13/03/2019

கடலில் மூழ்கிய கண்டம் - ஒரு வரலாற்று ஆய்வு -1...


கடலினுள் கண்டங்கள் மூழ்கி உள்ளனவா… மக்கள் வாழ்ந்து இருந்த மாபெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளையிட்டுக் கொண்டு சென்று விட்டதா? என்றக் கேள்விக்கு ஆம் என்கின்றனர் கிரேக்க ஞானிகளான பிளாடோவும் (Plato) ஓமரும் (Homer) , நம் இளங்கோவடிகளும்.

ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

ஆனால் இவர்களின் கூற்று அந்தச் செய்தியினை கூறுவதோடு மட்டும் நின்று விடுகின்றது. அந்த கண்டம் எங்கே இருந்தது, அதில் இருந்த மக்கள் யார் என்ற செய்திகள் அவர்களின் கூற்றுகளில் தெளிவாக இல்லை. எனவே இவர்களின் கூற்றுகள் வெறும் கதைகளாக மாறிப் போகின்றன.

மேற்குலக அறிவியலாளர்களும், இவர்களின் கூற்றினை அடிப்படையாக கொண்டே ஒரு அழிந்தக் கண்டதினை உலகம் முழுவதிலும் தேடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் முடிவு கிட்டியப் பாடில்லை.

அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒவ்வொரு இடத்தினைக் குறிப்பதாகவே அமைந்து வருகின்றன.

ஒரு சமயம் அட்டுலாண்டிசு அமெரிக்காவிற்கும் ஐரோபியாவிற்கும் இடையில் உள்ளது என்கின்றனர்.

மறு சமயம் அது சப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருப்பதாக சொல்லுகின்றனர்.

மற்றொரு சமயம் ‘பெர்முடா முக்கோணம்’ இருக்கும் இடத்தில் தான் இந்தக் கண்டம் இருந்து இருக்கலாம் என்கின்றனர்.

இத்தகைய முரண்பாடான தகவல்கள் மூலம் அட்டுலாண்டிசு என்னும் கண்டம் தனியே இருந்ததா இல்லை வேறேனும் ஒரு மூழ்கிய கண்டத்தினைப் பற்றிய தகவல்கள் அட்டுலாண்டிசு என்னும் பெயரின் மூலம் கதையாக வெளியாகி உள்ளதா என்று எண்ணும் எண்ணம் வருகின்றது.

அப்படி வேறோரு கண்டத்தினைப் பற்றி ஐரோப்பிய அறிவியலாளர்கள் இன்னும் அவர்களின் தேடலை ஆரம்பிக்கவில்லை. பிரச்சனை இல்லை நாம் ஆரம்பிப்போம்.

தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒருத் தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது. கடலில் மூழ்கிய இந்தக் கண்டத்தினைப் பற்றி கதைகளாகவோ, இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ நாம் நிச்சயம் அறிந்து இருப்போம். அட்டுலாண்டிசு என்றக் கண்டத்தினைப் போல் விவரங்கள் தெளிவாக இல்லாத நிலை போல் அல்லாது குமரிகண்டதினைப் பற்றிய விவரங்கள் தெளிவாக கிடைகின்றன. தமிழ் சங்க இலக்கிய பாடல்களிலும், சிலப்பதிகாரத்திலும் குமரிக்கண்டதினைப் பற்றியக் குறிப்புகள் தெளிவாக இருக்கின்றன.

இந்த இடத்தில் இந்த நிலையில் தான் குமரிக் கண்டம் இருந்தது என்று அந்த நூல்கள் உறுதிப்படக் கூறுகின்றன. நாம் முன்னரே கண்டது போல் நம்முடைய நூல்கள் எந்த இடத்தில் குமரிக்கண்டம் இருந்தது என்றுக் கூறுகின்றனவோ அதே இடத்தில் தான் உயிரினம் தோன்றி இருக்க வேண்டும் என்று அறிவியலும் கருதுகின்றது.

மேலும் தமிழர்களின் சில பழக்க வழக்கங்களும் சமகாலத்தில் நடந்த சம்பவங்களும் குமரிக்கண்டம் என்ற ஒன்று இந்த மண்ணில் இருந்தது என்றும் கூற்றுக்கு ஆதாரங்களாக இருந்துக் கொண்டு இருக்கின்றன. குமரிக் கண்டதினையும் அதன் வழி மனிதனின் வரலாற்றினையும் பார்க்கும் முன் நாம் அந்த விடயங்களைப் பார்த்து விடுவது நல்லது.

௧) குமரிக் கண்டத்தினைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுவது என்ன..

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள….

மேலே உள்ள இந்தக் கூற்றின் படி பல மலைகளுடன் குமரிக்கண்டமும் கடலினுள் சென்றது என்ற செய்தி நமக்கு தெரிகின்றது.

௨) ஆடு மேய்ச்சான் பாறை…

தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று வழங்குகின்றனர். காரணம் என்னவெனில் ஒருக் காலம் அந்தப் பாறை இருந்த இடம் தரையாக இருந்தது அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்த்து இருக்கின்றனர்.

ஆனால் காலத்தில் கடல் அந்த இடத்தினைக் கொள்ளைக் கொள்ளவே மக்கள் அவ்விடம் விட்டு நகர்ந்து வந்து விட்டனர். ஆனால் ஆடு மேய்த்த பாறை என்ற பெயர் மட்டும் அங்கேயே தங்கி விட்டது.

இதன் மூலம் தமிழர்கள் வாழ்ந்து இருந்த இடம் இன்று கடலுக்கு அடியினில் மூழ்கி உள்ளது என்று நாம் அறிய முடிகின்றது.

௩) காவேரிப்பூம்பட்டினம்…

பூம்புகார் என்றுப் பெயர் பெற்ற இந்த மாபெரும் நகரமும் கடலினுள் மூழ்கி விட்டது. காலத்தில் பூம்புகார் நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினை விட முந்தியது என்பது அறிஞர்களின் கருத்து.

௪) தனுசுக்கோடி…

இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுசுக்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது.

எனவே கடலில் நம் நகரங்கள் மறைந்து உள்ளன என்னும் செய்திகள் பொய்யல்ல என்பது புலனாகிறது.
இன்னும் பல சங்க இலக்கியங்கள் மூலமாகவும்,

தெற்கு திசையில் உள்ள தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வாயிலாகவும், ஒரு பெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளைக் கொண்டு போய் உள்ளது என்னும் செய்தியினை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் அந்த நிலப்பரப்பினில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம் என்றால் நிச்சயம் புலனாகும். ஆனால் இந்திய அரசோ அத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாது இருக்கின்றது. அத்தகைய ஆராய்ச்சிகளை மற்றவர்கள் மேற்கொள்ளவும் ஆதரிக்காது இருக்கின்றது” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏன் இந்தியா ஆராய்ச்சியினை மேற்கொள்ளாது இருக்கின்றது என்ற கேள்வியோடு சேர்த்து நாம் இது வரை பார்த்து இருந்த கேள்விகளுக்கும் விடையினைக் காண முயல்வோம்….

ஆனால் அதற்கு எல்லாம் அடிப்படையாக நாம் தெளிவாக குமரிக்கண்டதினைப் பற்றி அறிய வேண்டும்...

குமரிக்கண்டம் உண்மையா அல்லது கற்பனையா என்பதனை அடுத்தப் பதிவில் காண்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.