26/01/2019

இந்திய குடியரசு தினத்தை புறக்கணிப்போம்... மொழிப்போர் தியாகிகள் நாள்: சனவரி 25...


சமசுகிருதமயமாக்கம் நடைபெறும் இக்காலக்கட்டத்தில் தமிழன் மீண்டும் மீண்டும் போராடிக் கொண்டே இருக்கிறான்.

அன்று இந்தி - மயமாக்கத்திற்கு எதிராக மட்டுமே போராடினான்.

இன்று சமசுகிருதமயமாக்கம் ஆரிய - மயமாக்கம் என்ற எதிரியோடு மட்டுமல்ல..

திரவிட மயமாக்கம் என்ற இந்தியக் கருணா-வீரமணி-ஜெயா கும்பல் துரோகிகளுக்கு எதிராகவும் அவன் போராட வேண்டியிருக்கிறது.

இந்தக்கும்பல் கூட்டணி விசயகாந்த் வரை நீண்டு கொண்டே செல்வது தான் துயரம்.

நம்முடைய விளக்குகளுக்கும், தீப்பந்தங்களுக்கும், வெடித்தெழும் உணர்வுகளுக்கும் தேவையான தீயை அந்த மொழிப்போர் போராளிகளின் அணையாத நெருப்பில் பற்ற வைத்துக் கொள்வோம்..

இந்தி எதிர்ப்பு போரட்டம் 1937 முதல் பல ஆண்டுகளாக நடைபெற்றது என்றாலும் இதன் தீவிரத்தன்மை கொண்டு இரண்டு ஆண்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1939 மற்றும் 1965...

1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது), முதலமைச்சராக ராஜாஜி 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார்.

தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என (சுதேசமித்திரன் பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார்.

எத்தனை ஆண்டுக்காலமாய் ஒரே பொய்யுரையை திரும்பத்திரும்ப திணிக்கின்றனர்.

ஆரிய ராஜாஜியின் விஷக் கொடுக்கு  2015 லும் துடித்துக்கொண்டு தான் அலைகிறது.

அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்.

1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது.

மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள்.

சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார்.

அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது.

3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப் பிடிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர்.

1938 டிசம்பர் 5 அன்று கைது செய்யப்பட்ட நடராசன் காவல் துறை சித்திரவதையால் 1939 சனவரி 15 கொல்லப்பட்டார்.

1939 பிப்ரவரி 11 அன்று கைது செய்யப்பட்ட தாளமுத்து மார்ச் 13 அன்று காவல்துறை சித்திரவதையால் கொல்லப்பட்டார்.

இவர்களே முதல் மொழிப்போர் தியாகிகள்...

இவர்களோடு போராட்டத்தில் மரித்த மொழிப்போர் தியாகிகள்.

பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.

ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள்.

1965 சனவரி 26 முதல் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா. காமராசன் என்பவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்தனர்.

1964 சனவரி சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. பக்தவச்சலம் முன்பு ஒரு இளைஞன்...

அய்யா தமிழைக்காப்பாற்றுங்கள், இந்தியை நுழைய விடாதீர்கள், நீங்களும் தமிழர் தானே.

பக்தவச்சலம் உத்தரவு: இந்தப் பைத்தியத்தை கைது செய்யுங்கள்.

சனவரி 25 விடியற்காலை 4.30 மணிக்கு தனக்கு தீயை வைத்துக்கொண்டு "தமிழ் வாழ்க, இந்தி ஒழிக" என்று கத்திக் கொண்டே கருகிப்போனார் அந்த கீழப்பழூர் சின்னசாமி, அன்றைய முத்துக்குமாராய்.

1965 மொழிப் போராட்டத்தின் முதல் மொழிப் போராளி கீழப்பழூர் சின்னசாமி.

