13/03/2019

குமரிக்கண்டம் …உண்மையா?… கற்பனையா?- ஒரு வரலாற்று ஆய்வு...


இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே.

ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது.

இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம்.

குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்…

௧) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.

௨) ஆசுதிரேலிய பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).

௩) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

௪) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

௫) தனுசுக்கோடி மற்றும் காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கிய வரலாறு.

௬) ஆடு மேய்ச்சான் பாறை என்று பெயர் கொண்ட பாறை கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி கடலின் நடுவில் இருக்கும் செய்தி.

ஆனால் குமரிக்கண்டம் என்பது கற்பனையே என்றுக் கூறுவோர் கூறும் காரணங்கள்…

௧) இதை அறிவியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

௨) இக் கதைகள் சங்க இலக்கிய செய்திகளில் மட்டுமே இருப்பதினால் இவை வரலாறாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இவை புராணங்களே.

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…

அறிவியல் குமரிக்கண்டதினை மறுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை… ஏனெனில் அறிவியல் அங்கே இன்னும் சென்று ஆராய்ந்தே பார்க்க வில்லை. ஆராய்ந்து தெளிவு படுத்தாத விடயங்களை அறிவியல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அறிவியலின் உதவி தற்போது குமரிக்கண்டதினைப் பற்றிய விடயத்தில் நமக்கு கிட்டவில்லை.

எனவே இப்பொழுது நாம் மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்றுப் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப்படி,

மனிதன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்.முதல் மனிதன் - தமிழன்.முதல் மொழி - தமிழ். குமரிக்கண்டதினில் தோன்றிய மனிதனே வடக்கே பயணித்து சென்று அங்கே சில நாகரீகங்களை நிறுவி பின் உலகம் முழுவதும் பரவுகின்றான். இதற்கு சான்றாக அவர்கள் பல விடயங்களை தருகின்றார்கள்.

உதாரணமாக “பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.”

இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்.

இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

“அப்படி எவ்வாறு கூறுகின்றீர்கள்… வடக்கில் இருந்தும் அவன் தெற்கே வந்து பெயரிட்டு இருக்கலாம் அல்லவா?” என்று கூறுகின்றீர்களா.

சரி தான். அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் மொழியறிஞர்கள் ஏன் அப்பெயர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்றன என்று கூறுகின்றனர் என்பதனை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது, ஒரு நாகரீத்தில் இருந்து மற்றொரு நாகரீகத்திற்கு பெயர்கள் கொண்டு செல்லப் பட்டு இருக்கின்றன என்றால் முதலில் தோன்றிய நாகரீகம் காலத்தில் இரண்டாவது நாகரீகத்திற்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும். எனவே வடக்கில் இருந்து இந்த பெயர்கள் தெற்கே வந்தன என்றால் வடக்கில் உள்ள நாகரீகம் காலத்தில் தெற்கு நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரீகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலேயோ அல்லது மேசபோடமியாவிலேயோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரீகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. இந்நிலையில் தான் நாம் ஒரு ஆங்கிலேய ஆய்வாளரைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவர் பெயர் கிரகாம் கான்காக் (Graham Hancock). உலகமே சுமேரியாவையும் மேசொபோடமியாவையும் சிந்து சமவெளியையும் ஆராய்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் இந்தியாவில் தெற்கினை நோக்கி தன் ஆராய்ச்சியினை தொடங்குகின்றார்.

அவரின் ஆராய்ச்சி பிரம்மிப்பூட்டும் பல தகவல்களை வெளி இடுகின்றது. உதாரணமாக சிந்து சமவெளிக்கும்  3000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் ஒன்று குசராத் மாநிலத்தில் கடலோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாகரீகதினைத் தொடர்ந்து அவர் மீண்டும் தெற்கே நோக்கி நகர்கின்றார்.

அங்கே குசராத் நாகரீகத்தினை விட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு மாபெரும் நாகரீகத்தினை அவர் கண்டுப்பிடிக்கின்றார்….
 தமிழகத்தினில்!!! அந்த இடம் பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினம். அவரின் கூற்றுப் படி இந்த நாகரீகம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்த நாகரீகம் கடற் கோள்களால் அழிந்தது என்றும் (400 அடி உயர் அலைகளால் என்றும் குறிப்பிடுகின்றார்) கூறுகின்றார். மேலும் அந்த இடங்களை நன்றாக ஆராய்ந்தோம் என்றால் பல உண்மைகள் வெளி வரும் என்றும் ‘அந்த இடத்தினை ஏன் ஆராயாது இது வரை விட்டு வைத்து இருக்கின்றார்கள் என்பது தமக்கு வியப்பளிப்பதாகவும்’ அவர் கூறுகின்றார். இவருடைய இந்தக் கருத்தினை இங்கிலாந்தில் உள்ள துர்கம் பல்கலைக்கழகமும் (Durham university) ஏற்று உள்ளது.

