17/09/2020

குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?



மன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே.

ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு...

முறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச நிறுவனம், கோச்ரே எனும் புத்தகப் பதிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சியை நடத்தியது. இதில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கான காரணம் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது..

இதுகுறித்து, அக்குழுவில் ஒருவரான, குழந்தைகள் மனநல மருத்துவர் சாலி மெர்ரி கூறுகையில், இந்த ஆராய்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏனென்றால், மன அழுத்த நோய் உலகெங்கிலும் பொதுவாகவே உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்த நாடுகளில் மன அழுத்தக் குறைபாடு இரண்டாவது இடத்தையும், வளரும் நாடுகளில் பிரதான இடத்தையும் பெற்றிருந்ததாக அறிவித்தனர்..

இதுகுறித்து, மனநல வியாதியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்து வரும் ஜான் ஹாகின்ஸ் பொது நலப் பள்ளியின் துணை பேராசிரியரான டாமர் மெண்டெல்சன் தெரிவிக்கையில், இந்நோயின் மூலம் இளைஞர்களின் தினசரி மகிழ்ச்சி அடியோடு அழிக்கப்படுகிறது..

மேலும், அவர்களின் பள்ளி மற்றும் சமுதாயத்துடனான உறவையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும்.

இறுதியில், தொடர்ச்சியான நோய்களில் கொண்டு சென்று நிறுத்தும். முன்கூட்டியே எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதனை தடுக்கலாம்.

ஆனால் இம்முறையை குழந்தை களுக்கு செயல்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்...

நாங்கள், பல்வேறு நாடுகளில், ஐந்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட மொத்தம் 14,406 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 53 ஆய்வுகளை ஒன்றிணைத்தோம். இதில், ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டவர்களிடம் எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை..

குழு சார் தடுப்பு நடவடிக்கை, மற்ற மருத்துவ முறைகளை விட அனைத்து நபர்களிடமும் எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது.

பெரும்பாலான திட்டங்கள், புலனறிவு நடத்தை சிகிச்சை சார்ந்தவையாக உள்ளன. மற்றவை, அழுத்தத்தைக் குறைத்தல், சுயதிறன் மற்றும் அதிர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஒழுங்குபடுத்தும் நுணுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.

மன அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள தனி மனிதர்களிடம் உள்ள ஒரு நோயாகும்.

இந்த ஆராய்ச்சி இளைஞர்கள், பெற்றோர்கள், சுகாதார நல அலுவலர்கள், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் நபர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

ஆனால், மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கு அதிக செலவாகும். இதனை பல நாட்டு அரசுகளிடம் விவரித்திருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.