சின்னச்சாமியைப் போல ஒரு பத்துத் தமிழனாவது உயிர் நீத்தால் தான் நமது தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கம் ஒழியும்." என்று அடிக்கடி பேசிவந்த  கோடம்பாக்கம் சிவலிங்கம் தான் மொழிப்போரில் இரண்டாவதாகத் தீக்குளித்தவர்.

இந்திய அரசின் வன்முறைக்கு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன், மற்றும் சிவலிங்கம்.

16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர்வந்த குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

ஐந்து போராட்டக்காரர்கள், சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும் மூவர், தண்டபாணி, முத்து, சண்முகம் விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

இரு வார கலவரங்களில் அதிகாரபூர்வ தகவலில்படி காவல்துறையால் 70 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் 500க்கும் கூடுதலானவர் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்களின் தகவல்கள் கூறுகின்றன.

1 பிப்ரவரி அன்று மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல்மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் அழகேசனுடன் பதவி விலகினார்.

தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க்குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகள் கொடுத்தார்:
ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பாட முழுமையான, கட்டற்ற சுதந்திரம் கொண்டிருக்கும்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பாடல் ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது நம்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும்.
இந்தியல்லா மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர்பாட முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தியல்லா மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது.

மைய அரசின் அலுவல்கள் தொடர்பாக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.

சென்னையில் இரண்டு பேர் தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற நிகழ்ச்சி இதற்குமுன் இந்தியாவில் நடந்ததில்லை. இப்போராட்டத்தைக் கைவிடுங்கள். இந்தி குறித்து உள்ள சிக்கல்களை நாம் ஒருவருடன் ஒருவர் பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அன்றைய இந்தியப்பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரி. சனவரி, 29 1965 தினத்தந்தி.

தீக்குளித்தவர்களின் முன்னோடிகளாக 1939 ல் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தாளமுத்து, நடராசன் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டில் பேசும்போது அண்ணாதுரை...

இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப்படும். வருங்காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச்சிலை எழுப்ப வேண்டும். என்று சொன்னார்.

அவரோ, அவருக்குப்பின் வந்த திராவிடக் கருணாக்கள் எழுப்பினார்களா?

தங்கள் கையில் ஆட்சி கிடைத்த 2 ஆண்டுகளுக்குள் உத்திரப்பிரதேசத்தில், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிமக்கள் என்று வரலாற்றையே மாற்றி எழுதினார்களே பாஜக கட்சியினர்.

50 ஆண்டு கால 'தமிழர்' ஆட்சியில் இந்த மொழிப்போர் வீரர்களின் வரலாற்றைக் கூட நம் பாடப்புத்தகங்களில் பதிவு செய்ய வில்லையே?. எல்லாம் மணிமண்டபத்தோடு சரி.

மொழி ஒரு சமூகத்தின் மேல் கட்டுமானத்தில் தான் இடம் பெறுகிறது என்று கூறும் ஒரு சிலர் கூறுவதுண்டு. ஆனால் பொறியியல் கல்லூரியில் படித்த பீளமேடு தண்டபாணி முதல் 6 வது வகுப்பைக்கூட எட்டாத விராலிமலை சண்முகம் வரை தெரிந்து வைத்திருந்தார்கள்-

மொழி என்பது தேசிய இனத்தின் முகமும், முகவரியும் என்று.

2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,635 தாய்மொழிகளும், 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது.

ஆனால் அன்றைய ராஜாஜி, சாஸ்த்ரி களின் இன்றைய பிரதிநிதியான நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்கிறது. அது தொடர்பான அறிக்கையில்...

1, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது.

2, ஜூலை 2014 மாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு(2014) சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

3, மேலும் ஆசிரியர் தினமான செப்டெம்பர் 5 ஐ "குரு உத்சவ்" என கொண்டாடும் படி      அனைத்து பள்ளிகளுக்கும் நடுவண் அரசு ஆகஸ்ட்-2014 இல் சுற்றிக்கை அனுப்பியது.

இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு அன்று அண்ணாதுரையின் பதில்...

எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது; காகமாகத் தான் இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.