ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிகாலந்தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனை தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னை புதுப்பித்துக் கொண்டது. இதனை எதிர்த்து தமிழை கருவியாக்கி போராடிய மாபெரும் புரட்சியாளர் தான் இராமலிங்க அடிகளார்.
அவர் எப்போதும் தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல் மொழி என்றும், எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்றும் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி என்றும் போற்றிப் புகழ்ந்திடுவார்.
இவர் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் இராமகிருட்டிண பரமகம்சர், தயானந்த சரசுவதி, இராசராம் மோகன் ராய், விவேகானந்தர் ஆகியோர் வடமொழியை ஏற்று வைதீக மதத்தை போற்றி வந்தனர். இவரோ தமிழை ஏற்காத வைதீக மதத்தையும் வடமொழியையும் புறக்கணிக்கத் துணிந்தார். ஆரிய மொழிகளில் மனம் ஒட்டாத படியால் சாகாக் கல்வியை தரும் ஆற்றல் மொழியான தென்மொழியில் பற்று கொண்டதாக பின்வருமாறு கூறுகிறார்:
"இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் பொழுது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல ஒட்டாது பயிலுதற்கு மணிதற்கும் மிகவுமிலேசுடையதாய்ச் சாகாக் கல்வியை இலேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்"
மேலும், வள்ளலார் 'சமரச சுத்த சன்மார்க்கம்' எனும் பெயரில் புதிய சங்கத்தை தோற்றுவித்து, கடவுள் ஒருவரே! அவர் ஒளிவடிவமானவர்! எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் கொள்வீராக! என்று மக்களிடம் முழங்கினார்.
"இருட்சாதித் தத்துவச்
சாத்திரக் குப்பை
இருவாய்ப் புன்செயில்
எருவாக்கிப்போட்டு
மருட்சாதி சமயங்கள்
மதங்களாச் சிரம
வழக்கெல்லாம் குழிக்கொட்டி
மண்மூடி போட்டு"
மேற்கண்ட பாடலில், சாத்திரக் குப்பைகள் தான் இருட்சாதி தத்துவத்தையும் ஆச்சிரம வழக்கத்தையும் சமய மதத்தையும் தோற்றுவித்தன. ஆகவே அவற்றைக் குழியில் கொட்டி மண்போட்டு மூடுங்கள் என சாதிப் பித்துப் பிடித்து அலைவோர்க்கு அறிவுரை புகட்டினார்.
வள்ளலார் பார்ப்பனீய பண்டாரங்களின் ஆடம்பர காவி உடைக்கு எதிராக வெள்ளுடை தரித்தார். ஒருமுறை அவர் காலத்தில் வாழ்ந்திருந்த சங்கராச்சாரியார் வடமொழி நூலொன்றில் ஐயம் தோன்ற, அதனை விளக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, 'சமசுகிருதமே மாத்ரு பாஷை' (இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி) என்று சங்கராச்சாரியர் கூறிடவே, சட்டென்று நொடிப்பொழுதில் வள்ளலார், "சமசுகிருதம் மாத்ரு பாஷை என்பது உண்மையெனில், அதற்கு 'எமது தமிழே பித்ரு பாஷை' (இந்திய மொழிகளிக்கெல்லாம் தந்தை மொழி) என்று பதிலடி தந்தார். சமசுகிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் நரேந்திர மோடியின் வாரிசுகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
சங்கர மடத்து குரு பீடங்கள் பெண்களை 'உவர்நிலங்கள்' என்று வர்ணித்த போது ஆணும், பெண்ணும் சமமாக இறைவனால் படைக்கப்பட்டவர்கள். ஆதலால் பெண்களை பாவப் பிறவி இழிபிறவி என்று ஒதுக்கி வைக்காமல் கல்வி புகட்டுங்கள்! என்று பரப்புரை செய்தார்.
தமிழ் மொழியிலிருந்து பிரிந்து வடமொழியோடு கலந்து போன ஏனைய திராவிட மொழிகளையும் அவர் விட்டு வைக்க வில்லை. அந்த மொழிகளில் இல்லாத தமிழ்மொழிக்குரிய இலக்கண சிறப்புகளை பின்வருமாறு கூறுகிறார்.
"ஆரியம், மகாராட்டிரம், ஆந்திரம் என்று பற்பல பாஷைகளைப் போலாகாமல்- பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாகவும், ஒலியிலே சாயும் கூட்டென்னும் சக்தி அதி சுலபமாயும் எழுதவும் கவி செய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்காரமின்றி எப்பாஷையின் சந்தங்களையும் தன் பாஷையுள்ளடக்கி ஆளுகையால் ஆண் தன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ் ற் ன் என்னும் முடி நடு அடி சிறப்பியலக் கரங்களில் முடிநிலை இன பாநுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பிய யொலியாம்."
கடினமான இந்த சாரத்தைப் பிழிந்து "தமிழ்ப் பாஷையே அதிக சுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம்" என்னும் வாசகமாக வடித்துத் தருகிறார் வள்ளலார்.
அடிகளார் காலத்தில் கால்டுவெல் அவர்களின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வெளிவரவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தும், 'தமிழ் தனித்தியங்கும் மொழி' என்பதை ஆராய்ச்சிச் சான்றுகளுடன் மெய்ப்பித்த தமிழர் இவரே.
வள்ளலாரை மானசீகமாக நேசித்த தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் அவர்கள் "தாய்மொழிப் பற்றும் துறக்க முடியாதது, துறக்கவும் கூடாது என்பதனை உலகினர்க்கு உணர்த்தியவர் வள்ளலார் ஒருவரே" என்பார். தாய்மொழிப் பற்றை துறந்து வாழும் தமிழர்கள் இனியாவது வள்ளலாரின் நூல்களைப் படித்து தமிழ்மொழி உணர்ச்சிப் பெறுதல் வேண்டும். அது ஒன்றே தமிழினத்தை உய்விக்கும் வழியாகும்.
நூல் உதவி: ம.பொ.சிவஞானம் எழுதிய, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.