02/04/2019

தங்கள் சொந்த மண்ணிலேயே மக்களின் போக்குவரத்துக்குத் தடை..


இப்படித் தடை போட்டு சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது மனித உரிமை மறுப்பு மற்றும் பறிப்பே..

வழிப்பறிகொள்ளைக்கூடங்களாய்த் திகழும் இந்தச் சுங்கச்சாவடிகள் வருடாந்தோறும் கட்டணத்தையும் உயர்த்திக்கொள்வதற்கு கண்டனம் தெரிவிகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தமிழகத்தில் மொத்தம் 42 சுங்கச்சாவடிகள் இருந்தன. இப்போது 45 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் 22 சுங்கச்சாவடிகளில் இன்று ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். அந்தவகையில் இன்று முதல் கட்டண உயர்ந்திருக்கிறது.
இந்தக் கட்டண உயர்வு இவ்வளவுதான் என்று கூறப்படாமல், 10 விழுக்காடு வரை  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கட்டண உயர்வு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வசூலுக்கப்படும் கட்டணத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 40 விழுக்காடு வரைகூட சில சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டது. இப்போது திட்டவட்டமாக அறிவிக்கப்படாமல் 10 விழுக்காடு வரை இருக்கும் என பொத்தாம்பொதுவாக அறிவிக்கப்பட்டிருப்பதால் வசூல் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி வரைமுறையற்ற கட்டண வசூலாக இருப்பதால்தான் சுங்கச்சாவடிகளை வழிப்பறி கொள்ளைக்கூடங்கள் என்கிறோம். நாம் சொல்வதற்கிணங்கவே அவை நடந்துகொள்கின்றன. அப்பாவி பொதுமக்களின் வண்டியை மறித்து குடும்பத்தோடு வருபவர்களையும் தாக்குவது, கட்டணம் செலுத்திய பிறகும் கஞ்சா, அபின், டாஸ்மாக் சரக்கு போன்றவற்றுக்காக மிரட்டிப் பணம் பறிப்பது என சுங்கச்சாவடிகளில் நடக்கும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. புகார் கொடுத்தாலும் உரிய நடவடிக்கை இல்லை. காவல்துறை வாகனங்கள், தனியார் செக்யூரிட்டி (குண்டர்கள்) வாகனங்கள் உள்ளிட்டவை எந்நேரமும் சுங்கச்சாவடிகளுக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 99 விழுக்காடு வட இந்தியர்களையே ஊழியர்களாக வைத்துக்கொண்டு, அவர்களோடு உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள், கொலைக்குற்றவாளிகள் போன்றோரையும் இணைத்துக்கொண்டு இந்த அடாவடி அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கின்றன இந்தச் சுங்கச்சாவடிகள்.

தனியார் கையில் உள்ள 15 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகள் என 22 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தனியார் கையில் என்பது கார்ப்பொரேட்டுகள் கையில் என்பதே. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகள் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் அவையும் கார்ப்பொரேட்டுகளின் சுங்கச்சாவடிகள் போல்தான் செயல்படுகின்றன. பரனூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், பாலைபுத்தூர், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, திருப்பெரும்புதூர், வாலாஜா, வாகைகுளம், ஆத்தூர், பட்டறைப்பெரும்புதூர், எஸ்.வி.புரம், லட்சுமணப்பட்டி, லெம்பலாக்குடி, தனியூர் ஆகியவைதான் கட்டணம் உயர்த்தப்பட்ட இந்தச் சுங்கச்சாவடிகள். இவற்றில் சாலைகளின் தூரம், தரம், வசதி ஆகியவற்றிற்கேற்ப கட்டண விழுக்காடு மாறிமாறி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சாலைகளைப் பராமரிக்கவே ஆண்டுதோறும் 10 விழுக்காடு வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்கிறார்கள். ஆனால் அப்படி சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, பள்ளிகொண்டாவிலும் வாணியம்பாடியிலும் 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று 2009இல் அறிவித்து, அதற்கேற்ப அதிக கட்டணம் வசூலித்துவருகிறார்களே தவிர, இன்றுவரை அந்த சாலைப் பணி கூட தொடங்கப்படவில்லை.
சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அது நம் கண்ணில் பட்டதேயில்லை. குடிநீர், கழிப்பறை மற்றும் போதிய அளவில் சர்வீஸ் சாலைகள், மின்விளக்குகளும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி எங்கும் கானப்படவில்லை.

சுங்கக் கட்டண உயர்வால், வாகனங்கள் ஏற்றிச்செல்லும் சரக்குகளின் விலை உயரும்; இந்த விலைவாசி உயர்வு வரி என்ற பெயரில் மக்கள் தலையில் இடியாக இறங்கும்! நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் அதலபாதாளத்திற்குச் செல்லும். இதனால்தான் சுங்கச்சாவடிகளை அகற்றியாக வேண்டும் என்பதை சிறப்புக் கொள்கையாகவே கொண்டு போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அதனால் பொய்வழக்ககுகளையும் எதிர்கொண்டுவருகிறோம்.
சென்னை உயர் நீதிமன்றம் பல முறை சுங்கச்சாவடிகளின் நடைமுறைகளைக் கண்டித்திருக்கிறது; திருத்திக்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது. மேலும் 30 செகண்டுகளுக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நிற்கக்கூடாதென்றும் சொல்லியிருக்கிறது. ஆனால், பல சாவடிகளில் மணிக்கணக்காக, பல கி.மீட்டர்கள் தொலைவுக்கு வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. இதில் நீதியரசர்கள், ஆம்புலன்ஸ், காவல் கண்கணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,
பத்திரிகையாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போன்ற விஐபிக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கென்று சுங்கச்சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அப்படி ஒரு தனி வழி இதுவரை எந்தச் சுங்கச்சாவடியிலும் அமைக்கப்படவில்லை.

அப்படியென்றால் நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் லஞ்சம் ஊழலையே மூலதனமாக வைத்து சுங்கச்சாவடிகளை நடத்தும் கார்ப்பொரேட்டுகள் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் துணையில் தனி அக்கிரம சாம்ராஜ்யமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே என்றுதானே அர்த்தம்?

இதைத் தன்னந்தனியாக நின்று தட்டிக்கேட்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. ஆனால் எங்கள் மேல் தேச துரோகம் உள்ளிட்ட பொய் வழக்குகளைப் போடுகிறார்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

இந்தக் கொடூரத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு தான் சுங்கச்சாவடிகளை அகற்றியே தீர வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

போராட்டத்தின்போதெல்லாம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை அணுகி எங்கள் கோரிக்கையை சாத்வீக முறையிலேயே முறையீடாக அளிக்கிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் சோஎர்ந்துவிடமாட்டோம். மக்களுக்காக, அம்மக்களின் பேராதரவுடணேயே இதனைச் செய்து முடிப்போம்.

தங்கள் சொந்த மண்ணிலேயே மக்களின் போக்குவரத்துக்குத் தடை என்பதுதான் இந்தச் சுங்கச்சாவடிகள்!
இவற்றில் கட்டணம் வசூலிப்பது மனித உரிமை மறுப்பு மற்றும் பறிப்பே!
வழிப்பறிகொள்ளை செய்வது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கட்டணத்தையும் இவை உயர்த்துவது கண்டனத்துக்குரியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.