கர்நாடக அரசால் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்ட விலையில்லா சைக்கிள்களை, தமிழக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தழுதாழி என்ற கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
அந்த சைக்கிள்களின் முன்கூடையில் கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டு, கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தது. தமிழக அரசை போலவே, கர்நாடக பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கர்நாடக அரசு அவான் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் தரமற்றவை என தெரியவந்ததை அடுத்து சைக்கிள்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது. மேலும், பெறப்பட்ட சைக்கிள்கள் திரும்ப அவான் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், கர்நாடக அரசு புறக்கணித்து திரும்ப அனுப்பிய அவான் நிறுவன சைக்கிள்களை, தமிழக அரசுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த சைக்கிள்களை விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே, தரமற்ற சைக்கிள்களை வாங்கியதாக கூறப்படும் விவகாரத்தில், கர்நாடக கல்வித்துறை செயலாளர் ஷாலினி ரஜினிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முட்டை கொள்முதலில் முறைகேடு என்று புகார் எழுந்த நிலையில், தற்போது சைக்கிள் சர்ச்சை கிளம்பி உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.