17/09/2020

சென்னை விமான நிலையத்தில் 5 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்...


சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து அமெரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்காக பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்கள் மூலம் பெரும் அளவு போதை மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சரக்கக பிரிவுக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பார்சல்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாண முகவரிக்கு அனுப்புவதற்கு மருந்துவ பொருட்கள் என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டி பார்சல் ஒன்று இருந்தது. அவற்றின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அதை பிரித்து பார்த்தனர்.

அதில் போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளான மெத்தில்பெனிடெட், சோல்பிடெம் மற்றும் குளோனாசெபம் ஆகிய பெயர்களை கொண்ட 3 ஆயிரத்து 440 மாத்திரைகள் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

கொரோனா வைரசுக்கான தலை வலி, காய்ச்சல் மாத்திரைகள் அனுப்பப்படுவதாக நினைத்து சோதனையிடாமல் அதிகாரிகள் விட்டுவிடுவார்கள் என திட்டமிட்டு மாத்திரைகளை ரகசியமாக வெளிநாட்டுக்கு கடத்தும் முயற்சியில் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விமான நிலைய கூரியர் அலுவலகத்தில் போதை மாத்திரைகளை அனுப்ப வந்த மொத்த மருத்துவ விற்பனையாளரான சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் மொத்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.