய்து வர வர எண்ணங்களின் எண்ணிக்கை குறைவதாலும், அகத்தாய்வு செய்து தேவையற்ற எண்ணங்களைக் (நாம் மனம் கொண்டு உருவாக்கியவை) குறைத்து விடுவதாலும், ஏற்கனவே நம்முள்ளே இருக்கக் கூடிய இறைநிலையின் பண்புகளான அன்பும் கருணையும் வெளிப்படுகின்றன.....
இறைவனின் இத்தகைய பண்புகளினால் எந்த செயல் செய்தாலும் விழிப்புணர்வோடு, மன விரிவு கொண்டு ஆற்ற முடிகிறது.....
இத்தகைய மனவிரிவைக் கொண்டு செய்யும் செயல்களினால் மேலும் நமக்குள்ளே உள்ள இறை ஆற்றல் மலர்ந்து கொண்டே இருப்பதனை உணர முடிகிறது....
இவை அனைத்திற்கும் உதவுவது மனம் தான். இறைத் தேடலில் மனமிருந்தால் அதற்கான மார்க்கம் உண்டு. நமது தேடலுக்கு ஏற்ப சூழல்களையும் இந்த இயற்கையே நமக்கு அமைத்துக் கொடுக்கும். நமது பக்குவத்திற்கேற்ற குருவும் வருவார்...
விந்தை என்னவென்றால் கிடைத்த மார்க்கத்தில் சென்று ஆழ் மனதிலுள்ள மெய்ப்பொருளை உணரும் போது, அதற்கு உதவிய மனம் இல்லாமல் போய்விடுகிறது. இறைவனின் படைப்பில் தான் எத்தனை கோடி அற்புதங்கள்...
பேரின்பத்தில், இன்ப ஊற்றில் மிதக்க விட்டாய் இறைவா... மனம் கொண்டு இத்தகைய மானிடப் பிறவி எடுத்ததற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் எங்கள் இறைவா....
தியானம், யோகம் என இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுவதற்கே முற்பிறவியில் (முன்னோர்கள்) ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதற்காக என்றென்றும் எனது முன்னோர்களை வணங்க கடமைப் பட்டிருக்கிறேன்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.