ஆனால் அந்த ஆராய்ச்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு மேற்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் பூம்புகார் பற்றிய இந்தத் தகவல்கள் மக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.

இவ்வாராய்ச்சிகள் மொழியறிஞர்கள் சொல்லும் கூற்றினை, அதாவது நாகரீகம் தெற்கில் தோன்றி பின்னர் வடக்கே நோக்கி சென்று இருக்கின்றது என்பதனை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றன. தொடர்ந்து இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டால் உண்மைகள் வெளிப்படும். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளை தானும் மேற்கொள்ளாது மற்றவர்கள் மேற்கொண்டாலும் அதற்கு தடங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா?உண்மை வெளிப்படுமா?

சிந்திப்போம்…

சில நண்பர்கள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்களை பகிருமாறு கேட்டுக்கொண்டார்கள். இதோ சில ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்கள்…

மா.சோ.விக்டர் - இவர் மொழியியல் அறிஞர். உலகின் தாய் மொழி தமிழ் தான் என்றும் மற்ற மொழிகள் அனைத்தும் தமிழின் திரிபுகளே என்றும் அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகின்றார். பல புத்தகங்களை இவர் மொழி தொடர்பாகவும் குமரிக்கண்டம் மற்றும் தமிழர்கள் தொடர்பாகவும் எழுதி உள்ளார். உதா… ‘குமரிக் கண்டம்’ ‘எபிரேயத்தின் தாய் மொழி தமிழே’ ‘அ’….

தேவநேயப் பாவாணர் - இவரும் ஒரு மொழி அறிஞர். தமிழ் மொழியில் இருந்தே வடமொழி போன்ற அனைத்து மொழிகளும் தோன்றின என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை நிரூபித்தவர். இவரும் பல புத்தகங்களை மொழி தொடர்பாகவும் தமிழர் வரலாறு தொடர்பாகவும் எழுதியுள்ளார். உதா… தமிழர் வரலாறு.

மாத்தளை சோமு - இவர் ஒரு ஆய்வாளர். உலகம் முழுவதும் சென்று அங்கு வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் இடங்கள் போன்றவற்றை ஆராய்பவர். இவருடைய நூல்கள் பல அவற்றுள் நான் எடுத்துக் கொண்ட நூல் ‘வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்’.

மறைமலைஅடிகள் - இவரும் ஒரு தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் இயக்கத்தினை தோற்றுவித்து தமிழை வளர்த்தவர். தமிழ் தொடர்பாகவும், ஆரியர் திராவிடர் போன்ற கூறுகளைப் பற்றியும் பல நூல்களை எழுதி உள்ளார். உதா… தமிழர் மதம்.

தெய்வநாயகம் - இவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர். தமிழிலேயே அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ மற்றும் ஆன்மீகக் கருத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அனைத்து மதங்களும் அடக்குமுறைகளில் இருந்தும் பகைமையில் இருந்தும் விடுபட்டு மக்களின் நலனுக்காக மாறுவதற்குரிய வழி தமிழில் இருக்கின்றது என்னும் கருத்தினை உடையவர். சைவ வைணவ சமயங்கள், கிருத்துவ சமயம் மற்றும் இசுலாமிய சமயங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இவரும் பல நூல்களை எழுதி உள்ளார்.

சரி... குமரிக்கண்டதினைப் பற்றி பார்த்தாயிற்று.. மேலும் விவிலியம், அசோகர், சமணம்...புத்தம், பக்தி இயக்கம் போன்றியவற்றை பற்றியும் பார்த்து இருக்கின்றோம். ஆனால் அந்த அனைத்துச் செய்திகளும் கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே இருக்கின்றன... உலகின் வரலாறினை அறிய அந்த முத்துக்கள் கோர்க்கப்பட வேண்டும்.

கோர்ப்போம்... உலகின் வரலாறு காத்து இருக்கின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.