ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சிகளுக்கு அடுத்தப்படியாக அசைவப் பிரியர்களின் உணவாக இருப்பது வான்கோழி ஆகும். இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். தற்போது கோழி வளர்ப்பவர்களின் அனைவரது கவனமும் வான்கோழி வளர்ப்பில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போது வான்கோழி வளர்ப்பு முறையை பற்றி பார்போம்.
இடம் தேர்வு செய்யும் முறை :
வான்கோழி வளர்க்க அதிக இடவசதியோ, முதலீடோ தேவையில்லை. வான்கோழி வளர்க்க விரும்புபவர்கள் 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 வான்கோழி குஞ்சுகளை வளர்க்கலாம்.
வான்கோழி இனங்கள் :
அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம்(கரி-விரட்), பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம், நந்தனம் வான்கோழி ஆகிய வான்கோழி இனங்கள் ஆகும். இதில் நந்தனம் வான்கோழி இனமானது நமது பகுதிகளுக்கு வளர்க்க ஏற்றதாகும்.
வான்கோழி கொட்டகை அமைக்கும் முறை :
வான்கோழி வளர்ப்புக்கு புறக்கடையில் அதிக செலவு செய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக பழைய டைமண்ட் லிங்க் வேலிகளை வாங்கி தடுப்பு அமைத்துக்கொள்ளலாம். வான்கோழி வளர்க்கும் போது கொட்டகைக்குள் மழை மற்றும் வெயில் பாதிக்காத அளவுக்கு மூங்கில், தென்னங்கீற்று ஆகியவற்றை கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும்.
கொட்டகையின் தரை பகுதியில் நான்கு அங்குல உயரத்துக்கு கடலைப்பொட்டு பரப்பிவிட வேண்டும். கடலைப்பொட்டுக்கு பதிலாக தேங்காய் நார்க்கழிவுகள், நெல் உமி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஒன்றரை மாத அளவிலான கோழிக்குஞ்சுகளை வாங்கி விடலாம்.
கொட்டகையின் சுவர்ப்பகுதியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுண்ணாம்புத் தூளை தூவி விட வேண்டும். அதே போல் 15 நாட்களுக்கு ஒரு முறை கடலைப்பொட்டை மாற்ற வேண்டும். பகல் வேலையில் கோழிகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு செல்வதற்கு திறந்து விட வேண்டும்.
தீவனம் அளிக்கும் முறை :
வான்கோழி வளர்ப்புக்கு கடைகளில் விற்கும் தீவனங்களை வாங்கினால் கட்டுபடியாகாது. இதற்கு பதிலாக பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நம் வயல்களில் உள்ள புற்கள், கீரைகளையும் தீவனமாக கொடுக்கலாம்.
மேலும் 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக்கோழி தீவனங்களை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் தீவனச் செலவை அதிக அளவில் குறைக்க முடியும்.
நோய் மேலாண்மை :
வான்கோழிகளை அம்மை மற்றும் சளி போன்ற நோய்கள் தாக்கும். இதற்கு சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், கசகசா, கடுகு போன்றவற்றை தலா 2 தேக்கரண்டி, பூண்டு 5, வெங்காயம் 4 ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வாரம் ஒரு முறை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நோய்கள் தாக்காது.
அதன் பிறகு மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, வான்கோழியின் தலையை தவிர்த்து, உடல் முழுவதும் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோழிகளுக்கு தோல் நோய் தாக்காது.
வான்கோழியின் மூலம் லாபம் :
வான்கோழிகளை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கும் போது அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்க தொடங்கும். 100 கோழிகளுக்கு 20 சேவல்கள் வேண்டும். இதன் மூலம் தினமும் 25 முட்டைகள் வரை கிடைக்கும்.
வான்கோழிகள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். இதன் மூலம் தினமும் வருவாயாக 500 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு வான்கோழியானது ஒன்றரை ஆண்டு வரை முட்டை இடும். வான்கோழிகளை தினமும் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.