தோல் நோய் நீக்கும் குப்பைமேனி! மாற்று அடுக்கில் பல அளவுகளில் இலைகளைக் கொண்டது குப்பைமேனி. இலைக் காம்பின் பின் இடுக்குகளில் அமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி இனமாகும்.
செடியின் முழுப் பகுதியுமே மருத்துவக் குணம் உடையது. இலை வாந்தி உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலம் இளக்கப் பயன்படும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.
வேறு பெயர்கள்...
அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. ஆங்கிலத்தில்: Acalypha indica; linn; Euphor biaceae.
மருத்துவ குணங்கள்...
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி நசியமிட தலைவலி நீங்கும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.
மற்ற மருத்துவ முறையினால் கைவிடப்பட்ட பவுத்திரத்துக்கு மட்டும் ஒரு வாரம் 2 வேளை 50 மில்லியளவு அவுரியிலை குடிநீரைக் (ஒரு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.) குடித்துவந்து அதன் பிறகு மேற்கண்ட மருந்தைத் தொடர்ந்து 90 நாள்கள் சாப்பிட்டுவர பவுத்திர நோய் குணமாகும்.
குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். (இது பேதியை ஏற்படுத்தி பூச்சி, புழுக்கள் வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதி அளவு கொடுக்கலாம்)
குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும்.
வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.
குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும்.
இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.
குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)
குப்பைமேனித் தைலத்தை 50 மில்லியளவு எடுத்து மணப்பாகில் கலந்து கொடுக்க, உடலிலுள்ள கிருமிகள் வெளியேறும். இத்தைலத்தை வாத நோய்களுக்கு வெளிப்புறமாகத் தடவி வர குணமாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.